Published : 25 Oct 2023 01:01 PM
Last Updated : 25 Oct 2023 01:01 PM

இலங்கையின் சாரண மாணவர்கள் 3 பேர் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை கடலில் நீந்திக் கடந்து சாதனை

ராமேசுவரம்: இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களான டயன் பிரிட்டோ, டயன் ஸ்ரித், மற்றும் கெல்வின் கிசோ ஆகிய 3 பேரும் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலான பாக் நீரிணை கடலை 10 மணி நேரத்தில் நேற்று நீந்தி கடந்தனர்.

இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், வல்வெட்டித் துறையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.எஸ். குமார் ஆனந்தன். நீச்சல் வீரரான இவர் 1971-ம் ஆண்டு தலைமன்னாரிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து, மீண்டும் தலைமன்னாருக்கு நீந்தி முதன்முறையாக சாதனை படைத்தார்.

28.03.2019-ல் தேனியைச் சேர்ந்த ஆர்.ஜெய் ஜஸ்வந்த் தனது 10 வயதிலும், 20.03.2022 அன்று மும்பையைச் சேர்ந்த ஜியா ராய் (13) என்ற ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியும், 13.04.2023 அன்று சென்னையை சேர்ந்த ராம் நிவாஸ் (29) என்ற மாற்றுத் திறனாளியும் பாக் நீரிணையை நீந்தி கடந்துள்ளனர். இது தவிர சிலர் குழுவாகவோ ரிலே மற்றும் மாரத்தான் முறையிலும் பாக் நீரிணையை நீந்தி கடந்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த புனித மைக்கேல் பாடசாலை மற்றும் புனித மைக்கேல் கல்லூரியின் சாரணர் இயக்க மாணவர்களான டயன் பிரிட்டோ (15), டயன்ஸ்ரித் (19), மற்றும் கெல்வின் கிசோ (22)ஆகிய 3 பேரும், தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை நீந்திச் செல்ல இந்தியா-இலங்கை வெளியுறவுத் துறை, பாதுகாப்புத்துறை அமைச்சகங்களிடம் அனுமதி கோரியிருந்தனர்.

இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில், தலைமன்னாரில் இருந்து 3 படகுகள் மூலம் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சனிக்கிழமை இரவு வந்தடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் தனுஷ்கோடி பகுதியிலிருந்து நீந்த ஆரம்பித்த டயன்ஸ்ரித், டயன்பிரிட்டோ மற்றும் கெல்வின் கிசோ ஆகிய 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை பகல் 1.00 மணியளவில் தலைமன்னாரை சென்றடைந்தனர்.

சுமார் 30 கி.மீ. பாக் நீரிணையை நீந்திக் கடக்க 10 மணி நேரம் எடுத்துக் கொண்டனர். பின்னர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தலைமன்னாரில் வரவேற்பு நிகழ்ச்சியும், நேற்று மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் பாராட்டு நிகழ்ச்சியும் நடந்தது. அக்கல்லூரியின் 150-வது ஆண்டு நிறைவையொட்டியும்,பாலிதீனுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவும் மாணவர்கள் 3 பேரும் இச்சாதனையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x