Published : 09 Oct 2023 03:34 PM
Last Updated : 09 Oct 2023 03:34 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் பல்வேறு தலைப்புகளில் விற்பனைக்கு வந்துள்ள லட்சக்கணக்கான புத்தகங்களை பொதுமக்கள், மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். திண்டுக்கல்லில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. 10-வது புத்தகத் திருவிழா கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடந்து வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 126 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
ஆன்மிகம், அறிவியல், வரலாறு, அரசியல், சுற்றுச்சூழல் குறித்த புத்தகங்கள், கதை, இலக்கியப் புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் என ரூ.10 முதல் ரூ.500, ரூ.1000 வரை என புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் மொத்தம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தகத் திருவிழாவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், பள்ளி மாணவ, மாணவிகளை பங்கேற்கச் செய்யும், ‘வாங்கினேன், வாசித்தேன், சொல்கிறேன்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், தாங்கள் வாங்கிப் படித்த புத்தகங்கள் குறித்து மேடையில் மாணவர்கள் எடுத்துரைக்கும் வண்ணம், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது, மாணவர்களின் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது. எழுத்தாளர்கள் சந்திப்பு, நூல் வெளியீடு நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. தினமும் வெளிநாட்டுக் குறும்படங்கள் புத்தகத் திருவிழா அரங்கில் திரையிடப்பட்டு வருகின்றன. தினமும் இலக்கியம் தொடர்பாக முக்கியப் பிரமுகர்களின் சொற்பொழிவும் நடைபெற்று வருகிறது.
மாணவர்கள் தங்களது பெற்றோருடன் வருகின்றனர். பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை புத்தகத் திருவிழாவுக்கு அழைத்துவந்து, வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்குகின்றனர். இங்கு ரூ.1000-க்கு மேல் புத்தகங்கள் வாங்குவோருக்கு ‘நூல் ஆர்வலர்’ என்ற சான்றிதழும், ரூ.2000-க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு ‘வாசிப்பை நேசிப்பவர்’ என்ற சான்றிதழும், ரூ.3000-க்கு மேல் புத்தகம் வாங்குபவர்களுக்கு ‘வாசிப்பு திலகம்’ என்ற சான்றிதழும், ரூ.5000-க்கு மேல் புத்தகம் வாங்குபவர்களுக்கு ‘வாசிப்பு சிகரம்’ என்ற சான்றிதழும், பரிசும் வழங்கப்படுகிறது. இது, புத்தகங்களை அதிகம் வாங்கத் தூண்டுபவையாக உள்ளது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி அக்.15-ம் தேதி நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT