Published : 19 Oct 2023 05:14 PM
Last Updated : 19 Oct 2023 05:14 PM
கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய மாநகரங்களில் முதன்மையானதாக கோவை மாநகராட்சி உள்ளது. இங்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில், பல்வேறு திட்டங்களின்கீழ் நிதி ஒதுக்கப்பட்டு, மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் மூலம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வ சிந்தாமணி குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட 9 குளங்களின் கரைகள் பலப்படுத்தப்பட்டன. அங்கு பொழுதுபோக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அதேபோல, ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் மாதிரி சாலை திட்டம், ரேஸ்கோர்ஸ் நடைபாதை பகுதியில் மாதிரிச் சாலை திட்டம், மீடியா டவர் உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
மாநகரில் வஉசி மைதானம் பகுதியில் 40-க்கும்மேற்பட்ட ‘கையேந்தி பவன்கள்’ எனப்படும் தள்ளுவண்டி உணவகங்கள் உள்ளன. தினசரி ஏராளமானோர் இந்த உணவகங்களை பயன்படுத்துகின்றனர். உணவகங்களை முறைப்படுத்தி, சுகாதாரமான முறையில் உணவுகள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்த தேவையான திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் ஆலோசித்து வந்தனர். அதனடிப்படையில், மத்திய சுகாதாரத்துறையின் சார்பில், தேசிய நகர்ப்புற சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் இங்குள்ள தள்ளுவண்டி உணவகங்களை முறைப்படுத்தி ‘உணவக வீதி’ (ஃபுட் ஸ்ட்ரீட்) அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது,‘‘தேசிய நகர்ப்புற சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், சுகாதார முறையில் மக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 3 நகரங்கள் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டன. அதில் கோவை மாநகராட்சியும் ஒன்று. இந்தத் திட்டத்தின்படி, ரூ.1 கோடி மதிப்பில், வஉசி மைதானம் அருகேயுள்ள வீதியில் ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவுகள் விற்பனை செய்யும் வகையில், அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ‘உணவக வீதி’ அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 7-ம் தேதி தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த உணவக வீதி திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்’’ என்றனர். மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும் போது,‘‘இத்திட்டத்தின்படி உணவக வீதி அமையும் பகுதியில் சாலை சீரமைத்தல், கடைகள் அமைத்தல், வாடிக்கையாளர்கள் அமரும் இடவசதி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். சுகாதாரமான முறையில் உணவுகளை தயாரித்துவாடிக்கையாளர்களுக்கு அளித்தல், உணவுப் பாதுகாப்புத்துறையினரின் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்கப்படும்.
இங்கு கடைகள் சீராக கட்டப்பட்டு உரியவர்களுக்கு ஒதுக்கப்படும். சுகாதாரத்தை முறையாக பின்பற்றுதலே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். தெருவிளக்குகள் அமைத்தல், திடக்கழிவு சேகரிப்பு மையம் அமைத்தல், நடைபாதை அமைத்தல், கழிப்பிட வசதி ஏற்படுத்துதல் போன்ற கட்டமைப்புகள் இங்கு ஏற்படுத்தப்படும். இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT