Last Updated : 08 Oct, 2023 10:08 PM

 

Published : 08 Oct 2023 10:08 PM
Last Updated : 08 Oct 2023 10:08 PM

விழுப்புரம் 30 | கட்டுக்குள் வந்த ரவுடிசம்; கலங்கி நிற்கும் திருநங்கைகள்!

விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து, கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் பிரிந்து தனி மாவட்டமாக உருவானது. தற்போது இம்மாவட்டம் 30-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

கடந்த 29 ஆண்டுகளில் இம்மாவட்டம் பெற்றது என்ன..? பெறத்தவறியது என்ன..? என்பது குறித்து நமது சிறப்பு பகுதியில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றையை பார்வை... கடந்த ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டம் ‘க்ரைம்’ பின்னணியில் கொஞ்சம் மோசமாகவே இருந்து வந்துள்ளது. தற்போது அந்த நிலைமை மாறியிருக்கிறது. இன்றைக்கும் பழைய அந்த க்ரைம் கதைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

விழுப்புரம் ரயில்வே நிலையத்தில் பணியாற்றிய ராஜேந்திரன் என்ற மின்னல் ராஜா மருதூர் கோவிந்தன் கொலை வழக்கில் சிக்கியதால் ‘மின்னல் ராஜா’ என்று பிரபலமானார். அதன் பிறகு மின்னல் ராஜா, ஆர்.கே.சிவா, நாராயணன், கேசவன், சவுந்தர், 2016-ம் ஆண்டில் பத்தர் செல்வம் என்கிற முத்தமிழ் செல்வன் இப்படியாக ரவுடிகளுக்குள் ஒருவருக்கொருவர் வெட்டி கொண்டு இறந்தவர்களின் பட்டியல் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்கிறது.

இதே போல விழுப்புரம் மாவட்டம் குயிலாபாளையத்தைச் சேர்ந்த தாதா மணிகண்டன், பூபாலன் ஆகியோர் தனித் தனி கோஷ்டியாக செயல்பட்டு, ஒரு கட்டத்தில் பூ பாலன் இதிலிருந்து ஒதுங்கிக்கொள்ள, அதன் பின் ராஜ்குமார் தலைமையில் புதிய அணி உருவானது. மணிகண்டன் தரப்புக்கும் ராஜ்குமார் தரப்புக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மணிகண்டன் தம்பி ஆறுமுகத்தை ராஜ்குமார் தரப்பினர் கொலை செய்தனர்.

இதற்கு பழிக்குப் பழியாக ராஜ்குமார் தரப்பைச் சேர்ந்த கருணா, மதி ஆகியோரை மணிகண்டன் தரப்பினர் கொன்றனர். இதற்கு பதிலடியாக மணிகண்டன் தரப்பைச் சேர்ந்த ராஜேந்திரனை ராஜ்குமார் தரப்பினர் கொன்றனர். இதன் தொடர்ச்சியாக ராஜ்குமார் தரப்பினர் ஜனார்தனனை கொன்றனர்.

கடந்த மார்ச் மாதம் விழுப்புரம் எம்.ஜி,ரோட்டில் இப்ராகிம் என்பவர் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து அண்மையில் பைனான்சியர் ராம் என்கிற ராம்குமார் கொல்லப்பட்டார்.கடந்த காலங்களைப்போல தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் நிரந்தரமாக ரவுடி என்று சொல்லிக்கொண்டு வெளியே யாரும் இல்லை. போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுத்ததால் ரவுடிசம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

திருநங்கைகள்: தமிழகத்தில் திருநங்கைகள் அதிகளவில் வாழும் மாவட்டங்களில் விழுப்புரமும் ஒன்று.இம்மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளின் வாழ்க்கைமுறை குறித்து, திருநங்கைகளால் தத்து எடுக்கப்பட்ட விழுப்புரம் சங்கர மடத்தின் மேலாளர் ராம மூர்த்தி உதவியுடன் நம்மிடம் பேச முன் வந்த ஒரு திருநங்கையிடம் கேட்டபோது அவர் தெரிவித்த விவரம்:

வீட்டில் செல்லப் பிள்ளையாக வளர்ந்து ஒரு கட்டத்தில் திருநங்கை என அறிந்தவுடன் வீட்டைவிட்டு விரட்டப்பட்ட திருநங்கைதான் நான். என்னைப் போல பலர் விழுப்புரம் மாவட்டத்தில் அடைக்கலமாகியுள்ளனர். ‘நாயக்’ எனப்படும் தலைவியின் கட்டுப்பாட்டில் வாழ்க்கையை தொடங்குகிறோம். எனக்கான வருவாயை நானே ஈட்டவேண்டும்.

அதில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை நாயக்கிடம் அளிக்க வேண்டும், அவருடன் தங்கி கொள்ளலாம். ஒரு வேளை உணவு உட்கொள்ளலாம், என் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் சிகிச்சை அளிக்கவும், நாங்கள் சட்டச் சிக்கலில் சிக்கினால் எங்களை மீட்கவும், அரசின் உதவியை பெறவும் நாங்கள் அளிக்கும் தொகையை எங்களுக்காக நாயக் தரப்பில் இருந்து செலவழிப்பதுண்டு.

மாற்று கருத்து கொண்ட வேறு ஒரு நாயக்கும் (தலைவி) எங்களுக்குள் உண்டு. ஒருவேளை ஒரு திருநங்கை தான் சார்ந்திருக்கும் நாயக்கிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அங்கிருந்து விலகி, தனக்கு ஒத்த கருத்துடைய நாயக்கிடம் இணைந்து கொள்வதுண்டு. அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை முதலில் இருந்த நாயக்கிடம் அபராதமாக செலுத்திவிட்டு, அங்கிருந்து வெளியேற வேண்டும்.

இதெல்லாம் எங்கள் உலகின் சட்டம். பெரும்பாலும் பிச்சைதான் எடுக்கிறோம். சிலர் பாலியல் தொழிலும் செய்கிறோம். இது அனைவரும் அறிந்தது தான். ஒவ்வொரு திருநங்கையும் தங்கள் மனதளவில் குடும்ப வாழ்க்கையை வாழ ஆசைப்படுவதுண்டு. ஆனால் இச்சமூகம் அதை அங்கீகரிப்பது இல்லை.

வட மாநிலங்களில் திருநங்கைகளுக்கு நல்ல மரியாதை அளிக்கப்படுகிறது. ஆனால் இங்கே அந்த நிலை இல்லை. அரசு பல சமூக நலத்திட்டங்களை அறிவிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நடைமுறையில் நாங்களும் மாற வேண்டியது உள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் பல திருநங்கைகள் ஆக்கப்பூர்வமாக பல நல்ல விஷயங்களில் ஈடுபட்டு பொருள் ஈட்டுகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டங்களைப் பெறுகின்றனர். நாங்களும் மாற விரும்புகிறோம். விழுப்புரத்தில் திருநங்கைகளுக் கென்று, தனி தொழில் திறன் பயிற்சி மையத்தை அரசு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு சமூக கூறுகளில் திருநங்கைகளின் துயரங்கள் மிகுந்த வாழ்க்கையும் மிக முக்கிய அங்கம் வகித்து வருகிறது.

திருருநங்கையர்களின் சமூக பாதுகாப்பு கருதி, அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், 2008-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி தமிழக அரசு திருநங்கையர்களுக்கு தனி நலவாரியம் அமைத்தது. இந்த நலவாரியம் அமைக்கப்பட்ட அந்த நாளை திருநங்கையர் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாட தமிழக அரசு 2011-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

அதற்கு முன்பும் பின்பும் கூவாகம் திருவிழாவையொட்டி விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் களை கட்டி வருகின்றன. வலி மிகுந்த அவர்களது வாழ்க்கையும் தொடரவே செய்கின்றன. இம்மாவட்டத்தின் சமூக வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களின் கருத்துகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அவற்றுடன் நமது பார்வையும் இணைந்து அடுத்தடுத்த நாட்களில்...

முந்தைய அத்தியாயம்: விழுப்புரம் 30 | கழுவெளி நீர்தேக்கம் புனரமைப்பு எந்த நிலையில் உள்ளது?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x