Published : 28 Oct 2023 06:30 AM
Last Updated : 28 Oct 2023 06:30 AM

கோவை | வாக்கரூ நிறுவனம் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் நற்செயல்களை முன்னெடுத்த பள்ளி மாணவர்கள் கவுரவிப்பு

வாக்கரூ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை ’ நாளிதழ் இணைந்து கோவை சித்தா புதூர் பள்ளியில் நடத்திய நிகழ்வில் சமூக முன்னேற்றத்துக்காக நற்செயல்களை முன்னெடுத்த மாணவர்களை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், இந்து தமிழ் திசை தலைமை இயக்கக அலுவலர் சங்கர் வி.சுப்ரமணியம், பொதுமேலாளர் ராஜ்குமார் கவுரவித்தனர்.

கோவை: ‘வாக்கரூ’ நிறுவனம் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து, சமூக முன்னேற்றத்துக்காக நற்செயல்களை முன்னெடுத்த பள்ளி மாணவர்களை பாராட்டும் வகையில் ‘நற்சிந்தனை - நன்னடை’ எனும் சிறப்புமிகு நிகழ்வை முன்னெடுத்துள்ளது. இதன் ஒருபகுதியாக, நற்செயல்களை செய்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்வு கோவை சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களை கவுரவித்த பிறகு, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் பேசியதாவது:

பள்ளியில் பயிலும்போதே, நாம் என்ன ஆக வேண்டும் என முடிவு செய்தாலும், சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாய்ப்புகள் மாறும். அதற்கு ஏற்றார்போல் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். மாணவர்கள் செல்போனை சிறிது நேரம் பயன்படுத்திவிட்டு ஒதுக்கி வைத்துவிட வேண்டும். தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் நேரம் போவது தெரியாது. சிந்திக்கும் திறன் குறைந்துவிடும். மாணவர்கள் தினமும் நாளிதழ்களை வாசிக்க வேண்டும். பள்ளியில் படிக்கும்போதே ஆங்கிலத்தில் பேசும், எழுதும், வாசிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற இலக்கு நம்மிடம் இருக்க வேண்டும். அந்த இலக்கை எவ்வாறு அடைவது என்று நமக்கு ஏற்ற வழிகாட்டிகளின் வழிகாட்டுதலை பெற வேண்டும். அவர்கள் நாம் செய்யும் சிறு தவறுகளையும் சரி செய்து, நம்மை சரியான பாதைக்கு அழைத்துச் செல்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மாணவர்களை பாராட்டி கவுரவித்த கல்வியாளர் ஆயிஷா இரா.நடராசன் , வாக்கரூ நிறுவனர்
வி.நவுசத் , இயக்குநர் ராஜேஷ் குரியன். படங்கள்: ஜெ.மனோகரன்

ஆண்டுதோறும் நடத்த வேண்டும்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எழுத்தாளரும், கல்வியாளருமான ஆயிஷா இரா.நடராசன் மாணவர்களிடையே பேசியதாவது: மாணவர்களின் நற்சிந்தனை களைப் போற்றும் வகையில் விருது வழங்கி கவுரவிக்கும் வாக்கரூ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். ஜவஹர்லால் நேரு ஆட்சிக்கு வந்த பிறகு, ‘நாட்டில் பல்வேறு இடங்களில் அடிமைகளாக இருந்த குழந்தைகள் அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள்' என்ற கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.

இதன்மூலம், சுமார் 1 கோடி குழந்தைகள் அப்போது மீட்கப்பட்டனர். அந்த குழந்தைகளில் சுமார் ஒரு லட்சம் பேர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் ஒரு குழந்தை, உங்கள் (நேரு) பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுவோம் என தெரிவித்தது.

அதன்பிறகு, நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14-ம் தேதியை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். அன்றைய தினத்தில் இந்த விருதை ஒவ்வொரு ஆண்டும், ஊர்தோறும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என ‘இந்து தமிழ் திசை' நாளிதழை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

வாக்கரூ நிறுவனத்தின் நிறுவனர், மேலாண் இயக்குநர் வி.நவுஷத் பேசும்போது, "மாணவர்கள் சில தீய பழக்கங்களுக்கு ஆளாகி, தவறான பாதையில் செல்கின்றனர் என்ற பொதுவான குற்றச்சாட்டு சொல்லப்பட்டு வருகிறது. அதே மாணவர் சமுதாயம் இன்னொருபுறம் சமுதாயத்துக்கு பயன் உள்ள பல நற்செயல்களை செய்து வருகிறது.

அவ்வாறு நற்செயல்களை செய்துவரும் மாணவர்களை பலரும் அறியும் வகையில், பாராட்டி ஊக்குவிக்க வாக்கரூ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை' நாளிதழுடன் இணைந்து இந்த நிகழ்வை முன்னெடுத்துள்ளது. மாணவர்கள் மனதில் பதியும் நற்சிந்தனைகள் அவர்கள் நல்வழியில் பயணிக்க துணையாகும்” என்றார்.

அனைவரும் பயன்பெற வேண்டும்: வாக்கரூ நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் குரியன் பேசும்போது, ‘‘வாக்கரூ நிறுவனம் காலணி விற்பனையை மட்டுமே நோக்கமாக பார்க்கவில்லை. அதையும் கடந்து, சமுதாயத்தில் அனைவரும் பயனடைய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு, சமுதாயத்தில் நல்ல பழக்கத்தை அனைவரிடமும் ஏற்படுத்தும் நோக்கில், பல நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறது. எந்த நல்லது நடந்தாலும், அது நல்ல சிந்தனையில் இருந்துதான் உதிக்கிறது. மாணவர்களின் எண்ணங்களில் நற்சிந்தனையை விதைக்கும் இந்த முன்னெடுப்பு தொடரும்’’ என்றார்.

‘இந்து தமிழ் திசை' நாளிதழ் தலைமை இயக்கக அலுவலர் சங்கர் வி.சுப்ரமணியம் பேசும்போது, “சொத்து, பணத்தை இழந்தால் மீட்டெடுத்துவிடலாம். உடல்நல பாதிப்புகளையும் சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். ஆனால், ஒழுக்கத்தில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், அது வாழ்க்கையை சீர்குலைக்கும். எனவே, இதுபோன்று சமுதாயத்துக்கு பயனுள்ள பல விஷயங்களை மேற்கொள்ள வாக்கரூ நிறுவனம் உதவியாக இருந்து வருகிறது. அவர்களுக்கு எங்கள் நன்றி.

சமூகத்துக்கு செய்திகளை அளிப்பது மட்டுமல்லாது, சமூகத்தின் மீது அக்கறை கொண்டு, அவர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் ‘இந்து தமிழ் திசை' உறுதியாக உள்ளது”என்றார்.

இந்த நிகழ்ச்சியில், வாக்கரூ நிறுவனத்தின் இயக்குநர் பினு ராஜேந்திரன், சிஎஸ்ஆர் பிரிவு தலைவர் சுமித்ரா பினு, மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் எஸ்.பன்னீர் சோலை, சப்ளை செயின் பிரிவு தலைவர் தேசிகன், ‘இந்து தமிழ் திசை' பொதுமேலாளர் டி.ராஜ்குமார், மாநகராட்சி முதன்மை கல்வி அலுவலர் கே.கே.முருகேசன், பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேம் ஆனந்த், மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வை ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x