Published : 16 Oct 2023 03:54 PM
Last Updated : 16 Oct 2023 03:54 PM
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கும் முதியோரை அவர்களது குடும்பத்தினர் கைவிட்டுச் செல்வது அடிக்கடி நடக்கிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளிகளாகச் சேர்ப்போரின் மருத்துவப் பரிசோதனை ஆய்வு முடிவு களைப் பெறவும், மருந்துகளை வாங்கவும் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை நோயாளிக்கு தெரிவித்து அவரை சிகிச்சைக்கு ஒத்துழைக்க வைக்கவும் உறவினர் ஒருவர் உதவியாளராக வார்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
ஆனால் சிலர், முதியோரை சிகிச்சைக்குச் சேர்த்துவிட்டு உடன் இருக்காமல் சென்று விடுகின்றனர். உறவினர் இல்லாத நிலையிலும் சிகிச்சை அளித்து குணமடைந்த பிறகும்கூட, அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வருவதில்லை. இதனால் மருத்துவமனை நிர்வாகம் காவல் துறை, சமூகநலத் துறை உதவியுடன் உறவினர்களை அழைத்துக் கட்டாயப்படுத்தியே முதியோரை அனுப்பி வைக்கின்றனர். இன்னும் பல முதியோர் சிகிச்சையில் இருக்கும்போதே தப்பி விடு கின்றனர். அதனால், மருத்துவமனை நிர்வாகம், முதிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியோடு அவர்களைக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும் போராட வேண்டி இருக்கிறது.
இது குறித்து சுகாதாரச் செயற்பாட்டாளர் வெரோனிகா மேரி கூறியதாவது: சொத்துகளை மட்டும் பறித்துக் கொள்ளும் மகன், மகள்கள் மூத்த குடிமக்களைச் சரிவரக் கவனிக்காமல் புறக்கணிப்பது தற்போது அதிகளவு நடக்கிறது. முதியோரைப் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்கான அடிப்படை சிகிச்சைகள், பராமரிப்புகளைக்கூடச் செய்வதில்லை.
சமீபத்தில் மதுரை கரும்பாலையைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி காலில் ஏற்பட்ட காயத்துக்காக அவரது குடும்பத்தினரால் கடந்த ஆக.12-ல் அரசு ராஜாஜி மருத் துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு, அவரை உடனிருந்து கவனிக்க உறவினர் வரவில்லை. ஓரிரு முறை அவரது பேரன் மட்டும் வந்து பார்த்துச் சென்றார். அவரது பரிதாப நிலைமையைப் பார்த்து செவிலியர் மற்றும் மருத்துவர்கள் மூதாட்டிக்குத் தேவையான உடை, உணவு, பழங்களை தங்கள் சொந்த செலவில் வழங்கிப் பராமரித்து வருகின்றனர்.
அவரது காயம் குணமடைந்ததும் வீட்டுக்கு அனுப்ப தயாராக இருந்தனர். ஆனால் அவரை அழைத்துச் செல்ல உறவினர் யாரும் வரவில்லை. இதனால் போலீஸ் மற்றும் சமூக நலத்துறை உதவியை மருத்துவமனை நிர்வாகம் நாடியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மூதாட்டி தனது வீட்டை மகன் வழி குடும்பத்தினருக்கு எழுதிக்கொடுத்து விட்டார். அதனால் மகள் குடும்பத்தினர் இவரைப் புறக்கணித்து விட்டனர். மேலும் சொத்தை எழுதி வாங்கிய மகன் குடும்பத்தினரும் மூதாட்டியைக் கண்டுகொள்ளவில்லை. அதனால் சமூக நலத்துறையினரிடம் மூதாட்டியை ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.
இதுகுறித்து மூதாட்டியின் பேரனிடம் பேசியபோது, ‘‘நாங்கள் அழைக்க வரவில்லை என்று கூறவில்லை. அனை வரும் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். நான் சென்னையில் பணிபுரிகிறேன். நான் வந்த பிறகுதான் பாட்டியை வீட்டுக்கு அழைத் துச்செல்ல முடியும் என்றேன். அதற்கு ஒப்புக்கொள்ளாமல் மருத்துவமனை நிர் வாகம் நெருக்கடி கொடுக்கிறது.
இதற்கு முன்பும் எனது பாட்டியை கால் சிகிச்சைக்கு சேர்த்தோம். அவர்கள் சரியாக சிகிச்சை அளிக்காமல் அனுப்பிவிட்டனர். அரசு ராஜாஜி மருத்துவமனையில் வயதானோரை உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர். வீட்டுக்கு அனுப்புவதிலேயே குறியாக உள்ளனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT