Published : 07 Oct 2023 12:09 AM
Last Updated : 07 Oct 2023 12:09 AM
ஹைதராபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸமின் ஆட்டத்தை நேரில் பார்க்க சுமார் 850 கி.மீ தூரம் பயணித்து போபாலில் இருந்து ஹைதராபாத் நகருக்கு வந்துள்ளார் இந்தியாவை சேர்ந்த 14 வயது சிறுமி அலாய்ஷா. அவரது விருப்பத்தை அவரின் குடும்பத்தினர் நிறைவேற்றியுள்ளனர்.
இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வகையில் பாகிஸ்தான் அணி, இந்தியா வந்துள்ளது. ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் நகரில் அமைந்துள்ள மைதானங்களில் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுகிறது. அந்த அணி வெள்ளிக்கிழமை அன்று நெதர்லாந்து அணிக்கு எதிரான ஹைதராபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் விளையாடி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியை பார்க்க அலாய்ஷா வந்திருந்தார்.
“நான் பாபர் அஸமின் ரசிகை. அவர் சதம் பதிவு செய்தாலும், ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும் அது மாறாது. கிரிக்கெட் விளையாட்டு எனக்கு பிடிக்கும். பாபர் எனது ஃபேவரைட் வீரர்.
எனது அப்பா கிரிக்கெட் விளையாட்டை விரும்பிப் பார்ப்பார். அதனால் நானும் கிரிக்கெட் விளையாட்டை பார்த்து ரசிக்க தொடங்கினேன். 2020-ல் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் பாபர். அது முதல் அவரது ரசிகை ஆனேன்.
பாபர், உலகக் கோப்பை தொடருக்காக இந்தியா வந்துள்ளார். அவரது ஆட்டத்தை நேரில் பார்க்க விரும்பினேன். அது எனது கனவு. அதனை எனது பெற்றோர் நிஜம் ஆக்கியுள்ளனர். பாகிஸ்தான் அணி தங்கியுள்ள விடுதியில் தான் தங்க விரும்பினேன். ஆனால், அதற்கான கட்டணம் 1.5 லட்ச ரூபாய் என்பதால் அது முடியவில்லை. எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாகிஸ்தான் அணி குறித்து பதிவிடுவேன். அதற்கு பாகிஸ்தான் வீரர்கள் இமாம்-உல்-ஹக் மற்றும் அசன் அலி ஆகியோர் லைக் செய்வார்கள்.
எனக்கு இந்திய அணியில் ஷூப்மன் கில் மற்றும் விராட் கோலி பிடிக்கும். எனது அப்பாவுக்கு ராகுல் திராவிட் என்றால் மிகவும் பிடிக்கும். நான் தொழில்முனைவோராக விரும்புகிறேன்” என அலாய்ஷா தெரிவித்துள்ளார். நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்களில் பாபர் அஸம் ஆட்டமிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT