Published : 04 Oct 2023 03:58 PM
Last Updated : 04 Oct 2023 03:58 PM
விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து, கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் பிரிந்து தனி மாவட்டமாக உருவானது. தற்போது இம்மாவட்டம் 30-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 29 ஆண்டுகளில் இம்மாவட்டம் பெற்றது என்ன..? பெறத்தவறியது என்ன..? என்பது குறித்து நமது சிறப்பு பகுதியில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றையை பார்வை...
தமிழகத்தில் எந்த மாவட்டத்துக்கும் இல்லாத சிறப்பு, விழுப்புரம் மாவட்டத்துக்கு உண்டு. புதிய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்; அதையொட்டி ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என 90 சதவீத அரசு அலுவலகங்களும் ஒருங்கிணைந்த மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் இடம் பெற்றுள்ளது. இதனால் மக்களின் அலைச்சல் வெகுவாக குறைகிறது.
விழுப்புரம், திண்டிவனத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள், முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, விழுப்புரத்தில் அரசு சட்டக்கல்லூரி, திண்டிவனம் அருகே தனியார் சட்டக்கல்லூரி, அரசு, தனியார் மகளிர் கல்லூரிகள், திண்டிவனம் அருகே வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவைகளும் இம்மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கின்றன. தற்போது வானூரில் அறிவிக்கப்பட்டுள்ள ஐ.டி பார்க் பணிகள் முழுமையாக முடிந்தால், அதையொட்டி இம்மாவட்டம் வளர்ச்சி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மதிப்பு கூடுதல் வரி, அதைத் தொடர்ந்து வந்த ஜிஎஸ்டி ஆகியவைகளால் தமிழகமும் புதுச்சேரியும் தொழில் தொடங்கும் சாத்தியக்கூறுகளில் தற்போது சமமான நிலையை அடைந்து விட்டது. அதற்கு முன் வரிச்சலுகையால் விழுப்புரம் அருகில் உள்ள புதுச்சேரி பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாயின. அருகில் உள்ள கடலூர் மாவட்டத்தில் துறைமுகம் இருந்ததால், சிப்காட் உருவானது.
மாவட்டங்கள் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில், கடலூரிலும் குறிப்பிடத்தக்க அளவில் கடந்த காலங்களில் தொழில் வளர்ச்சி இருந்து வந்துள்ளது. ஆனால், விழுப்புரம் மாவட்டம் இந்த கால கட்டத்தில் தொழில் துறை என்ற அளவில் வளரவே இல்லை. ஆட்சியாளர்களும் அதற்கான பெரிய அளவிலான முயற்சியை மேற்கொள்ளவே இல்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட மீன்பிடி துறைமுக பணிகளும் சட்டச் சிக்கலால் முடங்கி கிடக்கிறது. மரக்காணத்தில் குறிப்பிடும் வகையில் உப்பளம் இருந்தும், சாதாரண உப்பு பொட்டலமிடும் தொழிற்கூடங்கள் கூட கொண்டு வரப்படவில்லை. இங்குள்ள உப்பளத்தில் இருந்து உப்பு எடுத்துச் செல்லப்பட்டு, எங்கோ மதிப்பு கூட்டப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருக்கும் விழுப்புரம் மாவட்டத்தின் நிலையை உணர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில், திண்டிவனம் அருகே பெலாகுப்பம், கொள்ளார் மற்றும் வெண்மணியாத்தூர் ஆகிய கிராமங்களில் சுமார் 720 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு வரும் தொழிற்சாலைகள் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி மாறினாலும், இப்பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றன. இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ. 52 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தால் பணிகள் நடந்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியில் ஒருவித வெறுமை நிலவும் சூழலில் இது சற்று நம்பிக்கையைத் தருகிறது.
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில், வெண்மணியாத்துார் கிராமத்தில் சிட்கோ தொழிற்பேட்டை கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக இங்கு தொழிற்கூடங்கள் எதுவும் வரவில்லை. பெயருக்கு ஒன்றிரண்டு சிறு தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன.
இதனால் எந்த ஒரு பெரிய வளர்ச்சியும் இல்லை. அதே போல் மேற்கண்ட தொழில் பூங்கா திட்டம் ஆகி விடக்கூடாது என்ற வருத்தம் விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு இருந்து வருகிறது. தற்போதுள்ள சூழலில் விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள், வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்லும் நிலை தொடர்கிறது.
போக்குவரத்தைப் பொறுத்தவரையில் தமிழகத்தின் மையமான ஒரு இடத்தில் விழுப்புரம் இருப்பதால் போக்குவரத்து வளர்ச்சி பெற்று இலகுவாக உள்ளது. உரிய திட்டமிடல்களுடன் தொழில் வளர்ச்சி பூங்காக்கள், ஐ.டி. பூங்காங்களை திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு வந்தால் மேல்மருத்துவத்தூர் - திண்டிவனம் இடையே பரந்து கிடக்கும் வெற்றுப் பரப்பு வளம் கொழிக்கும் தொழிற்சார் சூழலாக மாறி விடும்.
பேணப்படாத நீர்நிலைகள்: விழுப்புரம் மாவட்டத்தின் நீர்நிலைகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் ஏரி, குளம் நீர்வளப்பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்வேங்கை.
“தற்போது தேசிய அளவில் 250 பின் தங்கிய மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டம் இருந்து வருகிறது. நிலத்தடி நீர் குறைந்த 5 மாவட்டங்களில் ஒன்றாகவும், குடிசைகள் நிறைந்த மாவட்டமாகவும் விழுப்புரம் உள்ளது. பிற மாவட்டங்களைப் போல் கடந்த காலங்களில் விழுப்புரம் மாவட்டத்திலும் நீர்நிலைகள் முறையாக பேணப்படவில்லை.
அண்ணா ஆட்சியின் போது கீழ்பெரும்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. அடுத்ததாக விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் பூந்தோட்டம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டது. புறவழிச்சாலை முத்தாம்பாளையம் ஏரிக்கு நடுவில் கொண்டு வரப்பட்டது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முண்டியம்பாக்கம் ஏரியை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளது. விழுப்புரம் நகர பாதாளச் சாக்கடை திட்டத்துக்காக கா.குப்பம், எருமணந்தாங்கல் ஏரி அழிக்கப்பட்டுள்ளது.
ஏரியை அழித்துவிட்டு அங்கு கட்டிடம் கட்டப்பட்டு, அங்கு மழைநீர் சேகரிப்பு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது உச்சக்கட்ட கொடுமை. நீர் நிலைகள் மீது அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை; தொலைநோக்கு பார்வையும் இல்லை. தென்பெண்ணையாற்று மணல் கொள்ளையடிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. நீர் நிலைகளை அழித்துவிட்டு வெளிமாநிலங்களில் தண்ணீருக்கு கையேந்துகிறோம்” என்று தமிழ்வேங்கை வருத்தம் தெரிவிக்கிறார்.
“விழுப்புரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதை தடுக்கும் முயற்சியாக 2015-ம் ஆண்டு கண்டம்பாக்கம், முத்தாம்பாளையம் கிராமங்களில் இரு ஏரிகளை தூர்வாரினோம். தொடர்ந்து மாவட்டத்தில் பல கிராமங்களில் மரங்களின் அவசியத்தை எடுத்துச் சொல்லி மரக்கன்றுகளை நட்டு, அதை பராமரிக்கும் பொறுப்பை, அந்தப் பகுதிகளில் உள்ள உரியவர்களிடம் வழங்கியிருக்கிறோம். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பனை விதைகளை நட்டு வருகிறோம்” என்றுவிழுப்புரம் மாவட்டத்தில் ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்து வரும் பணிகளை பட்டியலிடுகிறார் கரிகால சோழன் பசுமை மீட்புப்படை ஒருங்கிணைப்பாளர் அகிலன்.
“இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள இக்காலத்தில், அது சார்ந்த குற்றச் சம்பவங்களும் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. இணைய வழி பொருளாதார மோசடியில் அப்பாவிகள் பலர் சிக்கி வருகின்றனர். 3 -ம் எண் லாட்டரி உள்ளிட்ட மொபைல் சார்ந்த வணிக மோசடி குற்றங்கள் விழுப்புரத்தில் அதிகமாக உள்ளது.
இதுதொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதோடு, உரிய தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கிறார் இதுதொடர்பாக அறக்கட்டளை மூலம் கிராமப்புற மாணவர்களிடையே பிரச்சாரம் செய்து வரும் சமூக ஆர்வலர் உ.கார்க்கி. இப்படியாக விழுப்புரம் மாவட்டத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களின் பலதரப்பட்ட கருத்துகள் தொடர்கின்றன. அவற்றுடன் நமது பார்வையும் இணைந்து அடுத்தடுத்த நாட்களில் தொடர்கிறது.
முந்தைய அத்தியாயம்: விழுப்புரம் 30 | இரு மாவட்டங்களாகப் பிரிக்க வலியுறுத்தப்படுவது ஏன்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT