Published : 26 Oct 2023 03:16 PM
Last Updated : 26 Oct 2023 03:16 PM
விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து, கடந்த 1993-ம் ஆண்டு செப். 30-ம் தேதி பிரிந்து புதிய மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் உருவானது. 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், கடந்த 29 ஆண்டுகளில் இம்மாவட்டம் பெற்றது என்ன..? பெறத் தவறியது என்ன..? என்பது குறித்து நமது சிறப்பு பகுதியில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று, நீண்ட காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் திண்டிவனம் நகரின் புதிய பேருந்து நிலைய சிக்கல் தொடர்பாக ஆராய்கிறோம்.
திண்டிவனத்தில் 1971-ம் ஆண்டில் இந்திரா காந்தி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் திண்டிவனத்தின் வளர்ச்சி மற்றும் போக்குவரத்து பெருக்கத்தின் காரணமாக இந்த பேருந்து நிலையம் பயன்பாடின்றி போனது. அதை தற்போது இடித்து, வணிக வளாகம் கட்ட நகராட்சி முடிவெடுத்து வருகிறது. பேருந்து நிலையம் என்ற ஒன்று இல்லாமலேயே, மேம்பாலத்தின் அடியில் நின்றபடி பேருந்துகளில் ஏறி வரும் துர்பாக்கிய நிலையை திண்டிவனம் நகரவாசிகள் நீண்ட காலமாக அனுபவித்து வருகின்றனர். 1991-ம் ஆண்டு, ‘திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்’ என அப்போதைய தென்னாற்காடு மாவட்ட ஆட்சியர் கரியாலி அறிவித்தார்.
அந்த அறிவிப்போடு திண்டிவனம் பேருந்து நிலைய பணிகள் நின்றுபோயின. 2001-ம் ஆண்டு அப்போதைய திண்டிவனம் எம்எல்ஏவும் அமைச்சருமான சி.வி.சண்முகம் வக்ஃபு வாரிய இடத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்க முயன்றார்.அதற்கு அப்போதைய அதிமுக நகர்மன்றத் தலைவர் ஹீராசந்த் எதிர்ப்பு தெரிவித்தார். அதை தொடர்ந்து முருங்கப்பாக்கம் ஏரி அருகே நகராட்சிக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை வாங்கி, அதை புதிய பேருந்து நிலையம் கட்ட பயன்படுத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதன்பின், கடந்த 2005-ம் ஆண்டு வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க முன்பணமாக 6 லட்ச ரூபாய். மாதம் 60 ஆயிரம் ரூபாய் வாடகை, ஆண்டுக்கு 5 சதவீதம் வாடகையை உயர்த்தி கொள்ளலாம் என அப்போது அதிமுக நிர்வகித்து வந்த திண்டிவனம் நகராட்சி சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் 30-12-2005 அன்று, தற்காலிக பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 33 நாட்கள் இயங்கின. பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால், தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதையடுத்து, திண்டிவனம் நகராட்சியின் அதிகாரத்துக்கு வந்த திமுக, ‘மாத மாதம் 60 ஆயிரம் ரூபாய் வாடகை தர முடியாது’ என்று கூறி, வேறு இடம் பார்க்கத் தொடங்கியது. ‘வேறு இடத்தில் பேருந்து நிலையம் கட்டப்படும்’ என நகராட்சி சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அறிவிப்போடு சரி, அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. இதற்கிடையே, திண்டிவனம் நகராட்சி பேருந்து நிலையம் அமைக்க முடிவெடுத்த இடம், நீர்பிடிப்பு பகுதி என அதிமுகவினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.பின்னர் மண் பரிசோதனை செய்து, அந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கலாம் என உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
திண்டிவனம் ஏரிப்பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்ட நிலையில் திண்டிவனம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பிஎஸ்என்எல் டவர் அருகே புதிய நகராட்சி கட்டிடம், அம்மா உணவகம், சாலைகள், குடிநீர் திட்ட பணிகள் முடிந்த நிலையில் 12.10.2009 அன்று, வெளியிட்ட அரசாணைப்படி திண்டிவனம் ஏரிப்பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
ஆனாலும் பல்வேறு காரணங்களால் பேருந்து நிலையம் அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகத்தின் முயற்சியால், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் பங்களிப்புடன் ரூ.20 கோடி செலவில் பேருந்து நிலையம் அமைக்க கொள்கை அளவில் முடிவெடுத்து, அனுமதி அளித்து அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது.
ஆனாலும் பணிகள் நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு நகராட்சி சார்பில் பொதுமக்களிடம் இப்பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கலாமா என்று கருத்து கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்போதைய நகராட்சி தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் சார்பில், 12.10.2009 ல் நகராட்சி வெளியிட்ட அரசாணையில், ‘திண்டிவனம் ஏரி பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க கவனம் செலுத்தப்பட்டு, ஒரு ஆண்டுக்குள் கட்டி முடித்து முதல்வர் ஜெயலலிதா பெயரில் திறக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் பணிகள் நடக்கவில்லை. அதன்பிறகு, 2011-ம் ஆண்டு சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய திண்டிவனம் எம்எல்ஏ ஹரிதாஸ், நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் பற்றி பேசி, உடனே இது அமைக்கப்படவேண்டும் என்று கூறினார். அதன் பிறகும் அதே இழுபறி நிலை நீடித்தது.
இந்த தொடர் இழுபறியால், திண்டிவனம் நகர மக்கள் வெறுப்பின் உச்சிக்கே சென்று விட்டனர். “மாறி மாறி ஆட்சிக்கு வரும் இரு கட்சிகளும் இந்த விவகாரத்தில் இழுத்தடிக்கின்றன. மற்ற ஊர்களுக்கெல்லாம் புதிய பேருந்து நிலையங்கள் திட்டமிட்ட காலத்தில் உடனே வருகின்றன. தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் இந்த ஊரில் இருக்கிறார். அப்படி இருந்தும் திண்டிவனத்துக்கு மட்டும் ஏன் இந்த இழுத்தடிப்பு” என்று கேட்காதவர்கள் இல்லை.
இந்த சூழ்நிலையில், கடந்த ஜனவரி மாதம் திண்டிவனம்- சென்னை சாலையில் திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணியை அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அமைச்சர், “ரூ. 20 கோடி மதிப்பில் 6 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய பேருந்து நிலையத்தில் 3,110 சதுர மீட்டர் பரப்பளவில் பேருந்து நிலைய கட்டிடம் அமையும். 3,338 சதுர மீட்டர் பரப்பளவில் பேருந்து நிறுத்தங்கள், 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், 300 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டண கழிப்பறைகள் மற்றும் இலவச சிறுநீர் கழிப்பிடம், 300 சதுர மீட்டர் பரப்பளவில் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி அமைக்கப்பட உள்ளது. மேலும், எதிர்காலத்தில் இந்த பேருந்து நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக ஒரு ஏக்கர் காலியிடம் விடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். அதன்படி, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே, இவ்விவகாரத்தை குறிப்பிட்டு பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “தற்போது பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் இடம் ஏரிக்குள் இருக்கிறது. இது சம்பந்தமாக விழுப்புரம் ஆட்சியருக்கு கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதினேன், அதற்கு ஆட்சியர் தற்போதுதான் கடிதம் கிடைத்துள்ளது; ஆய்வு செய்கிறோம் என்று செப்டம்பர் மாதம் பதில் கடிதம் எழுதுகிறார். பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள உத்தரவின்படி, நீர்நிலைகளில் கட்டிடம் கட்டக் கூடாது. இதை ஆட்சியர் எவ்வாறு அனுமதிக்கிறார்?” என்று குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பாமக தொண்டர்களும் ஏரிக்குள் பேருந்து நிலையம் கட்டக் கூடாது என ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து திண்டிவனம் நகர் வாழ் மக்களிடம் கேட்டபோது, “32 ஆண்டு களுக்கும் மேலாக திண்டிவனம் புதிய பேருந்து நிலைய விவகாரம் தொடர்கிறது. இப்போது கட்டப்படும் பேருந்து நிலைய பணிகள் முழுமை பெறவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இப்பேருந்து நிலையம் புறவழிச்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகளின் வசதிக்காக விட்டலாபுரம் சாலையில் உள்ள சுரங்கப் பாதையை சற்று அகலப்படுத்தினால் வசதியாக இருக்கும். இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்”என்கின்றனர்.
‘சரி, ஏரி பகுதிக்குள் பேருந்து நிலையம் வந்தால், மழை காலத்தில் சிக்கல் தானே!’ என்று கேட்டால், “விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அப்படித்தான் வந்தது. சென்னையில் பல அரசுக் கட்டிடங்கள் அப்படித்தான் வந்தன. நகர விரிவாக்கத்தில் இதெல்லாம் சகஜம்” என்று நகரில் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். அவர்கள் குறிப்பிடும் விழுப்புரம் பேருந்து நிலையத்திலும், பெரு மழை காலங்களில் சிக்கல்கள் ஏற்படவே செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சி, பாதிப்புகள் குறித்து அடுத்தடுத்த நாட்களில்..
முந்தைய அத்தியாயம்: தென்பெண்ணையாற்று நீரும், விழுப்புரம் மாவட்டத்தின் தேவையும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT