Published : 16 Oct 2023 10:10 AM
Last Updated : 16 Oct 2023 10:10 AM
திருவாரூர்: விருந்துகளில் மீதமாகும் உணவுகளை வீணாக்காமல், உணவு தேவைப்படும் மக்களிடம் கொண்டு சேர்க்க உறுதி ஏற்க வேண்டும் என நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் வெளியிட்ட அறிக்கை: ஆண்டு தோறும் அக்.16-ம் தேதி, உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டில் உணவு உற்பத்தி அதிகரித்தாலும், அதைப் பாதுகாத்து வைப்பதில் பின் தங்கி உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இதேபோல, நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 20 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனம் தெரிவித்துள்ளது. நமது பாரம்பரிய உணவு பழக்கவழக்கத்திலிருந்து மாறுபட்டு, பன்னாட்டு துரித உணவு மோகத்தால், தினம் தினம் புது வித நோய் தாக்குதலால் பாதிக்கப்படுவதுடன், சரி விகித ஊட்டச்சத்துகள் கிடைக்காத நிலை உள்ளது.
எனவே, குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு நமது பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானிய உணவு வகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவற்றை அன்றாட பழக்கத்துக்கு கொண்டு வருவதும் முக்கிய கடமை. அதேவேளையில், உணவின் முக்கியத்துவம் குறித்தும், உணவை வீணடிக்கக் கூடாது என்பதையும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
திருமணம், பிறந்த நாள் உட்பட விருந்துகளில் அதிக அளவில் உணவுகள் வீணாக்கப்படுகின்றன. உணவு மிஞ்சினால், அதை வீணாக்காமல் உணவு தேவைப்படும் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் நாம் உறுதி ஏற்க வேண்டும். மேலும், நமது பகுதிகளில் அந்தந்த பருவங்களில் கிடைக்கும், விளையும் பழங்கள் மற்றும் காய் கறிகளை நாம் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
நமது தேவைக் கேற்ப தற்சார்பு முறையில், நமக்கு தேவையான காய் கறிகளை நாமே விளைவித்து பயன்படுத்துவதும், பாதுகாப்பான - சத்தான ஊட்டச்சத்து மிகுந்த உணவுக்கு வழிவகுக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT