Published : 03 Oct 2023 07:24 PM
Last Updated : 03 Oct 2023 07:24 PM
விழுப்புரம்: ஒருங்கிணைந்த பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிந்து, கடந்த 30.09.1993-ல் உருவானது விழுப்புரம் மாவட்டம். 2023 செப். 30-ம் தேதி இம்மாவட்டம் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதைச் சிறப்பிக்கும் வகையில் மாவட்டத் தலைநகரான விழுப்புரத் தில் தனிப்பட்ட அமைப்புகளால் கொண்டாட்டங்கள் தொடங்கியிருக்கின்றன.
கடந்த 29 ஆண்டுகளில் இம்மாவட்டம் பெற்றது என்ன..? பெறத் தவறியது என்ன..? என்பது குறித்து நமது சிறப்பு பகுதியில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறோம். அதன் இன்றைய தொடர்ச்சி... விழுப்புரம் மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து மண்ணின் மைந்தரான பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறுகையில், “கடந்த கால ஆட்சிகளிலும், நடப்பு ஆட்சியிலும் கல்வித்துறை அமைச்சர்களாக பெரும்பாலும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான் இருந்திருக்கின்றனர். ஆனாலும், கல்வித்துறையில் விழுப்புரம் மாவட்டத்தை வளர்த்தெடுக்க என்று சிறப்பு கவனக்கூறுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இம்மாவட்ட மக்கள் பொருளாதார அகதிகளாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலும், வெளி மாநிலங்களிலும் வாழ்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் இன்று வரையிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. விழுப்புரம் போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் பணியாற்ற முன்வரும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
உள்ளூர்வாசிகளுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளித்தல், கற்றல்திறனில் தங்களது தனித்திறனை காட்ட முன்வரும் ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரச் சான்று, ஊக்கத் தொகை வழங்குதல் உள்ளிட்டச் செயல்களை செய்வதன் மூலம் ஓரளவுக்கு இப்பிரச்சினைகளை சரி செய்யலாம். ஆனால், இதை செய்ய தமிழக ஆட்சியா ளர்கள் முன்வருவதில்லை.
விழுப்புரம் மாவட்டத்துக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் சொல்லிக் கொள்ளும்படி தொழிற்சாலைகள் தொடங்கப்படவில்லை. தமிழகத்திலேயே விழுப்புரம் மாவட்டத்தில்தான் அதிக பரப்பிலான விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறியுள்ளன. பெரிதும் கண்காணித்து கட்டுப்படுத்தப்பட வேண்டிய விஷயம் இது.
விழுப்புரம் மாவட்டம் உண்மையாகவே வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் இது மேலும் பிரிக்கப்பட்டு விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகரங்களை தலைநகரங்களாகக் கொண்டு 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட வேண்டும்.
நீண்ட கள ஆய்வின்படியே இந்த கருத்தை முன்வைக்கிறோம். விழுப்புரம் மாவட்டத்தில், அதிக எண்ணிக்கையில் பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் தொடங்கப்படவேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் இந்த சீர்திருத்தங்கள் தொடங்கப்பட வேண்டும்; இதுவே என் விருப்பம்” என்கிறார்.
2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, எழுத்தறிவு விகிதத்தில் விழுப்புரம் மாவட்டம் 9-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் சராசரி எழுத்தறிவு விகிதம் 80.07 சதவீதம். ஆனால், விழுப்புரம் மாவட்டத்தின் எழுத்தறிவு விகிதம் 71.88 சதவீதம் மட்டுமே.
எழுத்தறிவு விகிதத்தில் முதலிடத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் (91.75) விழுப்புரம் மாவட்டத்துக்கும் இடையில் வித்தியாசம் கிட்டத்தட்ட 20 சதவீதம். கடந்த 12 ஆண்டுகளில் இந்த கணக்கெடுப்பு நடத் தப்படவில்லை. அவ்வாறு நடத்தப்பட்டாலும், மேற்கண்ட விகிதாச்சாரம் பெரிய அளவில் மாறியிருக்க வாய்ப்பில்லை என்றே கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பழங்கால வரலாற்றுச் சின்னங்கள், தடயங்கள் கிடைத்து வருகின்றன. இவற்றைப் பாதுகாப்பதற்கும், இளைய தலைமுறைக்கு காட்சிப்படுத்தவும், அரசு அருங்காட்சியகம் விழுப்புரத்தில் இல்லை, இது வரலாற்றுத் தேவையாகும்” என்று கூறுகிறார் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன்.
“தமிழகத்தை காங்கிரஸ் ஆண்டபோதுதான் விழுப்புரம் மாவட்டத்தில் வீடுர் அணை கட்டப்பட்டது. விழுப்புரம் நகராட்சியை உருவாக்கியது பெருந் தலைவர் காமராஜர், திராவிட ஆட்சிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் எந்த நீர்நிலைகளும் மேம்படுத்தப்படவில்லை.
நாட்டின் மிகப்பெரிய தலைவர்கள் தங்கிய விழுப்புரம் நகராட்சி சுற்றுலா மாளிகை அகற்றப்பட்டு, அங்கு நகராட்சி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. கடலூரில் உள்ளது போல டவுன் ஹால் ஒன்றை பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்க வேண்டும் விழுப்புரம் நகர மக்களின் நீண்டநாள் கோரிக்கை இது. அரசு இதை அலட்சியப்படுத்தி வருகிறது.
விழுப்புரத்தில் பெரிய விழாக்களை நடத்த, அரசே தனியார் கல்லூரிகளை நாடும் நிலை உள்ளது” என்கிறார் விழுப்புரம் நகரத்தைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான முன்னாள் மாவட்டத் தலைவர் குலாம் மொய்தீன். இப்படியாக விழுப்புரம் மாவட்டத்தில் அக்கறை கொண்ட மண்ணின் மைந்தர்கள், சமூக ஆர்வலர்கள், மாவட்ட நலனில் அக்கறை உள்ளவர்கள், அரசியல் தலைவர்களின் கருத்துகள் பரந்து விரிகின்றன. அவற்றுடன் நமது பார்வையும் சேர்ந்து, தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில்...
வாசிக்க > விழுப்புரம் 30 | மாவட்டம் உதயமான வரலாறும், சில பெருமித தருணங்களும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT