Published : 12 Sep 2023 05:50 PM
Last Updated : 12 Sep 2023 05:50 PM
மதுரை: நாடகக்கலை மூலம் மாணவர் களுக்கு நற்பண்புகளை கற்றுத் தரும் அறப்பணியில் ஈடுபட்டுள்ளார் மதுரையைச் சேர்ந்த பன்முக கலைஞர் மதுரை எஸ்.எஸ்.காலனி கம்பர் தெருவைச் சேர்ந்தவர் அ.செல்வம் (43). நாடகம், கதை சொல்லல், பொம்மலாட்டம், வீதி நாடகம், கும்மிப்பாட்டு, பாடல் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை இலவசமாக கற்றுத் தரும் பணி யில் ஈடுபட்டு வருகிறார். இவற்றை கற்றுத் தருவதோடு பங்கேற்கும் மாணவர்களையும் படைப்புகளை உருவாக்கும் திறனாளர்களாக உருவாக்கி வரு கிறார்.
இதற்காக தமிழகம் முழு வதும் அரசு பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களை சந்தித்து வருகிறார். நல்ல பண்புள்ள சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் இப்பணியை அவர் மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து செல்வம் கூறியதாவது: தமிழ்நாடு இறையியல் கல்லூரியிலுள்ள பாலர் பள்ளியில் படித்தேன். ஜெர்மனி நாட்டினரின் உதவி யுடன்தான் படித்தேன். முகம் தெரியாதவர்கள் நமக்கு உதவு வதுபோல் நாமும் மற்றவர் களுக்கு உதவி புரிய வேண்டும் என முடிவெடுத்தேன். பாலர் பள்ளியில் படிக்கும்போது தியாப்பிலஸ் அப்பாவு என்பவரிடமிருந்து பாரம்பரிய கலைகளை கற்றேன். அவரிடமிருந்து 13 வயதில் கற்கத் தொடங்கி 28 வயது வரை 15 ஆண்டுகளாக பயணித்தேன்.
மாணவர்களுக்கு ‘நாடகக் கலை வழி அறம்’ என்பதன் மூலம் நல்ல பண்பு களை கற்றுக் கொடுக்க முடிவெடுத்தேன். இதுவரை தமிழகம் முழுவதும் 400 பள்ளி களுக்குச் சென்று 15 ஆயிரம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளேன். அதன் அடுத்த கட்டமாக கடந்த 2 ஆண்டுகளாக தினம் ஒரு அரசு பள்ளிக்குச் சென்று இலவசமாக கற்றுத் தருகிறேன். தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஆர்வமாக கலைகளை கற்கின்றனர்.
கதை சொல்லுதல், பொம்மலாட்டம், நாடகம், பாடல், கழிவிலிருந்து கலைப் பொருட்கள், எளியவகை ஓவியம் குறித்து கற்றுத் தருகிறேன். சில தொண்டு நிறுவனங்களோடும் இணைந்து செயல்படுகிறேன்.
வருமானத்துக்காக நாகமலை யிலுள்ள தனியார் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறேன். ஆன்லைன் மூலம் வெளிநாடுகளிலுள்ள தமிழ் குழந்தைகளுக்கும் குறைந்த கட்டணத்தில் கற்றுத் தருகிறேன். இதற்கு மனைவி ஆனந்தி, மகள் மொழிமதியும் உறுதுணையாக உள்ளனர் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT