Published : 04 Oct 2023 03:42 PM
Last Updated : 04 Oct 2023 03:42 PM
புதுச்சேரி: புதுச்சேரி அண்ணா திடலில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மினி விளையாட்டு அரங்கம் கட்டும் பணி 75 சதவீதம் முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரி அண்ணா திடலில் ரூ.12 கோடியே 19 லட்சம் செலவில் மினி விளையாட்டு அரங்கம் கட்டும் பணி கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. அப்போதைய முதல்வர் நாராயணசாமி அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
ஏற்கெனவே அண்ணா திடலை சுற்றி 179 நகராட்சி கடைகள் இயங்கி வந்தன. இந்த கடைகளுக்கு புதுச்சேரி நகராட்சி சார்பில் மாதம் ரூ.1,000 வாடகை வசூலிக்கப்பட்டு வந்தது. அண்ணா திடலை சுற்றியுள்ள அனைத்து கடைகளும் அகற்றப்பட்டு, புதிய கடைகள் கட்டித்தர திட்டமிடப்பட்டதால் கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளை அகற்ற ஒத்துழைப்பு அளித்தனர். இதையடுத்து, அண்ணா திடலில் 14 ஆயிரத்து 435 சதுர மீட்டர் பரப்பளவில் மினி விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இங்கு விளையாட்டு வீரர்கள் தங்க தனித்தனியே 14 அறைகள், 1000 பேர் அமரும் வகையில் கேலரி, அலுவலகம், பயிற்சிக் கூடம், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கூறியதாவது: விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை விளையாட்டு அரங்கம், பார்வையாளர்கள் அமர்வதற்கான கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா திடலை சுற்றியும் கடைகள் அமைக்க தளங்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனாலும் எத்தனை கடைகளாக தடுப்பது? என்ன அளவில் பிரிப்பது? போன்ற பிரச்சினை நீடித்து வருகிறது. மேலும் கடை உரிமையாளர்கள் யார் என்பதை முடிவு செய்து உள்ளாட்சித்துறை வழங்கும்.
தற்போது வரை 75 சதவீதம் அளவுக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் அரங்கின் முகப்பில் ஆர்ச் ‘எலிவேஷன்’ பணி, மழைநீர் தேங்காமல் இருக்க ஒன்றரை அடி உயரத்துக்கு மண் கொட்டி நிரப்புவது, வர்ணம் பூசும் பணி உள்ளிட்ட பணிகள் எஞ்சியுள்ளன. அதுதவிர இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் விரைவில் முடிந்துவிடும். அண்ணா திடலை சுற்றியும் அமைக்கப்பட்டுள்ள கடைகளின் அளவு மற்றும் உரிமையாளர்கள் யார் என்பதை அரசு முடிவு எடுத்து கொடுத்துவிட்டால் இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விளையாட்டு அரங்கம் வழங்கப்படும். என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT