Published : 03 Oct 2023 07:19 PM
Last Updated : 03 Oct 2023 07:19 PM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தமிழிசை மூவர் மணிமண்டப சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. தமிழ் மொழி, தமிழ் இசை மற்றும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த, தமிழிசை மூவர் என்று அழைக்கப்படும் 16-ம் நூற்றாண்டில் சீர்காழியில் பிறந்த முத்துதாண்டவர், 18-ம் நூற்றாண்டில் தில்லையாடியில் பிறந்த அருணாசலக்கவிராயர், தில்லைவிடங்கனில் பிறந்த மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரின் நினைவாக, தமிழிசை மூவர் மணிமண்டபம் அமைக்கப்படும் என, 2000-ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அறிவித்தார்.
அதன்படி சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே, 0.44 ஏக்கர் பரப்பளவு இடத்தில், 358.80 சதுர மீட்டர் பரப்பில் 2010-ம் ஆண்டில் பணிகள் தொடங்கப்பட்டு, 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டன. 20.2.2013 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலம் இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்தார். மண்டபத்தின் முகப்பில் வெண்கலத்தாலான தமிழிசை மூவரின் முழு உருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளடைவில் இந்த மணிமண்டபம் சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால், சீரமைப்பு பணிக்காக ரூ.47.02 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது, பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இதில், மணிமண்டபத்தில் இருந்த சிலைகள் மெருகூட்டப்பட்டன. மண்டபத்தின் தரை தளத்தில் சலவைக் கற்கள் புதிதாக பதிக்கப்பட்டு, சுவர்களுக்கு வண்ணம் பூசப்பட்டுள்ளதால், மணிமண்டபம் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கிறது. மேலும், இங்கு மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆண், பெண்களுக்கான தனித்தனி கழிப்பறைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.
மணிமண்டபங்கள், நினைவு மண்டபங்கள் மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன்படும் நோக்கில் அரங்கங்களாக அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில், போட்டித் தேர்வெழுதும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் மண்டபத்தின் உள் அரங்கில் கணினி வசதி, இருக்கைகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இம்மண்டபத்தில் மக்களை ஈர்க்கும் வகையிலான அமைப்புகளை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் சம்பிரதாயமாக இல்லாமல் சிறப்பான வகையில் தமிழிசை விழா நடத்தப்பட வேண்டு்ம் என்று் தமிழ் ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து சீர்காழியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெக.சண்முகம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: சீர்காழியில் உள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் சிலைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதனால் மக்களை ஈர்க்கும் வகையிலான அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் சம்பிரதாயமான வகையில் 3 நாட்கள் தமிழிசை விழா நடத்தப்படுகிறது. அத்துடன் மண்டபம் மூடப்பட்டிருக்கும்.
இம்மூவரும் தமிழிசைக்கு வடிவம் கொடுத்தவர்கள். அதற்குரிய சான்றுகள், வரலாறுகள் ஏராளம் உள்ளன. இவை ஏதேனும் ஒரு வகையில் மண்டபத்துக்குள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். கர்நாடக இசைக்கு திருவையாறு எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோல, தமிழிசைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக சீர்காழி விளங்குகிறது.
எனவே, ஆண்டுதோறும் இங்கு 10 நாட்கள், ஏராளமான கலைஞர்கள் பங்கேற்கும் வகையில், தமிழிசை விழாவை சிறப்பான வகையில், நடத்துவதற்கான முன்னெடுப்புகளை அரசு மேற்கொள்ள வேண்டும். சுற்றுலாப் பயணிகள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் மணிமண்டபத்தை பார்வையிட்டுச் செல்லும் வகையிலும், அவர்களுக்கு் ஏதேனும் தகவல்களை தரும் வகையிலும் இம்மண்டபம் அமைய வேண்டும் என்றார்.
மண்டபத்தின் வெளிப்புற முகப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் எதுவும் இல்லாத வகையில், வெளிப்பகுதி சுற்றுச் சுவரையொட்டி பூங்கா, கம்பி வேலி அமைக்க வேண்டும். சாலையில் செல்வோர் பார்வையை ஈர்க்கும் வகையில் முகப்பு பகுதி அமைய வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT