Published : 04 Oct 2023 04:44 PM
Last Updated : 04 Oct 2023 04:44 PM
விருதுநகர்: ‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் | வாய்நாடி வாய்ப்பச் செயல்’ - இந்த குறட்பாவில் நோயாளிக்கு வந்துள்ள நோய் என்ன? அதற்கான மூல காரணம் என்னவென்பதைக் கண்டறிந்து, அதைத் தீர்க்கும் மருந்தையும் கொடுத்து மருத்துவர் செயல்பட வேண்டும் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். இதுபோன்ற அரிய கருத்துகளை இன்றைய மருத்துவ மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் குறட்பாக்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன.
ரூ.390.22 கோடியில் கட்டப்பட்ட விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 2022 ஜனவரி 12-ல் திறக்கப்பட்டது. வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளைத் தாண்டி திருவள்ளுவருக்கு சிலை அமைத்துள்ளதோடு, வளாகம் முழுவதும் 150 குறட்பாக்களை எழுதி வைத்துள்ளது மாணவர்களைக் கவர்ந்துள்ளது.
மேலும், ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவைசிகிச்சையின் தந்தை என்று அழைக்கப்படும் சுஷ்ருதாவின் சிற்பம் மற்றும் அவரைப் பற்றிய குறிப்பு தமிழ், ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது.
இவர், 300 வகையான அறுவைசிகிச்சை நுட்பங்களின் முன்னோடியாகவும் இருந்தவர். அதில் கீறல்கள், ஆய்வுகள், மூலநோய் மற்றும் பிஸ்டுலாவுக்கான அறுவைசிகிச்சை, கண்புரை அறுவைசிகிச்சை போன்றவையும் அடங்கும். இக்குறிப்புகளுடன் சுஷ்ருதா சிகிச்சை அளிப்பது போன்ற சிற்பமும் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீன் சங்குமணி கூறியதாவது: மருத்துவத்தின் சிறப்பு குறித்து எடுத்துக் கூறியவர் திருவள்ளுவர். வட மாநிலத்திலிருந்து ஏராளமான மாணவர்கள் இங்கு வந்து படிக்கிறார்கள். அவர்களுக்கு திருவள்ளுவரைப் பற்றியும், திருக்குறளின் சிறப்புப் பற்றியும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. கல்லூரி வளாகத்தில் 150 இடங்களில் குறட்பாக்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. திருக்குறள் உலகப் பொதுமறை. அதை அனைவரும் படித்து அறிந்துகொள்ள வேண்டும்.
நாங்கள் மருத்துவம் படிக்கும் காலத்தில் அறிவியல் விஞ்ஞானிகள் பற்றி படித்தோமே தவிர அவர்களது புகைப்படங்களைப் பார்த்தது இல்லை. ஆனால், தலைசிறந்த மருத்துவ விஞ்ஞானிகளின் புகைப்படங்களையும் கல்லூரி வளாகத்தில் தொகுத்து வைத்துள்ளோம். மேலும், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுவைக்கப்பட்டுள்ளன. இன்னும் 5 ஆண்டுகளில் இந்த வளாகம் மரங்கள் நிறைந்த பசுமை வளாகமாக காட்சியளிக்கும் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT