Published : 19 Sep 2023 04:49 PM
Last Updated : 19 Sep 2023 04:49 PM
மேம்படும் கல்வித் தரம்: தமிழ்நாட்டில் கடந்த ஒரு சில ஆண்டுகளில் கல்வித் தரத்தையும் கற்றல் அடைவுகளையும் மேம்படுத்துவதற்கான சீர்திருத்தத் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை. கரோனா காலத்தில் நேர்ந்த கற்றல் இழப்புகளைச் சரி செய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு மாணவர்கள் வசிக்கும் இடத்துக்குச் சென்று பாடம் கற்பிக்கும் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது.
மாணவர்களிடம் நூல் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டது வாசிப்பு இயக்கம். இதற்காக 53 சிறு நூல்களை அரசு அச்சிட்டுள்ளது. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மாணவர்களின் கல்வி தடை இன்றித் தொடர்வதற்கும் அவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் களையப்படுவதற்கும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீட்டில் இந்தியாவுக்கே முன்னோடியான இத்திட்டம் கடந்த ஆண்டு பகுதி அளவில் தொடங்கப்பட்டு, தற்போது அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பெண்களின் தற்சார்பு: திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம், 2021 தேர்தலில் வென்று திமுக ஆட்சி அமைத்தவுடன் செயல்படுத்தப்பட்டது. இதன்மூலம் பெண்களுக்கு மாதச் செலவில் சராசரியாக ரூ.888 மிச்சம் ஆவதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. திமுகவின் இன்னொரு தேர்தல் வாக்குறுதியான இல்லத்தரசிகளுக்கான உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 அளிக்கும் திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தில் பயனடைவதற்கான தகுதிகள் வரையறுக்கப்பட்டு 1.06 கோடிக் குடும்பத் தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இரண்டு திட்டங்கள் குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் இவை இரண்டுமே பெண்களின் பொருளாதாரத் தற்சார்பை மேம்படுத்தும் என்பதை மறுத்துவிட முடியாது.
வாசிப்புக் கொண்டாட்டம்: ஒவ்வோர் ஆண்டும் சென்னையில் மட்டும் பிரம்மாண்டமான புத்தகக் காட்சி நடைபெற்றுவந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்துவதற்கு ரூ.4.96 கோடி ஒதுக்கப்படுவதாகத் தமிழக அரசு 2022இல் அறிவித்தது. அதோடு இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னைப் புத்தகக் காட்சியுடன் இணைந்து முதல் முறையாகச் சர்வதேசப் புத்தகக் காட்சியும் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அயல் பதிப்பகங்களுக்கும் தமிழ்ப் பதிப்பகங்களுக்கும் இடையே புத்தகங்களை மொழிபெயர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. புத்தகக் காட்சிகளைத் தாண்டிச் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போல் மதுரையில் கலைஞர் நூலகம் பிரம்மாண்டமாக அதிநவீன வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ளதும் புத்தக நேசர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வேலை, சுயதொழில் வாய்ப்புகள்: இளைஞர்களுக்கான சுயதொழில், வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தனியார் நிறுவனப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்படுகின்றன.
ஆதி திராவிட, பழங்குடியின இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தாட்கோ நிறுவனம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.2.25 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 0
பயணத்தை எளிதாக்கும் மெட்ரோ: சென்னை மாநகரில் குறிப்பிட்ட பகுதிகளிலேனும் பொதுப்போக்குவரத்துப் பயணத்தை எளிதாக்கிவருகிறது மெட்ரோ ரயில் திட்டடம். இத்திட்டத்தின் முதல் கட்டம் இரண்டு வழித்தடங்களில் செயல்பட்டுவருகிறது. 2021இல் இவற்றில் ஒரு வழித்தடம் மேலும் 9 கி.மீ.க்கு நீட்டிக்கப்பட்டது. 116.1 கி.மீ.களில் நான்கு வழித்தடங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்டப் பணிகள் தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவருகின்றன.
இது சென்னையின் நான்கு திசைகளில் உள்ள பகுதிகளையும் இணைப்பதற்கானது. மதுரை உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று 2021இல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மதுரை மெட்ரோவுக்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
முடிவுக்கு வந்த சிறைவாசம்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைப்புபெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரும் 2022இல் விடுதலை ஆயினர். ஆளுநரின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன்னை விடுவிக்கக்கோரி தமிழ்நாடு ஆளுநருக்கு பேரறிவாளன் அனுப்பியிருந்த மனுவின் மீது முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியதைச் சுட்டிக்காட்டி, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே பேரறிவாளனை விடுவிப்பதாக 2022 மே 18 அன்று தீர்ப்பு வழங்கியது. பேரறிவாளனைப் போல் பிற ஆறு பேரையும் விடுவிக்கவும் 2022 நவம்பர் 11இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மூலம் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் 31 ஆண்டு காலச் சிறைவாசம் முடிவுக்கு வந்தது.
விரிவடையும் திருநர்களின் வெளி: 2021இல் விரிவுபடுத்தப்பட்ட வழித்தடத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏழு திருநங்கைகளும் ஆறு திருநம்பிகளும் பணியமர்த்தப்பட்டனர். இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியைப் பெற்றார் திருநங்கை ஸ்ருதி. 2020 உள்ளாட்சித் தேர்தலில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழு இரண்டாவது வார்டில் திமுக சார்பில் நிறுத்தப்பட்ட திருநங்கை வேட்பாளர் ரியா வெற்றிபெற்றார். 2022 சென்னைப் புத்தகக் காட்சியில் முதல் முறையாக திருநர்களுக்கென்று ஒரு புத்தகக் கடை ஒதுக்கப்பட்டது. இப்படியாகத் தமிழ்நாட்டில் திருநர்கள் பொதுச் சமூகத்தினருடன் கலப்பதற்கான நம்பிக்கை அளிக்கும் நிகழ்வுகள் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்றன.
காட்சி ஊடகங்களில் தமிழ்: கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுகளை ஒளிபரப்பும்போது தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வர்ணனை தருவதைப் பெரும்பாலான முன்னணித் தொலைக்காட்சி அலைவரிசைகள் பின்பற்றுகின்றன.
கடந்த ஒரு சில ஆண்டுகளில் யூடியூப், இன்ஸ்டகிராம், ஓடிடி என அனைத்துக் காட்சி ஊடக வகை மாதிரிகளிலும் தமிழ் உள்ளடக்கங்களும் பிற மொழி உள்ளடக்கங்கள் தமிழ் சப்டைட்டிலுடனோ தமிழில் மொழிபெயர்க்கப்பட்டோ வெளியிடப்படுவதும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ஓடிடிக்களில் பல சர்வதேச, இந்திய மொழித் திரைப்படங்களும் இணையத் தொடர்களும் தமிழில் காணக் கிடைக்கிறது. அந்த வகையில் காட்சி ஊடகங்களில் தமிழ் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறது.
தமிழில் நகைச்சுவை நிகழ்த்துக் கலை: காட்சி ஊடகங்களில் தமிழ் அதிகரித்திருப்பதன் நீட்சியாக சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களுக்கு மட்டுமேயான கோட்டையாக இருந்துவந்த ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்த்துக் கலையில் கடந்த சில ஆண்டுகளில் பல தமிழ் இளைஞர்கள் கவனம் ஈர்த்துவருகின்றனர்.
ஆங்கில ஸ்டாண்ட் அப் காமெடியில் புகழ்பெற்ற அலெக்ஸாண்டர் பாபு, பிரவீண் குமார், மெர்வின் ரொஸாரியோ, ஜகன் கிருஷ்ணன் உள்ளிட்டோர் முற்றிலும் தமிழ் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை வழங்கத் தொடங்கினர். ராம்குமார் நடராஜன், ஷ்யாமா ஹரிணி, மாயாண்டி கருணாநிதி எனத் தமிழில் மட்டுமே ஸ்டாண்ட் அப் காமெடி செய்யும் கலைஞர்களுக்கான வரவேற்பும் அதிகரித்துவருகிறது.
உணவுப் பரவலும் பெருக்கமும்: குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியவை என்று இனி எந்த உணவுப் பொருளையும் சொல்லிவிட முடியாத நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. வட சென்னையின் பிரபலமான பர்மிய உணவான அத்தோ தொடங்கி திருநெல்வேலியின் தனிச் சிறப்பான அல்வா வரை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கிடைத்துவந்த சிறப்பு உணவுகள் இப்போது தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கும் வகையில் உணவு வணிகச் சங்கிலி மாற்றம் அடைந்துள்ளது.
வடநாட்டு சாட் வகைகள், பீட்ஸா, பாஸ்தா, மோமோஸ் உள்ளிட்ட சர்வதேச உணவுப் பொருள்கள் சென்னை உள்ளிட்ட நகரங்களின் தின்பண்டக் கடைகளில் சக்கைபோடு போடுகின்றன. தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் இருக்கும் அதிகப் புகழடையாத அதே நேரம் தரமான உணவு வகைகளைத் தரும் உணவகங்களை அடையாளம் கண்டு வெளிச்சமிட்டுக் காட்டும் ஃபுட்டி கலாச்சாரம், தமிழ் இளைஞர்கள் பலரை உணவுப் பிரியர்களாகவும் விமர்சகர்களாகவும் ஆக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT