Published : 21 Oct 2023 05:19 PM
Last Updated : 21 Oct 2023 05:19 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கடந்த செப். 30-ம் தேதி, 30-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. கடந்த 29 ஆண்டுகளில், விழுப்புரம் மாவட்டத் தின் வளர்ச்சிகள் குறித்தும், அவற்றின்தேவைகள் குறித்தும் தொடர்ச்சியாக நமதுசிறப்பு பகுதியில் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று, செஞ்சி அருகேயுள்ள பாக்கம் - கெங்கவரம் வனப்பகுதியை ஆராய்வோம்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பாக்கம் - கெங்கவரம் வனப்பகுதி 1897-ம் ஆண்டு காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது. இக்காடு கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். 7 ஆயிரம்ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இக்காட்டில் சிறுத்தை, கரடி, மான், அரியவகை சிலந்திகள், அழிந்து வரும் நிலையில் உள்ள பாம்புகள், பெரிய அணில், லங்கூர் குரங்குகள், எறும்பு தின்னி, தங்கப்பல்லி, ‘புல்புல் ரேசர் ஸ்னேக்’ என்கிற அரியவகை பாம்பு, 15 குடும்பங்களைச் சேர்ந்த 56 வகை பாம்புகள், தவளைகள்,தேரைகள் உள்ளன என்று உள்நாட்டு பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது.
இந்த அமைப்பைச் சேர்ந்த ஆர் ராமன், எஸ். விமல்ராஜ், கிருஷ்ணகுமார், டாக்டர் பாலசந்தர் ஆகியோருடன் பிரெஞ்ச் இன்ஸ்டியூட் இணைந்து செஞ்சி அருகே பாக்கம் மலைகளில் 2019-ம் ஆண்டு வன உயிரினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அப்போது அரியவகை சிலந்தி மற்றும் மலை பல்லி, சாம்பல் நிற அணில் என்ற உயிரினங்களும், மலை பூவரசு, சாணி வீரன் மரம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 21 அரிய வகை செடிகள், மரங்கள் ஆகியவற்றோடு பச்சை சட்டித் தலைபாம்பு என்கிற அரியவகை பாம்பு உள்ளிட்டவைகளை கண்டறிந்துள்ளனர்.
“இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட அரியவகை சிலந்திகள் (Peacock Parachute Spider or Gooty Tarantula ) மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் என சொல்லப்படுவதுண்டு. தற்போது கிழக்கு தொடர்ச்சி மலைகளிலும் இந்த சிலந்திகள் வாழ்கின்றன என்பதை கண்டறிந்தோம். தற்போது கண்டறியப்பட்ட சிலந்தி பூச்சி அழியும் நிலையில் உள்ள உயிரினமாகும்.
பாறைகளுக்கு அடியிலும், பாறை இடுக்கு களிலும் இந்த உயிரி வாழும். ஆந்திர மாநிலம் நந்தியாலு, கிட்டலூர் இடைப்பட்ட காடுகளில் பூட்டி என்ற இடத்தில் 1899-ம்ஆண்டு இந்த வகை சிலந்தியை ரெஜினால்டு தலைமையிலான குழுவினர் கண்டறிந்தனர். சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் இதை அபூர்வமான உயிரினம் என்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த சிலந்தி இங்கு மட்டும்தான் தற்போது உள்ளது.
இந்த வகை சிலந்திகள் இயற்கையை பாதுகாக்கிறது. சிலந்திகளை இந்தியா மற்றும் உலக நாடுகளில் வீட்டில் வளர்க்கின்றனர். அபூர்வமான உயிரினங்களை அரசு பாதுகாக்க வேண்டும். இப்பகுதியை வன விலங்கு சரணாலயமாக அறிவிக்க வேண்டும்” என்று இப்பகுதியை ஆய்வு செய்த குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வனத்துறையினரிடம் கேட்டபோது,“பாக்கம் - கெங்கவரம் பகுதியில் வன விலங்கு சரணாலயம் அமைப்பதுகுறித்து அரசுக்கு ஏற்கனவே திட்டமதிப்பீடு அனுப்பட்டது. தற்போதுசில தொழில்நுட்ப தகவல்களை அரசு கேட்டுள்ளது. அவைகளும்அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பாக்கம் - கெங்கவரம் காப்புக்காடு பகுதி வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்க வாய்ப்புள்ளது.
இங்கிருக்கும் நல்ல உயிரியல் சூழல் தன்மையை பேணும் வகையில், தற்போது பாக்கம் மலைப்பகுதியில் உள்ள வனதுர்க்கையம்மன் கோயிலுக்கு பிளாஸ்டிக் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் அக்கோயிலில் யாரும் தங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு, சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கின்றனர். தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சி, பாதிப்புகள் குறித்து அடுத்தடுத்த நாட்களில்..
முந்தைய அத்தியாயம்: விழுப்புரம் 30 | மரக்காணம் மீனவப் பகுதி சிக்கலும் எதிர்பார்ப்புகளும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT