Published : 25 Sep 2023 04:02 AM
Last Updated : 25 Sep 2023 04:02 AM
மதுரை: தியாக உணர்வுடன் பணிபுரியும் மருத்துவர்களை காலம் உள்ள வரை மக்கள் மறக்கமாட்டார்கள். மருத்துவர்களின் சேவையை நாடும், நாட்டு மக்களும் நிச்சயம் பாராட்டுவார்கள் என வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறினார்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் மருத்துவப் பணியை சேவை மனப்பான்மையோடும், அர்ப்பணிப்போடும் செய்துவரும் மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதுகள் கடந்த இரண்டாண்டுகளாக வழங் கப்பட்டு வருகின்றன.
மூன்றாவது ஆண்டாக டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை – மருத்துவ நட்சத்திரம்- 2023’ விருதுகள் வழங்கும் விழா மதுரையில் இந்திய மருத்துவ சங்க (ஐஎம்ஏ) அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்கம் - தமிழ்நாடு, ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ், யுனைடெட் எஜுகேஷனல் அண்ட் சோஷியல் வெல்பர் டிரஸ்ட் ஆகியவை இணைந்து இவ்விழாவை நடத்தின.
மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 105 மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது மற்றும் 3 மருத்துவர்களுக்கு ‘முன் மாதிரி மருத்துவர்’ விருதை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கிப் பேசியதாவது:
சிறப்பு மிக்க மருத்துவ நட்சத்திரங்களை கவுரவிக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை நாளிதழ்’ நடத்தும் இந்த நிகழ்வு பெருமைக்குரியது. தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத் தலைவர் பேசும்போது, மருத்துவர்களைப் பாராட்டும் நிகழ்வுகள் அவ்வளவாக நடைபெறுவது இல்லை என்றார். இதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு.
நோயாளிகள் மட்டும் அல்ல, வாழும் அனைவரும் தான் வணங்கும் கடவுளுக்கு அடுத்தபடியாக, அவர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு வரும்போது மருத்துவர்களை நினைக்கிறார்கள் என்பது தான் உண்மை. தமிழகத்தில் 2019-ல் கரோனாகாலத்தில் தன் உயிரை பொருட்படுத்தாமல், குடும்பங்களைப் பொருட்படுத்தாமல் தியாக உணர்வுடன் பல ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றியவர்கள் மருத்துவர்கள்.
அந்த மருத்துவர்களின் சேவைக்கு இணையாக, ஒப்பாக யாரைச் சொல்ல முடியும். மக்களுக்காக சேவையாற்ற மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணிபுரிகின்றனர். இரவு தூக்கத்தையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளுக்காக சேவைபுரிபவர்கள்தான் மருத்துவர்கள். இன்ப, துன்பங்களுக்கு அப்பாற்பட்டு சேவையாற்றுகிறார்கள்.
அப்படிப்பட்ட மருத்துவர்களைப் பாராட்டி விருது வழங்கும்இந்நாளை என் வாழ்நாளில் பொன்னாளாக கருதுகிறேன். ஏனென்றால் பல ஆயிரக் கணக்கான உயிர்களை காப் பாற்றுபவர்களை கவுரவிக்கும் விழாவில் கலந்துகொள்வதைவிட வேறு பெருமை இருக்க முடியாது. அரசியல் வாதிகள், அதிகாரிகள் யாராக இருந்தாலும் மருத்துவர்களின் சேவையை வேறு யாராலும் செய்ய முடியாது.
மருத்துவர்களை லட்சக் கணக்கான மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். குமரி மாவட்டம் முதல் அரியலூர் மாவட்டம் வரை மருத்துவர்கள் வந்துள்ளனர். தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு இங்கு வந்துள்ளார்கள். சரியானவர்களைத் தேர்வு செய்து கவுரவித்துள்ளீர்கள். இது ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்குப் பெருமை சேர்க்கும்.
மருத்துவர்களை மக்கள் ஒவ்வொரு நேரமும் நினைப்பார்கள். மருத்துவர்களின் சேவையை நிச்சயமாக மக்கள் மதிப்பார்கள். கரோனா காலத்தில் தமிழக முதல்வர் தனது உயிரை துச்ச மென மதித்து கரோனா வார்டுக்கு நேரில் சென்றார். இந்தப் பெருமை மருத்துவர்களைத்தான் சேரும். கரோனா காலத்தில் சில மருத்துவர்கள் உயிர் தியாகம் செய்தனர்.
அந்த மருத்து வர்களை காலம் உள்ள வரை மக்கள் மறக்கமாட்டார்கள். மருத்துவர்களின் சேவையை நாடும், நாட்டு மக்களும் நிச்சயம் பாராட் டுவார்கள். இவ்வாறு அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில் ‘இந்து தமிழ் திசை’ பொதுமேலாளர் டி.ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment