Published : 28 Oct 2023 06:30 AM
Last Updated : 28 Oct 2023 06:30 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கோட்டைச் சுவர் கண்டறியப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தொல்லியல் துறையின் மூலம் மே மாதம் முதல் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. அரண்மனைத் திடல் என அழைக்கப்படும் கோட்டையின் மையத்தில் அமைந்துள்ள திடல் பகுதியில் இதுவரை 17-க்கும் மேற்பட்ட இடங்களில் 15 அடி நீள, அகலத்தில் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளில் அகழாய்வு பணிக்கான இயக்குநர் தங்கதுரை தலைமையிலான பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அகழாய்வில் இதுவரை, செங்கல் கட்டுமானம், பானை ஓடுகள், வட்ட வடிவிலான சுவர், கண்ணாடி மணிகள், வட்ட சில்லுகள், பச்சைக் கல் மணிகள், படிகக் கல் மணிகள், தங்க மூக்குத்தி, சுடுமண் விளக்கு, தக்களிகள், எலும்பு முனைக் கருவி, கென்டி மூக்குகள், மெருகேற்றும் கற்கள், பெரில் மணிகள், மனைக் கல், முக்கோண வடிவ செங்கற் கட்டி, இரும்பு பொருட்கள், மஞ்சள் கல் மணி உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.
மேலும், மெருகேற்றப்பட்ட பீங்கான் ஓடுகள், கூரை ஓடுகள், துளையிடப்பட்ட பானை ஓடுகள், மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ரவுலட் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில், 2 கிலோ மீட்டருக்கு, 10 அடி உயரத்துக்கு மண்ணால் கட்டி எழுப்பப்பட்டுள்ள வட்ட வடிவிலான கோட்டையில் கடந்த மாதத்தில் இருந்து அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
அதில், வடபுறத்தில் உள்ள சுவரின் மேல் பகுதியில் 1 மீட்டர் அகலத்துக்கு செங்கல் கட்டுமானம் காணப்பட்டது. இந்தக் கட்டுமானம் குறித்து ஆய்வு செய்வதற்காக கோட்டையின் மேல் பகுதியில் இருந்து அடிப்பகுதி வரை தலா 5 அடி உயரத்துக்கு படிக்கட்டு வடிவில் தோண்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுவரின் மேல் பகுதியில் செங்கல் கட்டுமானம் தென்பட்ட பகுதியில் 3 அடி ஆழம், அகலத்தில் செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டுள்ளது. இதில், பல்வேறு அளவுகளிலான செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தவிர, குறிப்பிட்ட இடைவெளியில் கொத்தளம் இருந்ததற்கான கட்டுமானமும் காணப்பட்டுள்ளது.
இவை சங்க காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கோட்டை சுவரில் ஒருபுறம் படிக்கட்டு வடிவில் வெட்டப்பட்டுள்ளதைப் போன்று மற்றொரு புறமும் தோண்டி அகழாய்வு செய்த பின்னரே முழு விவரம் தெரியும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT