Published : 28 Oct 2023 03:56 PM
Last Updated : 28 Oct 2023 03:56 PM
விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து, கடந்த 1993-ம் ஆண்டு செப். 30-ம் தேதி பிரிந்து புதிய மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் உருவானது. 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், கடந்த 29 ஆண்டுகளில் இம்மாவட்டம் பெற்றது என்ன..? பெறத் தவறியது என்ன..? என்பது குறித்து நமது சிறப்பு பகுதியில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று, திண்டிவனம் நகராட்சி குறித்து.. திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்நகரத்தின் பரப்பளவு 22.33 சதுர கிலோ மீட்டராகும். இந்நகரத்தில் 16,474வீடுகளும் 2,756 வணிக வளாகங்களும் உள்ளன. இந்நகரத்தின் மக்கள் தொகை 2011 ஆண்டில் 72,796 என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் நகரின் தேவைகள் குறித்து நகரவாசிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரிடம் பேசியதிலிருந்து பெறப்பட்ட தகவல் தொகுப்பு இதோ... வரலாற்று சிறப்புமிக்க திண்டிவனம், ஆங்கிலேயர் காலத்திலேயே ஆட்சிப் பணி அதிகாரிகள் ஆட்சி செய்த பகுதியாகும். திண்டிவனம், மதுரை ஆகிய இரு இடங்களில் சார் - ஆட்சியர்கள் அந்தஸ்தில் ஆங்கிலேயர் காலத்தில் நிர்வாகம் நடைபெற்றுள்ளது. திண்டிவனம் நிர்வாகத்தின் கீழ் திருவண்ணாமலை, செய்யாறு உட்பட பல்வேறு பகுதிகள் இருந்தன. ஏறக்குறைய 120 ஆண்டுகளுக்கு முன்பாகவே மாவட்ட நீதிமன்றம் இங்கு இயங்கி வந்ததற்கு கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சென்னையுடன் இணைக்கும் முகத்துவாரமாக திண்டிவனம் இருந்து வருகிறது. சென்னை மாகாணத்தின் முதன் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் திண்டிவனம் தாலுகாவைச் சேர்ந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், மத்திய அமைச்சர்களாக டி.என். வெங்கட்ராமன், அன்புமணி ராமதாஸ், தற்போதைய அதிமுகவின் முதற்கட்ட தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்கள் திண்டிவனத்தைச் சேர்ந்தவர்களே.
திண்டிவனம் நகரத்தில் விவசாயத்தைத் தவிர வேறு தொழில்கள் எதுவும் இல்லை. சாரம் நூற்பாலையும் மூடப்பட்டு விட்டது. விவசாயத்திற்கென அந்த காலத்திலேயே, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் இயங்கி வந்தது. அது பிற்காலத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு அங்கு ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பாக வேளாண் பட்டய படிப்புகள் நடத்தப்பட்டன. தற்போது அதுவும் மூடப்பட்டு விட்டது.
மேல்மருவத்தூர் என்ற சிறிய ஊராட்சி இன்று நகராட்சி அளவுக்கு வளர்ந்துள்ளது. மரக்காணம் ஊராட்சியாக இருந்து பேரூர் பேரூராட்சியாக மாறிவிட்டது. கோட்டக்குப்பம் நகராட்சியாக தரம்உயர்ந்து விட்டது. ஆனால் தேர்வு நிலைநகராட்சியாக தரம் உயர்வு பெற்ற போதிலும்திண்டிவனம் பொது சுகாதார, அடிப்படை வசதிகளின் அடிப்படையில் இன்றைக்கும் ஒரு பேரூராட்சி அளவிலேயே இருக்கிறது. ஒரு அவசரத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ் உள்ளே சென்று வெளியே வர முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்பு மிகுந்த நகரமாக திண்டிவனம் மாறி விட்டது. நகரத்தின் மேற்குப் பகுதியில் சிப்காட், தெற்குப் பகுதியில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, வடக்குப் பகுதியில் ஒரு பல்கலைக்கழகம் வந்து விட்ட போதிலும் நகரம் வளர்ச்சியடையவில்லை.
திண்டிவனம் நகரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டு, ஒரே ஒரு அரசு பெண்கள்மேல்நிலைப் பள்ளியும் ஒரே ஒரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் கொண்டு வரப்பட்டன. ஆனால். இன்று வரையிலும் அப்பள்ளிகள் மிகக்குறுகிய இடத்தில் குறைந்த மாணவர்களை கொண்டே செயல்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் அதிக அளவில் உள்ளன.
மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள திண்டிவனம் அரசு மருத்துவமனையில் இன்று வரை 16 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக நோயாளிகள் இங்கு வரும் போது, உரிய மருத்துவ வசதிகள் இல்லாமல் அவர்கள் உடனடியாக புதுவைக்கோ அல்லது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கோ மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுவது தொடர்கிறது.
நகரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. 10 நாட்கள் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தான் நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பல வீடுகளுக்கு இன்னும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தால் பல தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, அவை முறையாக மூடப்படாமல், அவ்வப்போது வாகனங்கள் சிக்கி தவிப்பதை காண முடிகிறது.
நகரத்தின் மையப் பகுதியை இரண்டாகப் பிரிக்கும் ராஜாங்குளம் என்று அழைக்கப்படும் மிகப்பெரிய குளமும் அதன் வரத்து வாய்க்காலும் தூர்ந்து கிடப்பதை சரி செய்ய நகராட்சியோ அல்லது பொதுப்பணி துறையோ முயற்சி மேற்கொள்ளவில்லை. திண்டிவனம் மேம்பாலம் நகரை 2 ஆக பிரித்து வைத்துள்ளது. முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் மேம்பாலத்தை தன்னிச்சையாக கடக்க முடியாது. இப்பகுதியில் இருந்து அப்பகுதிக்கு செல்லரயில்வே நிர்வாகம் லிப்ட் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
தற்போது இரண்டே இரண்டு யூனிட்ரயில்கள் மட்டும் தாம்பரத்தில் இருந்துவிழுப்புரம் வரை இயக்கப்படுகின்றன. அவை அதிகரிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மின்சார தொடர் வண்டிகள் இயக்கப்பட வேண்டும். இதன் மூலம் விழுப்புரம், திண்டிவனம் நகர மக்கள் பயனடைவர். நகராட்சிக்கு குப்பைக் கிடங்கு இல்லாததால் குப்பை எரிக்கப்பட்டு வருகிறது. பழைய நீதிமன்ற வளாகம் தற்போது வீணாக பயனற்று கிடக்கிறது. இப்படியாக திண்டிவனம் நகரம் பல தேவைகளை எதிர்நோக்கி நிற்கிறது. இதுபோல் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சி, பாதிப்புகள் குறித்து அடுத்தடுத்த நாட்களில்.
முந்தைய அத்தியாயம்: விழுப்புரம் 30 | திண்டிவனத்துக்கு புதிய பேருந்து நிலையம் எப்போது வரும்? - 32 ஆண்டுகளாக தொடரும் பெரும் சிக்கல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT