Published : 07 Sep 2023 03:42 PM
Last Updated : 07 Sep 2023 03:42 PM
திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்கு வீடுகளில் வைத்து வழிபட சிறிய விநாயகர் சிலை முதல் ஆறு அடி உயர பெரிய சிலைகள் வரை தயாரிக்கும் பணி, திண்டுக்கல் அருகே நொச்சி ஓடைப்பட்டியில் உள்ள கலைக்கூடத்தில் நடைபெற்று வருகிறது.
நொச்சி ஓடைப்பட்டியில் ஆண்டுதோறும் களி மண்ணால் செய்யப்படும் சுடுபொம்மைகள் தயாரிக்கும் தொழில் நடந்து வருகிறது. இதில் கலைத்திறமை கொண்ட கைவினைஞர்கள் பல்வேறு விதமான பொம்மைகள், கார்த்திகை தீப விளக்குகள், கொலு பொம்மைகள் தயாரிப்பது என சீசனுக்கேற்ப பொருட் களை தயாரித்து விற்கின்றனர்.
தற்போது விநாயகர் சதுர்த்தி விழா நெருங்குவதால் அதிக ஆர்டர் கள் கிடைத்துள்ளன. இதையடுத்து வீடுகளில் வைத்து வழிபட சிறிய விநாயகர் சிலை முதல் பல்வேறு அமைப்புகள் சார்பில், பொது இடங்களில் வைத்து வழிபட ஆறடி உயர சிலைகள் வரை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சதுர்த்தி விழாவுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் இறுதிக்கட்டப் பணியாக வண்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து விநாயகர் சிலைகளை தயாரிக்கும் கருணாகரன் கூறியதாவது: கரோனா காரணமாக விநாயகர் சிலைகளுக்கு அதிக ஆர்டர் இன்றி சில ஆண்டுகளாக தயாரிப்பை நிறுத்தி இருந்தோம். கடந்த ஆண்டு குறைந்த அளவில்தான் ஆர்டர் கிடைத்தது. இந்த ஆண்டு அதிக ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
அரசு ஆணைப்படி காகிதக்கூழ், கிழங்கு மாவு ஆகியவற்றைக் கொண்டு சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் சிலைகளை தயாரித் துள்ளோம். வீடுகளில் வைத்து வழிபட சிறிய சிலைகள் ரூ.20 முதல் அளவைப் பொருத்து விற்பனை செய்கிறோம். இதேபோல, பொது இடங்களில் வைத்து வழிபட அளவைப் பொருத்து அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரை விலையில் சிலைகள் தயாரித்துள்ளோம்.
திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி மதுரை, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, தேனி என சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் விநாயகர் சிலைகளை ஆர்வத்தோடு வாங்கிச் செல்கின்றனர். கரோனாவுக்கு பிறகு தொழில் பழையபடி முழு வீச்சில் நடக்கிறது என்றே சொல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT