Last Updated : 25 Oct, 2023 04:39 PM

 

Published : 25 Oct 2023 04:39 PM
Last Updated : 25 Oct 2023 04:39 PM

விழுப்புரம் 30 | தென்பெண்ணையாற்று நீரும், விழுப்புரம் மாவட்டத்தின் தேவையும்!

விழுப்புரம் அருகே எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் தென் பெண்ணையாற்று நீர். (கோப்புப் படம்)

விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம், கடந்த செப். 30-ம் தேதி, 30-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. கடந்த 29 ஆண்டுகளில், விழுப்புரம் மாவட்டம் பெற்ற வளர்ச்சி குறித்தும், அவற்றின் தேவைகள் குறித்தும் நமது சிறப்பு பகுதியில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று, இம்மாவட்டத்தின் முக்கிய நதியாக விளங்கும் தென்பெண்ணையாறு குறித்து அலசுகிறோம்.. ‘நதிமூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது’ என்று கூறுவதுண்டு. இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் சூழலில் நதியின் மூலத்தையும், நதியின் பாதையையும் கூர்ந்து கவனிக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

‘காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் | கண்டதோர் வையை பொருனைநதி - என | மேவிய யாறு பலவோடத் - திரு | மேனி செழித்த தமிழ்நாடு’ என்றான் பாரதி. வட தமிழ்நாட்டில், ‘வெண்ணை உருகும் முன் பெண்ணை உருகும்’ என்ற சொலவடை உண்டு. இந்த ஆற்றின் வெகு வேகமான நீர்வரத்தால், மணல் நெகிழ்ந்து உருகியது போல் செல்வதை சிறப்பித்துச் சொல்ல, இவ்வாறு கூறுவதுண்டு. நாம் இந்த ஆற்றை, தமிழகத்தில் ‘தென்பெண்ணை’ என அழைத்தாலும் கர்நாடகத்தில் இதை ‘தட்சன பினாக்கினி’ என்று அழைக்கிறார்கள்.

கர்நாடக மாநிலம், பெங்களூரூவில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள சிக்பலாபூர் மாவட்டத்தில் இருக்கும்நந்திமலை அல்லது நந்திதுர்க் அல்லது நந்திபெட்டா என அழைக்கப்படும் இடத்தில் இருந்து இந்த நதி உருவாகி, பெருக்கெடுத்து வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 4,851 அடி உயரத்தில் மலையின் உச்சியில் உற்பத்தியாகி, ஊற்றுகள் இணைந்து, துணை ஆறுகள் உதவியுடன் பெங்களூரு நோக்கி பயணிக்கிறது.

நந்தி மலையில் இருந்து தன் பயணத்தை தொடங்கிய தென்பெண்ணை ஆற்று நீர், 35 கி.மீ தொலைவில் கர்நாடத்தில் தத்தனூர் என்ற இடத்தில் மின் மோட்டார் மூலம் ராட்சத குழாய்களில் குடிநீர் உறிஞ்சப்பட்டு, அங்கிருந்து 130 ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த நீர் பெங்களூரு மக்களின் குடிநீராக பயன்படுத்தப்பட்ட பின்பு, அங்குள்ள கழிவுநீரும் தென்பெண்ணையாற்றில் கலக்கப்படுகிறது. இப்படியாக தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள் நுழைகிறது. பெண்ணையாறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்தோடி வங்கக் கடலில் கலக்கிறது.

தமிழகத்தில், இந்த ஆற்றை நம்பி, சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. கர்நாடக மாநிலத்துக்குள் 112 கி.மீ மட்டுமே ஓடும் தென்பெண்ணை ஆறு, தமிழகத்துக்குள் சுமார் 320 கி.மீ பயணிக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள் ஆர்பாட்டமாய் நுழையும் தெண்பெண்ணை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் சற்றே வேகத்தை தணித்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது. பின்னர் அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர்அணைக்கு வந்து, அங்கு தேக்கிவைக்கப்பட்டு, அங்கிருந்து திருக்கோவிலூர், எல்லீஸ் சத்திரம், தளவானூர், மேல்குமாரமங்கலம், சொர்ணாவூர் உள்ளிட்ட அணைக்கட்டுகளில் தேக்கி வைக்கப்பட்டு பாசன தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. சாத்தனூருக்கு வருவது தொடங்கி சொர்ணாவூர் வரையில் இது விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு வளம் சேர்க்கிறது.

தண்ணீர் வரத்து இல்லாத நிலையில், விழுப்புரம் அருகே பேரங்கியூரில்
மணல் மேடாய் காட்சி அளிக்கும் தென்பெண்ணையாறு.

விழுப்புரம் மாவட்டத்தில் எல்லீஸ்சத்திரம், தளவானூர் தடுப்பணைகள் சேதமடைந்தாலும், இந்த தடுப்பணைகளின் வழியே துணை ஆறுகளுக்கு செல்ல வேண்டிய தென்பெண்ணையாற்று நீர் இன்று வரையிலும் சென்று கொண்டுதான் உள்ளது. சாத்தனூர் அணையின் உபரி நீர் திறந்து விடப்பட்டு மலட்டாறு வழியாக பூவரசங்குப்பம், மேட்டுப்பாளையம், திருப்பாச்சனூர், வேலியம்பாக்கம், பில்லூர், அரசமங்கலம் வழியாக சென்று அப்பகுதி பாசனத் தேவையை பூர்த்தி செய்கிறது.

அதைத் தொடர்ந்து பேரங்கியூர் - பிடாகம் இடையே 740 அடி நீளத்துக்கு கட்டப்பட்ட தரைமட்ட தடுப்பு அணை மூலம் 7 கி.மீ தொலைவுக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதால், விழுப்புரம் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் உள்ளது. இப்படியாக பாசன தேவையைத் தாண்டி குடிநீர் தேவையையும் பெண்ணையாறு பூர்த்தி செய்கிறது.

பெரும் வெள்ள காலத்தில் தென்பெண்ணையாறு விழுப்புரம் மாவட்டத்தில் பெருக்கெடுத்து ஓடுவதும், மற்ற காலங்களில் மணல் நதியாய் மாறிக் கிடப்பதும் நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. பாசனம், குடிநீர் என இரு தேவைகளுக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் தற்போதும் பற்றாக்குறை நிலவுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரே அணை வீடூர் அணை மட்டும்தான். தென்பெண்ணையாற்றில் சாத்தியமுள்ள இடங்களில் மேலும் சில தடுப்பணைகளை கட்டுவதும், சேதமடைந்த தடுப்பணைகளை சீர்படுத்துவதும் மிக அவசியமானது. இதைச் செய்தவன் மூலம் வங்க கடலில் சென்று வீணே கலக்கும் பெண்ணையாற்று நீரை சேமித்து, மாவட்டத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யலாம்.

“இப்படியான தடுப்பணைகள் இல்லாததால், கடந்த 2021-ம் ஆண்டு மட்டும், பெருமழையின் போது இப்பகுதியில் 130 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்தது” என்று பொதுப்பணித்துறையினரே புள்ளி விவரத்துடன் தெரிவிக்கின்றனர்.

இந்த நெருக்கடியான சூழலுக்கு நடுவில், காவிரி நீரைபோல தென்பெண்ணையாற்று நீரையும் தங்கள் மாநிலத்தின் வேறு இடங்களுக்கு திருப்பி விட கர்நாடக அரசு தென்பெண்ணையாற்றின் துணைநதியான மார்கண்டேய நதியில் அணையைக் கட்டி முடித்திருக்கிறது. மார்கண்டேய நதியில் பாயும் தண்ணீரை மொத்தமாக சேமித்து வைக்க, யார்கோள் பள்ள முகட்டில் 430 மீட்டர் நீளம் 162 அடி உயரத்தில் பெரிய அணை கட்டப்பட்டிருக்கிறது.

இந்த அணையால், வருங்காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கும் நீர்வராத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்,தென்பெண்ணை நீரை நம்பியுள்ள தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 6 மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இப்பிரச்சினையைத் தீர்க்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2012, 2013-ம்ஆண்டுகளில் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில், “தென்பெண்ணை ஆற்றில் தங்களுடைய ஒப்புதல் இல்லாமல், கட்டுமானப் பணிகள், ஆய்வுகள் உட்பட எவ்வித பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது.

தமிழகத்திலும், தென்பெண்ணை ஓடுவதால் கர்நாடக அரசு அந்த ஆற்றுக்கு முழு உரிமை கோர முடியாது. இந்த விவகாரத்தில், தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார். தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் யார்கோள் அணை விவகாரத்தில் கவனம் செலுத்தப்படவில்லை. இந்தச் சூழலில், 2019-ம் ஆண்டு நவம்பர் 14-ம்தேதி இவ்வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஏற்பாட்டில், கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இப்பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதில், தமிழகம் சார்பில் பங்கேற்றஅதிகாரிகள் யார்கோள் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பேசிய, கர்நாடக அரசு அதிகாரிகள், கர்நாடகமாநிலத்தில் உள்ள கோலார், பங்காருபேட்டை, மாலூர் உட்பட 45-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு குடிநீர் விநியோகிக்க இந்த அணை கட்டப்படுவதாக தெரிவித்தனர். அதன்பிறகு, கரோனா பொதுமுடக்கம் நிலவியதால், யார்கோள் அணை தொடர்பான விவாதமும் முடங்கியது.

தொடர்ந்து அவர்கள் தரப்பில், இதற்கான முன்னெடுப்புகள் வரும் பட்சத்தில் நமது விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இதுபோல் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சி, பாதிப்புகள் குறித்து அடுத்தடுத்த நாட்களில்..

முந்தைய அத்தியாயம்: விழுப்புரம் 30 | பாக்கம் - கெங்கவரம் பகுதி வனவிலங்கு சரணாலயமாக மாறுமா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x