Published : 14 Oct 2023 05:03 AM
Last Updated : 14 Oct 2023 05:03 AM
புதுடெல்லி: இந்திய விமானப் படையில் பணியாற்றி, விங் கமாண்டராக கடந்த 1990-ல் ஓய்வு பெற்றவர் நிர்மல் சிங் பனேசர் (89). இவருக்கு பரம்ஜித் கவுர் என்பவருடன் 1963-ல் திருமணம் நடைபெற்றது. தம்பதியருக்கு 3 குழந்தைகள் பிறந்தனர். 1984-ல் நிர்மல் சிங் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டபோது அவருடன் செல்ல பரம்ஜித் கவுர் மறுத்துவிட்டார். குழந்தைகளை தானே வளர்த்து வந்தார்.
இந்நிலையில் பணி ஓய்வுக்கு பிறகு 1996-ல் மனைவியிடம் இருந்து விவகாரத்து கேட்டு சண்டிகர் மாவட்ட நீதிமன்றத்தில் நிர்மல் சிங் வழக்கு தொடர்ந்தார். 1984-ல் தங்கள் உறவு சரிசெய்ய முடியாத அளவுக்கு முறிந்துவிட்டதாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் 2000-ம் ஆண்டு பிப்ரவரி 5-ல் விசாரணை நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இதற்கு எதிராக பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் பரம்ஜித் கவுர் மேல்முறையீடு செய்தார். இதில் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை தனி நீதிபதி 2000-ம் ஆண்டு டிசம்பரில் ரத்து செய்தார். இந்த உத்தரவை உயர் நீதிமன்ற அமர்வு 2009 பிப்ரவரியில் உறுதி செய்தது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நிர்மல் சிங் மேல்முறையீடு செய்தார். பல ஆண்டுகள் நிலுவையில் இருந்த இந்த வழக்கில் விவாகரத்து வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற அமர்வு தனது உத்தரவில், “விவாகரத்து வழக்குகள் தாக்கல் செய்யும் போக்கு அதிகரித்து வரும் போதிலும், இந்திய சமூகத்தில் திருமண உறவானது, கணவன் - மனைவி இடையே ஒரு புனிதமான, ஆன்மீக மற்றும் விலைமதிப்பற்ற உணர்வுபூர்வமான வாழ்க்கையாக கருதப்படுகிறது. எதிர் மனுதாரர் (பரம்ஜித்) 1963 முதல் தனது வாழ்நாள் முழுவதும் புனிதமான உறவைப் பேணி வருகிறார், கணவன் விரோதப் போக்கை வெளிப்படுத்திய போதிலும், இத்தனை ஆண்டுகளாக தனது மூன்று குழந்தைகளையும் கவனித்து வருகிறார். இந்த வயதிலும் தனது கணவரை கவனித்துக் கொள்ள தயாராக இருக்கிறார். விவாகரத்து பெற்றவள் என்ற பெயருடன் இறக்க விரும்பவில்லை என பரம்ஜித் கூறுகிறார். எனவே அவருக்கு விவாகரத்து வழங்குவது அநீதி இழைப்பதாகும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
முதன்முதலில் 1996-ல் தொடரப்பட்ட இந்த வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதித் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT