Published : 28 Sep 2023 04:58 PM
Last Updated : 28 Sep 2023 04:58 PM

கண்களை கட்டிக்கொண்டு சாகசம் புரிந்த நெல்லை மாணவி!

கண்களை கட்டிக்கொண்டு யோகாசனம் செய்தபடி சதுரங்கம் விளையாடும் மாணவி பிரிஷா. படம் : மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுதல், 20 நொடிகளில் வாமதேவ ஆசனத்தில் அதிக பொருட்களை அடையாளம் காணுதல் உட்பட ஒரே நாளில் 30 சாகசங்களை இளம் யோகா ஆசிரியர் பிரிஷா செய்து காண்பித்து சாதனை படைத்தார்.

திருநெல்வேலி வண்ணார்பேட்டை கார்த்திகேயன் - தேவிப்பிரியாவின் பிரிஷா (14). 9-ம் வகுப்பு படித்து வரும் இவர் 2 வயதில் இருந்தே யோகாசனங்கள் கற்று இதுவரை பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். 200-க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்கள், கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள், விருதுகளையும் பெற்றுள்ளார்.

உலகிலேயே இளம் வயதில் அதிக உலக சாதனைகள், யோகாசனங்கள், நீச்சல் மற்றும் கண்களைக் கட்டிக் கொண்டு பல திறமைகளை செய்து சாதனை படைத்துள்ள இவருக்கு யு.எஸ்.ஏ குளோபல் யுனிவர்சிட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது. இளம் வயதிலேயே 3 முனைவர் பட்டங்களையும் முதன் முறையாக பெற்றவர். மேலும் இளம் வயது யோகா ஆசிரியர் என்ற சான்றிதழை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்நிலையில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரி அரங்கில் 100-வது சாதனை நிகழ்ச்சியாக கண்களை கட்டிக்கொண்டு 30 சாகசங்களை செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். நோபல் வேல்டு ரெகார்ட் நிறுவனத்தை சேர்ந்தவர்கள், மாணவ, மாணவிகள் முன்னிலையில் 20 நொடிகளில் கண்களை கட்டிக்கொண்டு வாமதேவ ஆசனத்தில் அதிக பொருட்களை அடையாளம் காணுதல், கண்களைக் கட்டிக் கொண்டு திரையில் தெரியும் ஆசனங்களை மிக வேகமாக செய்வது, சக மாணவியின் உடலில் கட்டப்பட்டுள்ள பலூன்களை உடைத்தல், அதிக தூரம் சைக்கிள் ஓட்டுதல் என்று இவர் செய்த சாகசங்களை நோபல் வேல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது.

பிரிஷா கூறியதாவது: பார்வையற்றவர்களுக்கு யோகாசனம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக பணிபுரிகிறேன். 70 சாதனைகள் செய்துள்ள நிலையில் 100 சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்ற இலக்குடன் இன்று ஒரே நாளில் 30 சாதனைகள் செய்து, எனது 100 சாதனைகள் இலக்கை பூர்த்தி செய்துள்ளதில் மகழிச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x