Published : 30 Sep 2023 04:34 PM
Last Updated : 30 Sep 2023 04:34 PM

‘கேட்ராக்ட் லென்ஸ்’ தயாரிப்பில் உலகுக்கே வழிகாட்டும் மதுரை ‘ஆரோலேப்’

ரோபாட்டிக் மூலம் லென்ஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்.

மதுரை: ஆரோக்கியமான கண்களுக்குள் ஒளியானது தெளிவான லென்ஸ் வழியாகச் செல்லும். கண்புரை நோயாளி கண்களில் உள்ள லென்ஸ் வழியாக ஒளி சரியாக ஊடுருவாமல் மங்கலான பார்வை உண்டாகும். இந்த கண்புரை நோயைக் குணப்படுத்த மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்சைக்கு தேவையான ‘கேட்ராக்ட் லென்ஸ்’கள் தயாரிப்பில் மதுரை ‘ஆரோலேப்’ நிறுவனம் உலகளவில் முன்னோடியாகத் திகழ்கிறது.

அரசு மருத்துவராக இருந்து ஓய்வுபெற்ற ஜி.வெங்கடசாமி, மதுரையில் 1976-ம் ஆண்டில் சிறு மருத்துவமனையாக தொடங்கிய அரவிந்த் கண் மருத்துவமனைதான் இன்று உலகளவில் கண் மருத்துவத்துக்கும், கண்புரை அறுவைசிகிச்சைக்கும் புகழ்பெற்று விளங்குகிறது.

தமிழகத்தில் 12 இடங்களில் கண் மருத்துவமனைகளும், 124 இடங்களில் கண் பரிசோதனை மருத்துவமனை கிளைகளும் உள்ளன. இதுவரை 7.8 கோடி நோயாளிகளுக்கு சிகிச்சையும் 1 கோடி பேருக்கு அறுவை சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது.

வசதி படைத்தவர் மட்டுமின்றி ஏழை அடித்தட்டு மக்களும் கண்புரை அறுவைசிகிச்சையை மிக எளிதாகப் பெற முக்கியக் காரணம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையும் அதன் துணை நிறுவனமான ‘ஆரோலேப்’-ம் தான். கண்புரை அறுவைசிகிச்சைக்கான இந்த ‘லென்ஸ்’ 1980-90-ம் ஆண்டுகளில் 200 டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,000. வசதி படைத்தோர் மட்டுமே இந்த சிகிச்சையைப் பெற முடிந்தது. மற்றவர்கள் சாதாரண சிகிச்சையையே பெற முடிந்தது.

வசதிப்படைத்தோரைப்போல், பொருளாதாரத்தில் பின்தங்கியோரும் கண்ணுக்குள் லென்ஸ் பொருத்தக்கூடிய கேட்ராக்ட் கண்புரை நவீன சிகிச்சையைப் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகத்தால் தொடங்கப்பட்டதே ‘ஆரோலேப்’ நிறுவனம். மதுரை அருகே வீரபாஞ்சான் கிராமத்தில் உள்ள இந்நிறுவனத்தில் தயாரிக்கக் கூடிய லென்ஸ், மருந்துகள், உபகரணங்கள் நேபாளம், வங்கதேசம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள கடைக்கோடி கிராமங்களிலும்கூட கிடைக்கிறது.

பசுமை வளாகமாக காணப்படும் ‘ஆரோலேப்’பின் முகப்பு தோற்றம்.
படங்கள்: நா.தங்கரத்தினம்

இங்கு தயாரிக்கப்படும் கேட்ராக்ட் லென்ஸ், கண் மருந்துகள், கண் சிகிச்சை மைக்ரோ வாஸ்குலர் சர்ஜரி, பிளாஸ்டிக் சர்ஜரி, இதய அறுவைசிகிச்சைகளுக்கு பயன்படுத்தும் மைக்ரோ ஊசி, நூல் போன்றவை 130 நாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

‘ஆரோலேப்’ அறக்கட்டளைத் தலைவர் ஆர்டி.துளசிராஜ், நிர்வாக இயக்குநர் ராம் ஆகியோர் கூறியதாவது: ‘ஆரோலேப்’ தொடங்கியது சுவாரசியமானது. 1985-ல் அமெரிக்க, ஐரோப்பா நாடுகளில் கண்புரை அறுவைசிகிச்சை உயர் தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதற்கான தொழில்நுட்பமும், கண்ணுக்குள் பொருத்தப்படும் லென்சும் இந்தியாவுக்கு வரவில்லை.

அதற்கு லென்ஸ் விலை முக்கிய காரணம். கண்ணுக்குள் லென்ஸ் பொருத்தினால் கண்ணாடி போட வேண்டியதில்லை. சிறு வயதில் உள்ள பார்வை கிடைக்கும். 88, 89-ம் ஆண்டுகளில் இந்தியாவுக்குள் இந்த சிகிச்சை வரத் தொடங்கியது. எங்களால் இந்த சிகிச்சைக்கான லென்ஸ் அமெரிக்கா, ஜெர்மனியில் இருந்து வாங்கி வசதிப்படைத்தோருக்கு மட்டுமே பொருத்த முடிந்தது. அப்போது ஒரு லென்ஸ் ரூ.200 டாலராக இருந்தது.

அடித்தட்டு, நடுத்தர மக்கள், இதுபோன்ற சிகிச்சைகளை பெற முடியாதது உறுத்தலாகவே இருந்தது. அதனால் நாமே அந்த லென்சை தயாரித்தால் என்ன? என முடிவெடுத்தபோதுதான் ‘ஆரோலேப்’ உருவானது. இந்தியா போன்ற வளரும் நாட்டு மக்களுக்கு 10 டாலரில் இந்த லென்ஸை கொடுக்க முடிவு செய்தோம். லென்ஸ் விலை ரூ.300 ஆக இருந்தது. லென்ஸ் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்துக்காக

அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தைக் கண்டறிந்து இயந்திரம், பயிற்சியை வழங்க ஒப்பந்தம் செய்தோம். 1992 பிப்ரவரியில் அண்ணா நகர் அரவிந்த் கண் மருத்துவமனையில் லென்ஸ் தயாரிக்கக்கூடிய இந்த ‘ஆரோலேப்’ நிறுவனத்தை 2,500 சதுர அடியில் சிறிய கட்டிடத்தில் தொடங்கினோம்.

கழிவுநீரை சுத்திகரித்து நடக்கும் விவசாயம்.

முதலில் மருத்துவமனையின் தேவைக்காக நாளொன்றுக்கு 150 லென்ஸ் உற்பத்தி செய்ய திட்டமிட்டோம். தொடங்கிய 3 மாதத்திலேயே உற்பத்தியை இரு மடங்காக உயர்த்தினோம். அதன்பிறகு மற்ற மருத்துவமனைகளும் கேட்கவே உற்பத்தியை அதிகரித்தோம். ஒரு கட்டத்தில் இந்த இடம் போதுமானதாக இல்லை. அதனால், 2007-ம் ஆண்டில் வீரபாஞ்சானில் 45 ஏக்கரில் 20 லட்சம் சதுர அடியில் தொடங்கினோம். 2007-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 3 ஆயிரம் லென்ஸை உற்பத்தி செய்தோம். தற்போது கூடுதலாக ‘ஆரோலேப்’ ஒரு லட்சம் சதுர அடியில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது, என்று கூறினர்.

லென்ஸ் தயாரிக்கும் ‘ரோபாட்டிக்’ - தற்போது நாளொன்றுக்கு 10 ஆயிரம் லென்ஸ் வீதம் ஆண்டுக்கு 30 லட்சம் லென்ஸ் தயாரிக்கப்படுகிறது. உலக அளவில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் லென்ஸில் 10 சதவீதம் மதுரை ‘ஆரோ லேப்’ நிறுவனத்தின் தயாரிப்பாகும். இது கண் மருந்து, அறுவை சிகிச்சை பொருட்கள் தயாரிப்பில் 20 சதவீதமாகும். மொத்த உற்பத்தியில் 50 சதவீதம் வெளிநாடுகளுக்கும், 50 சதவீதம் நம் நாட்டிலும் விற்கப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ.300 கோடிக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. லென்ஸ் தயாரிப்பில் இந்த ஆய்வகத்தில் முழுக்க முழுக்க ‘ரோபாட்டிக்’களை பயன்படுத்தி உயர் தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. கிராமப்புறங்களில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு படித்த பெண்களுக்கு பயிற்சி கொடுத்து இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x