Published : 12 Oct 2023 05:32 PM
Last Updated : 12 Oct 2023 05:32 PM
கோவை: நவராத்திரி பண்டிகை என்றாலே, நினைவுக்கு வருவது கொலு பொம்மைகள். நவராத்திரி பண்டிகை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். கோயில்களில் மட்டுமல்லாமல், பொதுமக்கள் தங்களது வீடுகளிலும் கொலு பொம்மைகளை காட்சிப்படுத்துவர். சில வீடுகளில் ஏதாவது ஒரு கருத்தை பிரதிபலிக்கும் வகையில் கொலு பொம்மைகளை வைப்பது வழக்கம்.
நடப்பாண்டு நவராத்திரி பண்டிகை வரும் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதில்23-ம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, 24-ம் தேதி விஜயதசமி தினமாகும். இதையொட்டி, கோவையில் கொலு பொம்மைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது. பெரியகடைவீதியில் உள்ள பூம்புகார் விற்பனையகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொலு பொம்மைகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, பூம்புகார் விற்பனையகத்தின் மேலாளர் கி.ரொனல்டு செல்வஸ்டின் கூறியதாவது: பூம்புகார் தொன்மையான கலைகளை பாதுகாப்பதோடு, கைவினைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் பிரதான நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. நடப்பாண்டும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, விதவிதமாய், வித்தியாசமாய் பல்வேறு வகைகளில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
நடப்பாண்டுக்கான புதிய வரவாக சந்திரயான் - 3 மாதிரி, மருதமலை முருகன் கோயில் கட்டமைப்பு, பஞ்சபூத ஸ்தலங்கள், முத்துமலை முருகன் கோயில் கட்டமைப்பு, ஈச்சனாரி விநாயகர் கோயில் கட்டமைப்பு, மணவாளர் முனிவர், தெய்சீகர், ஆண்டாள் ரங்க மன்னார், ஏகம்பர் சீதாதேவி ராமச்சந்திர மூர்த்தி செட்,நடராஜருடன் சிவகாமி அம்மை இருக்கும் செட், ஸ்ரீரங்க தாயார் பெருமாள், வைத்தியராஜ செட், லவகுசா செட், ராமர் ஆஞ்சநேயர் செட், கிருஷ்ணர் சமேதராய் ராதை, கிருஷ்ணன் ஆண்டாள் குழந்தை வடிவம், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பதையொட்டி 11 வீரர்களுடன் கூடிய விநாயகர் கிரிக்கெட் செட், மரத்தினால் செய்யப்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகள், தலைவர்களான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அம்பேத்கர், வல்லபபாய் படேல், பாரதியார் ஆகியோரது உருவச்சிலைகள், விலங்கின வகைகள், பெண்களுக்கு விசேஷ காலங்களில் அளிக்கப்படும் சீர்வரிசை செட், 22 காரட் தங்க முலாம் பூசப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள், செல்போன் மாதிரிகள் ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளன.
குறிப்பாக, பிரபல ஓவியர் ராஜாரவிவர்மாவின் ஓவியங்கள் சிலையாக தயாரிக்கப்பட்டு இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இது தவிர, வழக்கமான தசாவதாரம், விநாயகர், தர்பார், அஷ்டலட்சுமி, மும்மூர்த்திகள், கிரிவலம், கருட சேவை, திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், பழநி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில் கட்டமைப்புகள், குபேரன், வைகுண்டம், தசரா, மாமல்லபுரம், பள்ளிக்கூடம், சோட்டா பீம் பொம்மை நாடக செட், உழவர் சந்தை, ஜல்லிக்கட்டு, தஞ்சாவூர் பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், சமையல் செட்கள், மரத்தினால் செய்யப்பட்டபொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ரூ.10-ல் இருந்து பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கொலு பொம்மைகள் உள்ளன. தினமும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். களிமண், காகிதக்கூழ், மர வகைகள் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் மற்றும் பயன்படுத்தப்படாத, கழிவாக ஒதுக்கப்பட்ட பாக்குமட்டைகள் உள்ளிட்ட பொருட்களில் இருந்து கலைநயமிக்க பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கைவினை கலைஞர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் மட்டுமின்றி, கைவினை கலைஞர்களே நேரடியாக இங்கு அரங்குகளை அமைத்து விற்கின்றனர். நடப்பாண்டு நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, கடந்த மாதம் 29-ம் தேதி முதல் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது. வரும் 25-ம் தேதி வரை இக்கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இங்கு கொலு பொம்மைகள் வாங்கும் பொதுமக்களுக்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT