Last Updated : 09 Oct, 2023 05:56 PM

 

Published : 09 Oct 2023 05:56 PM
Last Updated : 09 Oct 2023 05:56 PM

விழுப்புரம் 30 | திண்டிவனம் - திருவண்ணாமலை இடையிலான ரயில் திட்டம் கைவிடப்பட்டுவிட்டதா?

திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் திட்டத்துக்காக செஞ்சி அருகே ராஜாம்புலியூர் கிராமத்தில் கட்டப்பட்ட பாலம்.

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம், கடந்த 30-ம் தேதி 30-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. கடந்த 29 ஆண்டுகளில், விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன? அவற்றின் தற்போதைய நிலை என்ன? இன்னும் என்னென்ன செயல்படுத்த வேண்டும்? மாவட்டத்தின் தற்போதைய சமூக, பொருளாதார வளர்ச்சி எவ்வாறு உள்ளது? என்பதை தொடர்ச்சியாக நமது சிறப்பு பகுதியில் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய தொடர்ச்சி...

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, கடந்த 2008-ம் ஆண்டு அக்.15-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் அப்போது ரூ.227 கோடி மதிப்பில் 77.33 கி.மீ., தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. திண்டிவனம், தீவனூர், வல்லம், செஞ்சி, ஆலம்பூண்டி, சத்தியமங்கலம், கீழ்பெண்ணாத்தூர், சோமாஸ்பாடி, திருவண்ணாமலை பகுதிகள் பயனடையும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. செஞ்சி சுற்றுவட்டார பகுதிகள் இதுவரையிலும் இருப்பு பாதையையே பார்க்காத பகுதிகள். இதனால் இப்பகுதி மக்கள் இத்திட்டத்தை ஆர்வத்துடன் வரவேற்றனர்.

திட்டம் தொடங்கிய போது, முதற்கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு, அப்போது சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 140 மீட்டர் பாலமும், தொண்டி ஆற்றில் 65 மீட்டர் பாலமும், வராக நதி மீது 65 மீட்டர் பாலமும், திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சலாற்றில் 50 மீட்டர் பாலமும் கட்டி முடிக்கப்பட்டது. அடுத்து, 2011-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கு ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து 82 சிறிய பாலங்கள் கட்டியிருக்க வேண்டும். ஆனால் ஒதுக்கிய நிதியைப் பயன்படுத்தாமல் கிடப்பில் வைத்ததால், அடுத்து வந்த ஆண்டுகளில் ரயில்வே துறை திண்டிவனம் - திருவண்ணாமலை திட்டத்துக்காக நிதி ஒதுக்கவில்லை.

இந்த திட்டத்துக்காக ரயில் நிலையங்கள், இருப்பு பாதை அமைக்க 197 ஹெக்டேர் நிலத்தை தெற்கு ரயில்வே கையகப்படுத்த வேண்டும். ஆரம்பம் முதலே இந்த திட்டத்துக்கு தமிழக அரசு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழகத்தில் மாறிமாறி ஆட்சியில் இருந்து வரும் திமுக, அதிமுக தரப்பில் இருந்து எந்த அழுத்தமும் மத்திய அரசுக்கு கொடுக்கப்படவில்லை. மற்ற அரசியல் கட்சிகளும் இதற்காக எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. ஆனாலும், அப்போது காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த கிருஷ்ணசாமி, அதிமுக எம்.பி.ஏழுமலை ஆகியோர் மக்களவையில் இதுகுறித்து பேசினர். ஆனாலும், அவர்கள் சார்ந்த கட்சிகளே இந்த திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை.

இத்திட்டத்தை விரைவாக உரிய நேரத்தில் செயல்படுத்தாமல் போனதால், ரூ. 227 கோடி மதிப்பில் மூன்று ஆண்டுகளில் நிறைவு செய்ய வேண்டிய திட்ட மதிப்பு மூன்று மடங்காக உயர்ந்தது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசியல் கட்சிகளே ஆர்வம் காட்டாத சூழலில், இந்த திட்டத்தை கைவிடும்படி மத்திய ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டது. திட்டம் அப்படியே முடங்கிப் போனது.

இதற்கிடையே, இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முனைந்த ரயில்வே துறை, நடப்பு நிதியாண்டில் இதன் அடுத்த கட்ட ஆய்வு பணிக்கென்று ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இன்னமும் பணிகள் தொடராமல் உள்ளது. இந்தப் பணிகள் மீண்டும் தொடங்கி முடிந்தால், திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை வழித்தடத்தில் ஏராளமான கிராம மக்கள் பயனடைவர்.

மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது, விழுப்புரம் மாவட்டமே பல வகையில் வளர்ச்சியில் பின்னோக்கி இருக்கிறது. அதிலும் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி செல்லும் பகுதிகள் பெரிய அளவில் வளரவே இல்லை. அந்தப் பகுதி வளர்ச்சிக்கு இந்த இருப்பு பாதை வழித்தடம் மிகமிகத் தேவையானது. இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய முழு பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. உடனே செவ்வனே எடுத்து செயல்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

இதே போல் புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலையை 4 வழிச்சாலையாக மாற்றி சென்னை - பெங்களூரு சாலையுடன் இணைக்க கடந்த 2011-ம் ஆண்டு 178 கி.மீ தூரத்துக்கு திட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.12 ஆண்டுகள் கடந்தும் இதுவரையிலும் பணிகள் நிறைவு பெறவில்லை. 2024 மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடிவடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த 4 வழிச்சாலை வந்தால், திண்டிவனம் பகுதியில் பயண நெருக்கடி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் விழுப்புரம் மாவட்டத்தின் மீதான அக்கறை கொண்ட நமது பார்வையுடன், பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் சேர்ந்து, ‘விழுப்புரம் மாவட்டம் பெற்றதும்.. பெறத் தவறியதும்..’ அடுத்தடுத்த நாட்களில் தொடரும்.

முந்தைய அத்தியாயம்: விழுப்புரம் 30 | கட்டுக்குள் வந்த ரவுடிசம்; கலங்கி நிற்கும் திருநங்கைகள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x