Published : 20 Sep 2023 09:08 PM
Last Updated : 20 Sep 2023 09:08 PM
மேயர் பிரியா: சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியல் இனப் பெண் மேயர் என்கிற பெருமையைப் பெற்ற பிரியா ராஜன் பதவியேற்றது முதலே பரப்பரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் மூலம் சாமானிய மக்களுடன் நெருங்கிய தொடர்ப்பை ஏற்படுத்திப் பல்வேறு நலத் திட்டப் பணிகளை அவர் முன்னெடுத்து வருகிறார். சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஞெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில் ‘மீண்டும் மஞ்சப்பை’ குறித்த விழிப்புணர்வையும் மக்களிடம் தீவிரமாக ஏற்படுத்தி வருகிறார்.
நிகர் சாஜி: தமிழகத்தைச் சேர்ந்த நிகர் சாஜி ஆதித்யா-1 திட்ட இயக்குநராகச் சிறப்பாகப் பணியாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். 1987இல் இஸ்ரோவில் பணியில் இணைந்த நிகர் சாஜி 36 ஆண்டுகளாக அங்குப் பணிபுரிந்து வருகிறார். அரசுப் பள்ளியில் படித்தவர் ஆதித்யா விண்கலத்தை ஏவும் அளவுக்கு உயர்ந்துள்ளது, ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெருமைப்படச் செய்துள்ளது.
பி.வி.சிந்து: இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் இரண்டாவது முறையாக பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தவர். அத்துடன் ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண் என்கிற மகத்தான சாதனைக்கும் அவர் சொந்தக்காரர். சாய்னா நேவாலுக்கு அடுத்து பாட்மிண்டனில் இந்தியா முழுவதும் அறியும் முகமாக மாறிப்போன சிந்துவுக்கு ஒலிம்பிக் வெற்றிகள் இந்திய விளையாட்டுத் துறையில் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தன.
திரெளபதி முர்மு: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவரான திரௌபதி முர்மு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்ட திரெளபதி முர்மு இந்தியாவின் முதல் பழங் குடியினப் பெண் குடியரசுத் தலைவர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல், சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வரும் திரெளபதி முர்மு அடைந்த உயரம் இந்தியப் பெண்களுக்கான உந்துவிசையாகவே பார்க்கப்படுகிறது.
மஹுவா மொய்த்ரா: திரிணமுல் காங்கிரஸின் எம்.பியான மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் எதிர்க்கட்சிகளின் வலுவான குரலாக ஒலித்து வருகிறார். திரிணமுல் காங்கிரஸின் பிரபல முகமாக அறியப்பட்டு வரும் மஹுவா சிறுபான்மையினர், பெண்களுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பியதன் மூலம் அக்கட்சியின் சக்திமிக்க நபராகவும் மாறியுள்ளார்.
அவனி சதுர்வேதி: இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானியான அவனி சதுர்வேதி. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவனி ஐதராபாத்தில் ஹக்கிம்பேட்டில் உள்ள விமானப் படைத்தளத்தில், கிரண் பைட்டர் ஜெட் வகை விமானத்தை ஓட்டிப் பயிற்சி மேற்கொண்டவர். ஒரு வருடத் தீவிரப் பயிற்சிக்குப் பிறகு போர் விமானத்தைத் தனியாக இயக்கிச் சாதனை படைத்தார். இந்திய விமானப்படையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள இவர் வெளிநாட்டுப் போர் பயிற்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார்.
தயாமணி பார்லா: ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த தயாமணி பார்லா பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக நீண்டகாலமாகப் போராடி வருகிறவர். வீட்டுப் பணிப்பெண்ணாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய தயாமணி தற்போது பத்திரிகையாளராகவும் சமூகச் செயற்பாட்டாளராகவும் களத்தில் இயங்கி வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசிகளின் நிலத்தைப் பெருநிறுவனக் கொள்ளையடிப்பிற்கு எதிரான தனது உறுதியான எதிர்ப்பின் மூலம் தயாமணி இந்தியா முழுவதும் அறியும் முகமாகி இருக்கிறார்.
பெள்ளி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவிலேயே பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஒவ்வொரு யானையும் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாகன், காவடியால் (பராமரிப்பாளர்) பராமரிக்கப்பட்டு வருகின்றது. முகாம்களில் உள்ள யானைகளைத் தனிக்கவனத்துடன் அவர்கள் பராமரித்து வருகின்றனர். இதில் காவடியாக ஆண்களே பெரும்பாலும் நியமிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ஆஸ்கர் விருதுவென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ என்கிற ஆவணப்படம் மூலம் பிரபலமான பெள்ளி நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ராதிகா வெமுலா: ரோஹித் வெமுலாவின் மரணத்துக்குப் பிறகு அவரது தாயாரான ராதிகா வெமுலா சாதியப் பாகுபாடுகளுக்கு எதிரான வலுவான குரலாக அறியப்படுகிறார். குறிப்பாகப் பல்கலைகழகங்கள், உயர்நிலைக் கல்வி நிலையங்களில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்க முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
கிரேஸ் பானு: பொறியியல் படிப்பில் இந்தியாவின் முதல் திருநங்கையாகத் தேர்ச்சி பெற்றவர் கிரேஸ் பானு. திருநங்கைச் செயற்பாட்டாளராக எல்ஜிபிடி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை கிரேஸ் பானு செய்து வருகிறார். எல்ஜிபிடி சமூகத்திற்குத் தொடரும் பிரச்சினைகள், அதற்கான போராட்டங்கள், பாதிப்புகளை, பாதித்த சம்பவங்களைக் கட்டுரைகளாகவும் இவர் எழுதுகிறார். ‘திருநங்கை கிரேஸ் பானுவின் சிந்தனைகள்’ என்னும் புத்தகத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
- எல்னாரா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT