Published : 22 Sep 2023 03:11 PM
Last Updated : 22 Sep 2023 03:11 PM
ராமேஸ்வரம்: ராமேசுவரம் அருகே மண்டபம் கடற்பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய கடல் வாழ் நுண்ணுயிருக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டார்டிகிரேட்ஸ் (Tardigrade)என்பது சின்னஞ்சிறிய நீர் வாழ் நுண்ணுயிர்கள் ஆகும். இதை வெறுங்கண்ணால் பார்க்க இயலாது நுண்நோக்கி உதவியுடன்தான் இதைப் பார்க்க முடியும். இவை அரை மில்லி மீட்டரிலிருந்து அதிகப்பட்சமாக ஒன்றரை மில்லி மீட்டர் வரை வளரக்கூடியது. இவற்றிற்கு 'நீர்க் கரடிகள்' என்ற பட்டப்பெயரும் உண்டு.
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கடல் உயிரியல், நுண்ணுயிரியல் மற்றும் உயிர் வேதியியல் துறை தலைவர் பேரா.எஸ்.பிஜோய் நந்தன் ஆராய்ச்சி மாணவர் கே. விஷ்ணுதத்தன் ஆகிய இருவரும் புதிய வகை கடல் வாழ் டார்டிகிரேட்ஸ் நுண்ணுயிரை ராமேசுவரம் அருகே மண்டபம் கடற்பகுதியில் அண்மையில் கண்டறிந்தனர். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவாக இந்த உயிரினத்திற்கு 'பாட்டிலிப்ஸ் கலாமி' என அவர்கள் பெயர் சூட்டி உள்ளனர்.
இது குறித்து பேராசிரிய எஸ்.பிஜோய் நந்தன் கூறும்போது, ''இந்திய கடல் பகுதியில் கடல்வாழ் டார்டிகிரேட்ஸ் நுண்ணுயிரை 2021ம் ஆண்டு முதன்முறையாக கேரளாவிலுள்ள வடகராவில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியான ராமேசுவரம் அருகே மண்டபம் கடற்பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பாட்டிலிப்ஸ் கலாமி சராசரியாக 170 மைக்ரோமீட்டர்கள் (0.17 மிமீ) நீளமும், சுமார் 50 மைக்ரோமீட்டர்கள் (0.05 மிமீ) அகலமும் கொண்டது. இதன் தலை சரிவகம் போன்று உள்ளது. அதிலிருந்து நீட்டிக்கப்பட்ட கூர்மையான நுனி கொண்ட இழை போன்ற இணைப்புகள் உள்ளன. நான்கு ஜோடி கால்களும், வெவ்வேறு நீளம் கொண்ட உணர்ச்சி முதுகெலும்புகளும் இதற்கு உள்ளன. இதில் பெண் இனம் ஆண் இனத்தை விட சற்று பெரியதாக இருக்கும்.
அப்துல் கலாமின் சொந்த ஊரான ராமேசுவரவரத்திற்கு அருகில் கண்டுப்பிடிக்கப்பட்டதால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான கலாமின் அர்ப்பணிப்புக்காக இந்த உயிரினத்திற்கு கலாமின் பெயரை சூட்டியுள்ளோம்'' என்றார். இந்த கண்டுபிடிப்பு சூடாக்சா எனும் விலங்கியலுக்கான சர்வதேச அறிவியல் ஆய்விதழில் தற்போது வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT