Published : 17 Oct 2023 06:26 PM
Last Updated : 17 Oct 2023 06:26 PM
விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம், கடந்த 30-ம் தேதி 30-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. கடந்த 29 ஆண்டுகளில், விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன? அவற்றின் தற்போதைய நிலை என்ன? இன்னும் என்னென்ன செயல்படுத்த வேண்டும்? மாவட்டத்தின் தற்போதைய சமூக, பொருளாதார வளர்ச்சி எவ்வாறு உள்ளது? என்பதை தொடர்ச்சியாக நமது சிறப்பு பகுதியில் வெளியிட்டு வருகிறோம்.
அந்த வகையில் இன்று, விழுப்புரம் நகரில் நிலவும் கடும் போக்குவரத்து நெருக்கடி குறித்து அலசுகிறோம். விழுப்புரம் நகரின் மெயின் சிக்னல் தொடங்கி, ரயில் நிலையம் வரை காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் சாலையில் விடப்படும் வாகனங்கள்தான் இதற்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அதைத் தாண்டி சில தெளிவான திட்டங்கள் இல்லாததும் நகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு காரணமாகிறது.
தமிழ்நாட்டில் 1970-ம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாக அதிகரித்து வந்த நகரமயமாக்கம், கடந்த பத்தாண்டுகளில் அதிக வேகம் பிடித்து, அனைத்து நகரங்களிலும் இதுபோன்ற சிக்கல் உள்ளது. சில நகராட்சி நிர்வாகங்கள் இதை ஓரளவு ஒழுங்குப்படுத்தி வருகின்றன. ஆனால், விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் இதை சரி செய்வதற்கான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இந்த போக்குவரத்து நெருக்கடியால், விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் வசிப்பவர்கள் நகருக்குள் சென்று வீடு திரும்புவதற்குள் நாள்தோறும் கடும் நெருக்கடியை சந்திக்கின்றனர்.
விழுப்புரம் மாதா கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பிரபல தனியார் பள்ளி, கிழக்கு சண்முகபுரம் காலனியில் உள்ள தனியார் பள்ளி ஆகியவற்றில் மட்டுமே, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இத்துடன், மாதா கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள அரசு கல்லுாரியில் 2 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் இந்த போக்குவரத்து நெருக்கடியால் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
காலை 8 மணிமுதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும், கிழக்கு பாண்டி ரோடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு முதல் மாதா கோயில் பேருந்து நிறுத்தம் வரையில், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த நேரத்தில் ஊர்ந்தபடி செல்கின்றன. விழுப்புரம் நகரின் மையப்பகுதியைச் சுற்றி ரிங் ரோடு முழுமையடையும் வகையில், ஜானகிபுரம் - கோலியனுார் இடையிலான மாற்று சாலை திட்டத்தை இறுதி செய்ய தனிக்கவனம் வேண்டும்.
தற்போது நேருஜி சாலையில் ஒரு ஊர்வலம் என்றால் கோலியனூர் கூட்டுச் சாலையில் இருந்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே இணையும் விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று அங்கிருந்து முண்டியம்பாக்கம் வழியே விழுப்புரம் நகருக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் கால நேரம் விரையமாகிறது. இந்த போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்ய, “விழுப்புரம் ரயிலடி அருகே உழவர் சந்தையையொட்டி சந்தானகோபாலபுரம் வழியாக மருதூர் சென்று, அங்கிருந்து முக்தியையொட்டி செல்லும் சுதாகர் நகர் சாலை வழியாக தேர் பிள்ளையார் கோயிலை அடைந்து புதிய பேருந்து நிலையத்தை அடையலாம்.
இதே போல சென்னை நெடுஞ்சாலைக்கு செல்வோரை காந்தி சிலை வழியாக திருவிக சாலையில் சென்று சிவன் கோயிலையொட்டி வடக்கு தெருவில் திரும்பி, காட்பாடி ரயில்வே கேட் வழியாக செல்லலாம். இப்படி போக்குவரத்தை திருப்பி விட்டால் நெரிசலை கட்டுப்படுத்த முடியும்” என்று விழுப்புரம் நகரவாசிகள் தெரிவிக்கின்றனர். இதைத்தாண்டி நகரப் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் நகராட்சி நிர்வாகத்தால் சரிவர அகற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு கடுமையாக உள்ளது. வாகனங்கள் நிறுத்துமிடங்கள் இல்லாத வணிக வளாகங்களால் இந்த போக்குவரத்து சிக்கல் மேலும் அதிகமாகி விழுப்புரம் நகரமே திக்கித் திணறி வருகிறது.
இதுதொடர்பாக விழுப்புரம் நகராட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது பெயர் சொல்ல விரும்பாத அலுவலர் ஒருவர் கூறியதாவது: சாலையின் நீள அகலத்தையும், கட்டப்படும் கட்டிடத்தின் பரப்பளவையும் கணக்கிட்டு வாகனம் நிறுத்த எவ்வளவு இடம் ஒதுக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்துதர வேண்டியது மாநகராட்சி, நகராட்சியின் பணிகள் ஆகும். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும், உரியகாற்றோட்டத்துடனும், தீ விபத்தில் இருந்து மக்களைக்காக்கும் வகையில் கட்டிடங்களை கட்ட நகராட்சிநிர்வாக இயக்குநரகம் விதிமுறைகளை வகுத்துள்ளன.
வணிக வளாகங்களுக்குத் தரை தளத்தில் வாகன நிறுத்தம், கடைக்கு முன் 40 அடி அகலம் வரை சாலை, போதிய இடைவெளியுடன் படிக்கட்டுகள், 2 தளங்களுக்கு மேற்பட்டிருப்பின் கட்டாயமாக தீ அணைப்பு கருவிகள், அவசர காலத்தில் வெளியேறும் வாயில்கள், இரு கட்டிடங்களுக்கிடையே 5 முதல் 11 அடி வரை இடைவெளி ஆகியவை இருக்க வேண்டுமென விதிமுறைகள் உள்ளன.
இதை நடைமுறைப்படுத்த முடியாமல் அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் நேரடியான அரசியல் குறுக்கீடுகளும், மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரமும் மேலோங்குகிறது. வெளியில் இருந்து வரும் அதிகாரி விழுப்புரத்தின் போக்குவரத்து நெருக்கடியைக் கண்டு, இருக்கும் சட்டங்களைக் கொண்டு இதை சரிபடுத்த முயன்றால் அதற்கு எதிர்ப்பு எழுகிறது.
‘இது என் ஊர், எனக்குத் தெரியும், நீ அடுத்த ஊருக்கு பணி மாறுதலில் சென்று விடுவாய். ஆனால் நான் இந்த மக்களோடுதான் வாழ்ந்தாக வேண்டும். அவர்களை அணுசரித்து போக வேண்டியது இருக்கிறது’ என்கிறார்கள். அப்படியே விதிகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தால். நீதிமன்றம் அவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கும். இப்படியாக ஆக்கிரமிப்புகள் குறையாமல், வாகனங்கள் விடுவதில் ஒரு முறையில்லாமல் விழுப்புரம் நகர மக்கள் நாளுக்கு நாள் அதிக போக்குவரத்து நெருக்கடியை சந்தித்து வருகின்றனர் என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் கட்டப்படும் புதிய கட்டிடங்களை ஒழுங்குபடுத்துவதற்கென சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்(சி.எம்.டி.ஏ) ஆகிய இரண்டு அமைப்புகள்உள்ளன. இதே போல நகராட்சிகளில் கட்டப்படும் கட்டிடங்களுக்கான அப்ரூவலை அந்தந்த நகராட்சியே வழங்க வேண்டும். அதில், வாகனங்கள் நிறுத்த போதுமான இடம் இருப்பது அவசியம் என்று அவசியம் குறிப்பிட்டு, அதை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.
இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வர விழுப்புரம் நகராட்சியை நிர்வகிக்கும் அனைவரும் ஒத்து கருத்துடன் இதை செயல்படுத்த வேண்டும். மக்களும் இதற்கு போதிய ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யாத வரையில் விழுப்புரம் நகரின் மெயின் சிக்னல் தொடங்கி, ரயில் நிலையம் வரை காலை வேளையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடி தொடரவே செய்யும். இதுபோன்ற நமது விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் குறித்த விரிவான பார்வைகள் அடுத்தடுத்த நாட்களில்...
முந்தைய அத்தியாயம்: விழுப்புரம் 30 | பசுமையை மீட்க படை திரண்டோம்..!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT