Published : 19 Sep 2023 04:01 PM
Last Updated : 19 Sep 2023 04:01 PM
உலகின் மிக உயரம்கொண்ட (8,850 மீட்டர்) எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ்ப் பெண் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் முத்தமிழ் செல்வி. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்த இவர், இரண்டு குழந்தைகளுக்குத் தாய். மலையேற்றத்துக்காகத் தொடர் பயிற்சி மேற்கொண்டு வந்த முத்தமிழ், கடுங்குளிரை சமாளித்து, சவாலான பாதையைக் கடந்து இந்த ஆண்டு மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிச் சாதனைப் படைத்தார்.
இளைய தலைமுறையின் நாயகன்: 2012இல் ‘3’ திரைப்படத்தி லிருந்து அனிருத்தின் திரையிசைப் பயணம் தொடங்கியது. இப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் அதிரி புதிரி ஹிட்டானது. இப்படத்தில் தொடங்கி அவர் இசையமைத்த மற்ற திரைப்படப் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.
அனிருத் குரலில் ஒலிக்கும் பாடல்களுக்கெனத் தனி ரசிகப் பட்டாளமும் உண்டானது. திரைத் துறையில் பத்தாண்டுகளை நிறைவுசெய்திருக்கும் அனிருத், இந்திய அளவில் இளைய தலைமுறையின் இசை நாயகனாக உருவெடுத்திருக்கிறார்!
இளம் மேயர்: 2020இல் கேரள மாநிலம் முடவன்முகல் வார்டு கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி மேயராக அறிவிக்கப்பட்டார். 21 வயதில் இச்சாதனையைப் படைத்த இவர், இந்தியாவின் இளம் மேயர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர்.
திறமையும் ஆர்வமும் இருந்தால் இளைய தலைமுறையும் அரசியலிலும் பொதுப் பணியிலும் ஈடுபடலாம் என்பதற்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் ஆர்யா.
குழந்தை இசை மேதை: ‘குழந்தை இசை மேதை’ என உலக இசைக் கலைஞர்களால் அழைக்கப்படும் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரத்துக்கு இப்போது வயது 18. ஆனால், ஆறு ஆண்டுகளுக்கு முன்பே தனது அசாத்திய இசைத் திறமையை உலகுக்குக் காட்டியவர்.
2019இல் அமெரிக்கத் தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘தி வேர்ல்டு பெஸ்ட்’ நிகழ்ச்சியில், கண்களைக் கட்டிக்கொண்டு பியானோ வாசித்து முதல் பரிசை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். எந்நேரமும் இசையைச் சுவாசிக்கும் லிடியன் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தக் காத்திருக்கிறார்.
மணிகண்டனின் மாயாஜாலம்: கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு எனத் திரைத் துறையின் முக்கியப் பக்கங்களில் திறம்படப் பணியாற்றி வருகிறார் மணிகண்டன். தேர்ந்த மிமிக்ரி கலைஞராகக் கலைத் துறையில் பணியாற்றத் தொடங்கி ‘சில்லு கருப்பட்டி’, ‘ஜெய்பீம்’, ‘குட் நைட்’ போன்ற திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
கோலிவுட்டில் நிலவும் பன்முகக் கலைஞர்களுக்கான வெற்றிடத்தை நிரப்பக் காத்திருக்கும் இவர், இன்னும் பல உயரங்களை எட்டிப்பிடிக்கக்கூடும்.
முதல் திருநங்கை: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி, இந்தியாவின் முதல் திருநங்கை காவல்துறை உதவி ஆய்வாளர். பல தடைகளைத் தாண்டி, சட்டப் போராட்டம் நடத்தி இந்த வெற்றியைப் பெற்றார்.
2017 முதல் காவல் துறையில் பணியாற்றி வரும் அவர், தொடர்ந்து பால்புதுமையினர் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். பால்புதுமையினருக்கும் குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை வேண்டுமென நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
முதல் இணைய எழுத்து: மதுரையைச் சேர்ந்த 34 வயது ராஜா ராமன் தமிழின் முதல் இணைய எழுத்துப் பிழைதிருத்தியான ‘வாணி’ மென்பொருளை உருவாக்கியவர். இணையமும் தமிழும் சார்ந்த பணிகளில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
‘நீச்சல்காரன்’ என்கிற புனை பெயரில் அறியப்படும் இவர், ‘பேச்சி’ மொழிபெயர்ப்புக் கருவி, ‘சுளகு' எழுத்தாய்வுக் கருவி, ‘ஓவன்’ ஒருங்குறி மாற்றி உள்ளிட்ட மென்பொருள்களையும் உருவாக்கியுள்ளார்.
கள நாயகி: தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர், சுயாதீன பத்திரிகையாளர் கிரீஷ்மா குதர். களத்துக்குச் சென்று செய்திகளைச் சேகரித்து உண்மையை உலகுக்குச் சொல்ல முனைபவர். இந்தியாவை உலுக்கிய மணிப்பூர் கலவரத்தை நேரில் சென்று ஆவணப்படுத்தி வருகிறார். பாகுபாடற்ற எழுத்தால் இதழியல் துறையில் அசத்தி வரும் இளம் பெண் பத்திரிகையாளராக மிளிர்கிறார் கிரீஷ்மா.
பறக்கும் பெண்: மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவாணி சதுர்வேதி, சிறு வயது முதலே பறப்பதில் ஆர்வம் கொண்டவர். இதனால் கல்லூரி படிக்கும்போதே ‘பிளையிங் கிளப்’பில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டார்.
பின்னர் 2018இல் பாவானா காந்த், மோகனா சிங் ஆகிய இரண்டு பெண்களோடு சேர்ந்து இந்திய விமானப் படையில் பயிற்சி எடுத்துக் கொண்டார். இதில் அவானி மட்டும் தனித்து நின்று போர் விமானத்தை இயக்கிய முதல் இந்தியப் பெண் என்கிற சாதனைக்குச் சொந்தக்காரர்.
சுற்றுச்சூழல் காவலர்: திருவண்ணா மலையைச் சேர்ந்த பன்னி ரண்டாம் வகுப்பு மாணவி வினிஷா, பேச்சாளர், கண்டுபிடிப்பாளர், சூழலியல் ஆர்வலர் எனப் பன்முகம் கொண்டவர்.
12 வயதில் இவர் கண்டுபிடித்த சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத இஸ்திரிப் பெட்டி சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து சூழலியல் பாதுகாப்பு தொடர்பாகத் தீவிரமாக இயங்கி வரும் வினிஷா, எதிர்காலத்தின் நம்பிக்கை!
- தொகுப்பு: ராகா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT