Published : 01 Oct 2023 01:13 PM
Last Updated : 01 Oct 2023 01:13 PM
மதுரை: வழக்குகளில் விதிக்கப்படும் அபராதத் தொகையில் சட்டப் புத்தகங்களை கொள்முதல் செய்து மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதற்காக நூலகத்தில் சட்டப் புத்தகங்களை வைக்க தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
மதுரையில் ரூ.215 கோடியில் நவீன வசதிகளுடன் அமைந்துள்ளது கலைஞர் நூற்றாண்டு நூலகம். இந்த நூலகத்தின் அடித்தளத்தில் வாகன நிறுத்து மிடம், செய்தி - நாளிதழ் சேமிப்பு, நூல்கள் கட்டும் பிரிவு, தரைத் தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டுக்கூடம், ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கைப் பிரிவு,
முதல் தளத்தில் கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள் - பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவுகள் உள்ளன. மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளன.
நான்காவது தளத்தில், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான 30 ஆயிரம் புத்தகங்களுடனான பகுதி அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது தளத்தில் மின்னணுத் தொழில் நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுச் செல்வங்கள் அனைத் தையும் தருவதற்கான பகுதி உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆறாவது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணி யாளர்கள் சார்ந்த பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலகத்தை காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நூலகத்துக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து மதுரை உட்பட பல்வேறு தென் மாவட்டங்களிலிருந்து பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் வந்து கொண்டிருக்கின்றனர்.
மதுரையின் அடையாளமாக மாறிவிட்ட கலைஞர் நூலகத்தை சுற்றுலா தலம் போல் பாவித்து மக் கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் வளர்ச் சிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கிய பங்காற்ற தொடங்கி யுள்ளது. இந்த நீதிமன்றத்தில் மதுரை உட்பட 14 மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
இந்த வழக்குகள் தவறானதாக இருந்தாலோ, நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்தாலோ, உண்மையை மறைத்திருந்தாலோ சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதி பதிகள் குறிப்பிட்ட தொகையை அபராதமாகச் செலுத்த உத்தரவிடுவது வழக்கம். இவ்வாறு அபராதமாக விதிக்கப்படும் பணத்தை முதல்வர் நிவாரண நிதி, வழக்கறிஞர் சேம நல நிதி மற்றும் தொண்டு நிறுவனங்கள், ஆதர வற்ற முதியோர் இல்லங்கள், அரசு பள்ளிகளுக்கு வழங்க உத்தரவிடப்படும்.
கலைஞர் நூலகம் திறக்கப் பட்டதும் அபராதமாக விதிக்கப் படும் பணத்தை கலைஞர் நூலகத் துக்கு வழங்க நீதிபதிகள் முடிவு செய்தனர். இதற்காக உயர் நீதிமன்ற கிளை பதிவாளர் பெயரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு தனி வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. பெரும்பாலான நீதிபதிகள் அபராதம் விதிக்கப்படும் பணத்தை இந்த வங்கிக் கணக்கில் செலுத்துமாறு உத்தரவிடுகின்றனர்.
இவ்வாறு சேர்ந்த பணத்தில் உயர் நீதிமன்றம் சார்பில் சட்டப் புத்தகங்கள் வாங்கப்பட்டு கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு வழங்கப்பட்டன. இப்பணிக்காக உயர் நீதிமன்றத்தில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றக் கிளையில் இருந்துவரும் நிதியில் வாங்கப் படும் சட்டப் புத்தகங்களை வைப் பதற்காக கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 3-வது மாடியில் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதனை உயர் நீதிமன்ற நிர்வாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் திறந்து வைத்தார். இதில் நீதிபதிகள், நீதித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். உயர் நீதிமன்ற கிளை விதிக்கும் அபராதப் பணத்தில் வாங்கப்படும் சட்டப் புத்தகங்கள் இனி மேல் இந்த தனிப் பிரிவில் வைக்கப்பட்டு பொதுமக்கள் படிக்க அனு மதிக்கப்படுவர் என நூலக அதிகாரிகள் தெரிவித்தனர். நூலகத்தில் திறக்கப்பட்டுள்ள சட்டப் புத்தகப் பிரிவை பொதுமக்கள், வழக்கறிஞர்கள், மாணவ, மாணவிகள் ஆர்வமாக பார்வை யிட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT