Published : 18 Oct 2023 07:10 PM
Last Updated : 18 Oct 2023 07:10 PM
விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம், கடந்த 30-ம் தேதி 30-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. கடந்த 29 ஆண்டுகளில், விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன? அவற்றின் தற்போதைய நிலை என்ன? இன்னும் என்னென்ன செயல்படுத்த வேண்டும்? மாவட்டத்தின் தற்போதைய சமூக, பொருளாதார வளர்ச்சி எவ்வாறு உள்ளது? என்பதை தொடர்ச்சியாக நமது சிறப்பு பகுதியில் வெளியிட்டு வருகிறோம்.
அந்த வகையில் இன்று, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் பூங்கா பணிகள் குறித்து.. விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் ஆட்சியரகம், மாவட்ட காவல் தலைமையகம், டிஐஜி அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகம், தீயணைப்புத் துறை, வனத்துறை, வேலைவாய்ப்பு அலுவலகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள், மாவட்ட மைய நூலகம், அரசு அதிகாரிகளின் உயர்நிலை குடியிருப்புகள், ஊழியர்களின் குடியிருப்புகள், உள்விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இத்தனை அழகாக திட்டமிட்டு உருவாக்கிய பெருந்திட்ட வளாகம் புதிய பேருந்து நிலையத்தின் அருகிலேயே உள்ளது. இதன் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் பூங்கா ஒன்று அமைக்க வேண்டும் என்ற கடந்த ஆட்சியில் மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ‘அம்மா பூங்கா’ என அப்போது அதற்கு பெயரும் வைக்கப்பட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு, அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த (தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்) இரா.லட்சுமணன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, இதற்காக முதல் கட்டமாக ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கினார். இரண்டாம் கட்டமாக ரூ.80 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி தொடங்கிய பூங்கா அமைக்கும் பணி. தற்போது வரை நிறைவடையவில்லை. இதற்கு, பல்வேறு அரசியல் காரணங்கள் அடுக்கப்படுகின்றன.
தற்போது வரையில் இந்த பூங்காவுக்காக, மாவட்ட மைய நூலகத்துக்கு எதிரே 7.5 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. பூங்காவைச் சுற்றி 6 அடி உயரத்தில் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு, கிரில் கம்பிகள் பதிக்கப்பட்டு, இரண்டு இடங்களில் பொதுமக்கள் வந்து செல்ல நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவின் உள்புறமாக சுமார் 900 மீட்டர் தொலைவுக்கு 5 அடி அகலத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக, நடைபாதையில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது.
இன்னும், பூங்காவின் உள்புறம் காலியாக உள்ள இடங்களில் பூச்செடிகள் வைத்து புல்தரைகள் அமைக்கப்பட வேண்டும். சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், நீர்வீழ்ச்சி, அழகு சாதனங்கள் உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகள் நடைபெற வேண்டும். 2014-ம் ஆண்டு இந்த திட்டப்பணிக்கான ஒதுக்கீடு ரூ. 2 கோடியாக இருந்தது. பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கான செலவினங்களும் அதிகரித்து வருகின்றன.
பூங்கா அமைக்கும் பணி தாமதமாகி வருவதால், தற்போது நடைபயிற்சி மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட நடைபாதையை மக்கள் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். காலை, மாலை நேரங்களில் பெண்கள், முதியவர்கள் உள்பட ஏராளமானோர் நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர். மாவட்ட நிர்வாகமும் அதை கண்டு கொள்வதில்லை.
இந்த பெருந்திட்ட வளாகத்துக்கு அப்போது ‘அம்மா பூங்கா’ என பெயரிட்டு பணிகளைத் தொடங்கினர். இதற்கிடையே, கடந்த ஆட்சியில் விழுப்புரம் நகராட்சி குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிதி ஒதுக்கி அங்கு நடைபாதையுடன் பூங்கா ஒன்றை அமைத்தது.
இந்தப் பூங்காவை அப்போதைய முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்தப் பூங்காவுக்கு அதே ‘அம்மா பூங்கா’ என பெயர் வைக்கப்பட்டது. ஆனால், முதலில் திட்டமிட்ட பெருந்திட்ட வளாகத்தின் பெரிய பூங்கா அப்படியே முடங்கி கிடக்கிறது.
கடந்த ஆட்சியிலும் ஒரு கட்டத்தில் பெரிதாக கண்டு கொள்ளாமல் விடப்பட்டு இந்தப் பூங்காவின் பணி, தற்போதும் முடங்கி கிடக்கிறது. நகர விரிவாக்கம், கட்டிடங்கள் அதிகரிப்பால் விழுப்புரம் நகரம் திக்கித் திணறி வருகிறது. புதுச்சேரி, கடலூர் போல காலை, மாலை வேளைகளில் காலார நடந்து சென்று காற்று வாங்க கடற்கரைகள் கிடையாது.
நகர பகுதிக்குள் வேறு எந்த ஒரு பொழுது போக்கு இடமும் கிடையாது. மற்ற ஊர்களை ஒப்பிடும் போது விழுப்புரம் நகரில் நடைபாதை, சிறு உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பூங்காங்களை இதே போல் ஐந்தாறு இடங்களில் அமைப்பது மிக அவசியம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே திட்டமிட்டு தொடங்கப்பட்ட பூங்காவின் பணிகளே 9 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு நடந்து வருகிறது. இதில் நகரின் தேவைக்காக கூடுதல் பூங்காங்கள் கட்டுவது சாத்தியமே இல்லை என்ற நிலைதான் உள்ளது.
முறையாக திட்டமிட்டு பணிகளை முடுக்கி விட்டால், வரும் தைத் திங்கள் நன்னாளில் இந்த பெருந்திட்ட வளாக பூங்கா மக்களின் பயன்பாட்டுக்கு வந்து விடும். இருக்கின்ற நகர நெருக்கடியில், அக்கறையோடு இதை அரசு செய்யத்தான் வேண்டும். இதுபோல் தொடர்ந்து இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சி, பாதிப்புகள் குறித்து அடுத்தடுத்த நாட்களில்.!
முந்தைய அத்தியாயம்: விழுப்புரம் 30 | போக்குவரத்து நெருக்கடியில் திக்கித் திணறும் விழுப்புரம் நகரம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT