Published : 16 Oct 2023 02:20 PM
Last Updated : 16 Oct 2023 02:20 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கடந்த 30-ம் தேதி 30-ம்ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்தச் சூழலில், கடந்த 29 ஆண்டுகளில் இம்மாவட்ட வளர்ச்சி; மாவட்டம் பெற்றதும்.. பெறத் தவறியதும்.. என்ற வகையில் பல்வேறு நிலைகளில் அலசினோம். அதன் தொடர் நிகழ்வாய் ரவுடிசம் கட்டுப்படுத்தப்பட்டது,
திருநங்கைகளின் சிக்கல், காவல்துறையின் மதுவிலக்கு பிரிவின் செயல்பாடுகள் குறித்து பதிவிட்டோம். தொடர்ந்து மாவட்டத்தின் சில சர்ச்சைக்குரிய வழக்குகள் குறித்து இன்று பதிவிடுகிறோம். 15 ஆண்டுகளுக்கு முன், பாலியல் தொழில் செய்த இளம் பெண் ஒருவர் செஞ்சியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஸ்குரு டிரைவரால் வன்மமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்டார்.
அப்போது அந்த விடுதியில் தங்கி இருந்த திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சேர்ந்த சில ஆசிரியர்கள் இந்த குரூரமான கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டனர். ஆனால் இறுதி வரை கொலை செய்யப்பட்ட பெண் யாரென்று அடையாளம் காண முடிய வில்லை. பிரேத பரிசோதனைக்குப் பின் செஞ்சி பேரூராட்சியால் அப்பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இன்று வரையிலும் இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறையை பொறுத்தவரையிலும் மர்மமாகவே உள்ளது.
வீடு புகுந்து..: அரகண்டநல்லூர் அருகே வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி ஆராயி (45). தனது 8-ம் வகுப்பு படிக்கும் மகள், 4-ம் வகுப்பு படித்து வந்த மகனுடன் கடந்த 2018-ம் ஆண்டு பிப். 21-ம்தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஆராயி மற்றும் அவரது மகன், மகளை கொடூரமாக தாக்கியதில் 4 வயது மகன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த 300 பேரிடம் அப்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டும், குற்றவாளி யார் என்பதில் குழப்பம் நிலவியது. இவ்வழக்கின் விசாரணைக்காக 60 போலீஸார் அடங்கிய 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் 2018 மார்ச் 25-ம் தேதி கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி கிராமத்தைச் சேர்ந்த தில்லை நாதனை (37) கைது செய்தனர்.
விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் இதுபோன்ற 11 சம்பவங்களில் தில்லைநாதன் ஈடுபட்டுள்ளதும், வீடு புகுந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளையடிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. கொலையை மறைத்த குற்றத்திற்காகவும், தில்லைநாதனுக்கு உடந்தையாக இருந்ததாக அம்பிகா என்ற பெண்ணும் அப்போது சிக்கினார்.
யார் அந்த சிறுவன்..?: கடந்த 2021-ம் ஆண்டு டிச.15-ம் தேதி காலை, விழுப்புரம் மேலத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியில் 4 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் இறந்து கிடந்தான். அதைக் கண்டு அப்பகுதி மக்கள் அங்கு கூடினர். யாருக்கும் அச்சிறுவன் யார் என்ற அடையாளம் தெரியவில்லை.
இறந்த சிறுவன் நீல நிற டீ ஷர்ட்டும், வெள்ளை, ரோஸ் கலந்த கால் சட்டையும் அணிந்திருந்தான். இச்சிறுவனைப் பற்றி தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட காவல்துறை கேட்டு கொண்டது. மேலும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநில போலீஸாருக்கு சிறுவனின் புகைப்படத்தை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், 2021 டிசம்பர் 14-ம் தேதியன்று நள்ளிரவு, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அந்த சிறுவனின் மீது துணியால் மூடியபடி சிறுவனை தனது தோளில் சுமந்தபடி நடந்து செல்வதும், அந்த நபருடன் சுமார் 55 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபரும் உடன் செல்வதும் பதிவாகியுள்ளது.
அவர்கள் மேலத்தெரு பகுதிக்கு சென்றதும் அங்குள்ள தள்ளுவண்டியில் துண்டை விரித்து அதன் மீது அந்த சிறுவனை படுக்க வைத்து விட்டு, பின்னர் மீண்டும் அவர்கள் இருவரும் அங்கிருந்து நடந்தே புதிய பேருந்து நிலையம் வந்து பேருந்தில் ஏறிச்சென்றதும் சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகியுள்ளது. இருவரும் இரவு நேரத்தில் வந்ததால் முகம் சரியாக பதிவாகவில்லை. அச்சிறுவன் யார்? எப்படி இறந்தான்? என்பதை இன்னமும் கண்டறிய முடியவில்லை. அச்சிறுவனின் உடல் விழுப்புரம் நகராட்சி மூலம் அடக்கம் செய்யப்பட்டது.
தனிமையில் இருந்தவர்களை..: விக்கிரவாண்டி அருகே உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவர், அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரும், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த, அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயதுடைய மாணவியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
கடந்த மார்ச் 25-ம் தேதி இரவு 8 மணி அளவில் இருவரும் பைக்கில் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு சென்று தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 3 பேரில் ஒருவர், கத்தியால் மாணவரை சரமாரியாக குத்தி, அம்மாணவியை 3 பேரில் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, தப்பிச் சென்றனர்.
போலீஸாரின் தீவிர விசாரணைக்கு பின், இவ்வழக்கில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கோலியனூர் அருகே குச்சிப் பாளையத்தைச் சேர்ந்த கவியரசன், அபினேஷ், அன்பு ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இது போன்ற சர்ச்சைக் குரிய சில வழக்குகள் அவ்வப்போது வருவதும், அதில் சில தீராத மர்மங்களாய் தொடர்வதும் அனைத்து பகுதிகளிலும் உண்டு. விழுப்புரம் மாவட்டமும் விதிவிலக்கல்ல.
முந்தைய அத்தியாயம்: விழுப்புரம் 30 | மது கடத்தல்... தொன்று தொட்டு தொடரும் சிக்கல்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT