Published : 25 Oct 2023 05:49 AM
Last Updated : 25 Oct 2023 05:49 AM
சென்னை: விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்று அவர்களது கல்வியை தொடங்கி வைத்தனர்.
நவராத்திரி பண்டிகையின் 10-ம்நாளான விஜயதசமி நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் கல்வி,கலைகள், விளையாட்டுப் பயிற்சிகள் போன்றவற்றை தொடங்குவது விசேஷமாக கருதப்படுகிறது. அந்தவகையில், குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைக்கும் ‘வித்யாரம்பம்’ எனும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி, விஜயதசமி நாளான நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் நடந்தது. பரப்பி வைக்கப்பட்டுள்ள நெல்லில் ‘அ’ என்று எழுதி, குழந்தைகள் தங்கள் கல்வியை தொடங்கினர்.
தஞ்சை மாவட்டம் கூத்தனூரில் உள்ள கல்விக் கடவுள் சரஸ்வதி கோயிலில் பால வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுக்கு நெல்லில் எழுத வைத்து,கல்வியை தொடங்கினர். அதேபோல, கோவை, திருப்பூர், உதகைஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஐயப்பன் கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னையில் பிரசித்தி பெற்ற மகாலிங்கபுரம் ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில், நங்கநல்லூர் குருவாயூரப்பன் கோயில், ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன்கோயில், அம்பத்தூர் ஐயப்பன் கோயில், வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
2 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுடன் ஏராளமான பெற்றோர், அதிகாலை முதலே கோயிலுக்கு வரத் தொடங்கினர். தாங்கள் கொண்டு வந்திருந்த நெல், அரிசியை தாம்பாளத்தில் வைத்து அனைவரும் வரிசையாக அமர்ந்தனர். அதைத் தொடர்ந்து, அர்ச்சகர்கள் கூறியபடி, குழந்தைகளின் நாக்கில் ‘ஓம் ஹரி கணபதயே நமஹ’ என்னும் மந்திரத்தை பெற்றோர் எழுதினர். பின்னர், குழந்தைகளின் கையை பிடித்து, நெல், அரிசியில் ‘அ’ என்று எழுத வைத்தனர். சில இடங்களில் அர்ச்சகர்களும் குழந்தைகளின் கையை பிடித்து எழுத வைத்தனர். இது வித்தியாசமான அனுபவமாக இருந்ததால், குழந்தைகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில குழந்தைகள் தாங்களாகவே அரிசியில் எழுதியும், கிறுக்கியும் மகிழ்ந்தது காண்போர் ரசிக்கும்படி இருந்தது.
வித்யாரம்பம் நிகழ்வின் நிறைவாக, குழந்தைகளுக்கு ஸ்லேட்,பல்பம், புத்தக பைகள் வழங்கப்பட்டன. விஜயதசமியை முன்னிட்டு, தொடக்க பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் சிறப்பு மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT