Published : 04 Oct 2023 01:42 AM
Last Updated : 04 Oct 2023 01:42 AM
புதுடெல்லி: உலகக் கோப்பை தொடரில் வரும் 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. இந்தப் போட்டியை ஆவலுடன் இரு நாட்டு ரசிகர்களும் எதிர்பார்த்து உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இந்தியாவை சேர்ந்த லியாகத் கான்.
இந்தப் போட்டியின் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த தனது 2 வயது பேத்தியை அவர் சந்திக்க உள்ளார். லியாகத் கானின் மகள் சாமியாவை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் ஹசன் அலி, கடந்த 2019-ல் திருமணம் செய்து கொண்டார்.
ஹரியாணா மாநிலம் நூ பகுதியில் உள்ள சாந்தேனி கிராமத்தை சேர்ந்தவர் லியாகத் கான். 63 வயதான அவர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பல்வேறு காரணங்களால் திருமணத்துக்கு பிறகு பாகிஸ்தானில் குடியேறிய தனது மகளை லியாகத் கான், சந்திக்க முடியவில்லை. இந்த சூழலில் அதை சாத்தியப்படுத்தியுள்ளது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி. ஹசன் அலி, உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ளார். காயமடைந்த நசீம் ஷாவுக்கு மாற்றாக அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் லியாகத் கானின் மகள் சாமியா பணிபுரிந்து வந்துள்ளார். துபாயில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலியை அவர் சந்தித்துள்ளார். இருவரும் பரஸ்பரம் காதலித்துள்ளனர். தங்களது காதல் குறித்து லியாகத் கானிடம் சாமியா தெரிவித்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. துபாயில் 2019-ல் ஹசன் அலி - சாமியா திருமணம் நடைபெற்றது. 2021-ல் இந்த தம்பதியர் தங்களது மகளை வரவேற்றுள்ளனர். இருப்பினும் திருமணத்துக்கு பிறகு பாகிஸ்தான் உள்ள தனது மகள் மற்றும் பேத்தியை லியாகத் கான் சந்திக்கவில்லை.
இந்த நிலையில்தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான உலகக் கோப்பை லீக் போட்டி அந்த வாய்ப்பை அவருக்கு அமைத்துக் கொடுத்துள்ளது. இதன் மூலம் தனது 2 வயது பேத்தி, மகள் மற்றும் மருமகன் ஹசன் அலியை அவர் சந்திக்க உள்ளார்.
வாய்ப்பு கிடைத்தால் நமது இந்திய அணி வீரர்களை சந்திக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். லியாகத் கான், கோலியின் தீவிர ரசிகர் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT