Last Updated : 06 Oct, 2023 03:52 PM

1  

Published : 06 Oct 2023 03:52 PM
Last Updated : 06 Oct 2023 03:52 PM

விழுப்புரம் 30 | விவசாயம் சார்ந்த வளர்ச்சி எப்படி? - ஒரு பார்வை

விழுப்புரம் அருகே பில்லூர் பகுதியில் செழித்து வளர்ந்துள்ள நெற்பயிர்களுக்காக பாய்ந்து வரும் நிலத்தடி நீர்.

விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து, பிரிக்கப்பட்டு தனியாக விழுப்புரம் மாவட்டம் கடந்த 1993-ல் உருவாக்கப்பட்டது. கடந்த செப். 30-ம் தேதியுடன் 29 ஆண்டுகள் முடிந்து. 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் இம்மாவட்டம் பெற்றது என்ன..? பெறத் தவறியது என்ன..? என நமது சிறப்பு பகுதியில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றையை தொடர்ச்சி...

விழுப்புரம் மாவட்டத்தில் 75 சதவீதம் மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 7,22,203 ஹெக்டேரில் 3,37,305 ஹெக்டேர் (45%) சாகுபடி பரப்பாகக் கொண்டுள்ளது. இதில்13,7647 ஹெக்டேர் பரப்பளவில் ஒருமுறைக்கு மேல் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. பயிர் சாகுபடி திறன் அதாவது மொத்த சாகுபடி பரப்புக்கும் நிகர சாகுபடி பரப்புக்கும் உள்ள விகிதம் 1.40 ஆகும். இது நமது மாநில சராசரியை (1.25) விட அதிகமாகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 5.68 லட்சம் விவசாய குடும்பங்கள் உள்ளன. 75 சதவீதம் குறு விவசாயிகள், 16 சதவீதம் சிறு விவசாயிகள் மற்றும் 9 சதவீதம் பிற விவசாயிகள் முறையே 33 சதவீதம், 25 சதவீதம் மற்றும் 42 சதவீதம் நிலப்பரப்பினை கொண்டுள்ளனர். பிற விவசாயிகளின் நிலப்பரப்பு மாநில அளவில் சுமார் 34 சதவீதம் மட்டுமே உள்ளது.

மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் விளங்குகின்றன. நிகர நீர்பாசனப் பரப்பு சுமார் 2.43 லட்சம் ஹெக்டேராக உள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பில் 33.6 சதவீதம் மற்றும் நிகர சாகுபடி பரப்பில் 72 சதவீதம் ஆகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் வீடூர் அணைக்கட்டு மூலம் 18,553 ஏக்கர் பரப்பிலும், சாத்தனூர் அணைக்கட்டு மூலம் 35, 000 ஏக்கர் பரப்பிலும் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 1,060 மி.மீ. இதில் வடகிழக்கு பருவமழை மூலம் மட்டும் 638 மி.மீ (60சதவீதம்) மழை கிடைக்கப் பெறுகிறது.

நெல் இம்மாவட்டத்தின் பிரதான பயிராக விளங்குகிறது. சொர்ண வாரி, சம்பா மற்றும் நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் நெல் பயிரிடப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மொத்த பயிர் சாகுபடி பரப்பில் 40 சதவீதம் நெல் சாகுபடி செய்யப்பட்டது. அதாவது 1,02,644 ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டது. அடுத்தபடியாக நிலக்கடலை 28,887 ஹெக்டேர், எள். சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துகள் என 30,734 ஹெக்டர் அளவில் பயிரிடப்படுகிறது.

சிறுதானியத்தில் கம்பு 9,257 ஹெக்டரிலும் சோளம், கேழ்வரகு, திணை உள்ளிட்ட சிறுதானியப் பயிர்கள் என 10,812 ஹெக்டேரிலும், உளுந்து 32,441 ஹெக்டரிலும் பயிரிடப்படுகிறது. பாசிப்பயிறு, மொச்சை உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் 40,751 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. கரும்பு 15,384 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது.

நிலக்கடலை உற்பத்தியில் தமிழக அளவில் விழுப்புரம் மாவட்டம் 3 வது இடத்தில் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேரில் பனிப்பயிர் பயிரிடப்பட்டு முதலிடம் வகிக்கிறது. இப்பயிரை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் கொள்முதல் செய்கின்றனர். இதனை, ‘திண்டிவனம் பனிப்பயிர்’ என காப்புரிமை ( பேட்டர்ன் ரைட்) பெற அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என்று வேளாண் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த பனிப்பயிர்கள் வறுக்கப்பட்டு, இனிப்பகங்களில் விற்கப்படும் மிக்ஸரில் கலக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயத்தில் இந்த அளவுக்கு செழிப்பான ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் இருந்தாலும், கடந்த 15 ஆண்டுகளில் விவசாயத்தை ஒரு தொழிலாக எடுத்து நடத்தும் பெரும் பண்ணை நில விவசாயிகள் தொடங்கி எளிய விவசாயிகள் வரையில் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள இந்தச் சிக்கல் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகமாக உள்ளது.

“நகர்ப்பகுதிக்கு கட்டிட வேலை, ஹோட்டல் வேலைக்கு போக விரும்பும் தொழிலாளர்கள் விவசாய வேலைக்கு விரும்பி வருவதில்லை. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், பெயரளவுக்கு சென்று ஊதியம் வாங்கும் நிலை அதிகரித்துள்ளது. இதனால் வயல் வேலைகளுக்கான பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது.

இதை எதிர்கொள்ளும் வகையில் கொங்கு மண்டலத்தில் வேளாண் பணிகளில் இயந்திரங்களின் பயன்பாடு கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அவர்கள் அதைக் கொண்டு பணியாளர் பற்றாக்குறையை சரி செய்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் தொழில்நுட்பரீதியாக அப்படி எதுவும் மாறிவிடவில்லை.

கரும்பு வெட்ட, களை எடுக்க வேளாண் சார் பணிகள் கொட்டிக் கிடந்தாலும் இந்த வேலைக்காக வருவோர் வெகுவாக குறைந்து விட்டனர். தினமும் அதிகாலையில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் வடநாட்டவரை கல்குவாரி அதிபர்கள் இருகரம் கூப்பி வரவேற்கின்றனர். இந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை வரும் காலத்தில் பெரும் நெருக்கடியைத் தரும். ஒரு கட்டத்தில் இதற்குள்ளும் வடநாட்டவர் வரக்கூடும்” என்று விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

பருவ மழை பொய்த்து போவது, பயிர்க் காப்பீட்டுச் சிக்கல், தரமற்ற விதை விநியோகம், நிலத்தடி நீர் மட்டம் ஏறி இறங்குவது என அவ்வப்போது இம்மாவட்ட விவசாயிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தாலும், அந்தச் சிக்கல்கள் அடுத்தடுத்த பருவத்தில் சரி செய்யப்படுகின்றன. மீண்டும் தொடர்கின்றன. ஆனாலும், விவசாய பணிகளுக்கான பணியாளர் பற்றாக்குறையே பெரும் சிக்கலாக நீடிக்கிறது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தின் பெரும்பான்மை கிராமங்களில் பருத்தி சாகுபடி இருந்து வந்தது. தற்போது வெகுவாக குறைந்து விட்டது. கடந்த நிதியாண்டு முடிவில் 223 ஹெக்டர் நிலத்தில் மட்டுமே பருத்தி பயிடப்பட்டுள்ளது. நாள் தோறும் பருத்தி எடுக்க ஆட்கள் கிடைக்காததும் இதற்கு முக்கிய காரணமாகும். அதே நேரத்தில் இம்மாவட்ட விவசாயிகள் நெற்பயிர், கரும்பு உள்ளிட்ட பாதுகாப்பான பணப்பயிர்களையே பெரிதும் விரும்புகின்றனர். இதனாலும், பருத்தி உற்பத்தியில் முக்கிய இடத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

தொழில் வளர்ச்சியின்மை, செழிப்பாக இருந்த விவசாயம் சீர்கெட்டுப் போவது என பல சிக்கல்களைத் தாண்டி நமது மாவட்டம் இந்த 30-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. மேற்கண்ட சிக்கல்களைத் தாண்டி இன்னும் விழுப்புரம் மாவட்டம் குறித்த நமது பார்வை மற்றும் பலதரப்பட்டவர்களின் கருத்துகள் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில்...

முந்தைய அத்தியாயம்: விழுப்புரம் 30 | வளராத தொழில் துறையும், பேணப்படாத நீர்நிலைகளும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x