Published : 06 Sep 2023 08:24 PM
Last Updated : 06 Sep 2023 08:24 PM

கீழடி போல் தொல்லியல் எச்சங்கள் நிறைந்த சூலப்புரம்: தமிழக அரசு பாதுகாக்க ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை: கீழடியைப் போல் தொல்லியல் எச்சங்கள் நிறைந்த பகுதியாக சூலப்புரம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகள் திகழ்கின்றன. இங்கு அறியாமையாலும், ஆதாய நோக்கோடும் ‘தங்க வேட்டைக்காக’ சிலர் முதுமக்கள் தாழிகளை தோண்டி சிதைத்து வருகின்றனர். தனிநபர்களால் அழிக்கப்படும் வரலாற்றுச் சின்னங்களை தமிழக அரசின் தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என தமிழார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் எழுமலை அருகேயுள்ள சூலப்புரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. இவ்வூர் பல நூறு ஆண்டுகளுக்கு முன் மருதமரங்கள் நிறைந்து காணப்பட்டதால் மருலூத்து என அழைக்கப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த பழியர் இன மக்களின் குலதெய்வம் முருகனுக்கு, மழையின் மேற்குப்புற அடிவாரத்தில் வேலப்பர் கோயில் உள்ளது.

இங்கு கீழடி அகழ்வாய்வில் கிடைத்ததுபோன்று குறியீடுகளுடன் மண்பானைகள், கருப்பு சிவப்பு நிற மண்பானைகள், ஈமத்தாழிகள், கல்திட்டைகள், கல்பதுக்கைகள், கல்வட்டங்கள், குத்துக்கல், பளிங்கு மணிகள், கல்மணிகள், உள்பட பல்வேறு எச்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. மனிதகுல வரலாற்றின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றான நெருப்புக்கு அடுத்தப்படியாக இரும்பாகும். இங்கு இரும்பினாலான அம்பு முனைகள், ஈட்டி முனைகள், கோடாரி, வாள், கத்தி, ஆணிகள் கிடைத்துள்ளது.

இதுகுறித்து மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மீ.மருதுபாண்டியன் கூறியதாவது: “தமிழக அரசின் தொல்லியல்துறையின் மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சி மூலம் தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு கி.மு.2172-ம் ஆண்டு என்பது தெரியவருகிறது. அதேபோல், சூலப்புரத்தில் இரும்பு பொருட்களும், சங்க இலக்கியப் பாடல்களில் குறிப்பிட்டுள்ள பொருட்கள் இங்கு ஏராளமாக கிடைத்துள்ளன.

அதேபோல், கொடுமணல் அகழாய்வில் வெண்கலத்தாலான புலி உருவம் கிடைத்ததுபோல், இங்கும் வெண்கலத்தாலான 3 வளையல்கள் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மீன்வடிவ தாங்கி கிடைத்ததுபோல், இங்கும் இருபுறமும் மீன் உருவமுடைய தாங்கி கிடைத்துள்ளது.

பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் கல் மணிகள் அணிகலனாகவும், பணப் பரிமாற்றத்திற்காகவும் பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. அதேபோல், சூலப்புரத்திலும் கார்னீலியன் மணிகள் பெருமளவில் கிடைத்துள்ளன. இது சால்சிடானி (Chalcedony) என்ற அரிய மணிக்கல்லின் ஒரு வகையைச் சேர்ந்தது. இங்குள்ள ஈமத்தாழிகளிலிலிருந்து 942 மணிகள், பளிங்கு கற்களால் செய்யப்பெற்ற மணிகள் 344 கிடைத்துள்ளது.தமிழகத்திலே கொடுமணல், பொருந்தல் அகழாய்வு போல் இவ்வகை மணிகள் கிடைத்துள்ளன. அவை, வட்டம், பீப்பாய், இருகூம்பு, கோளம் வடிவங்களில் கிடைத்துள்ளது.

மேலும் கல் மணிகளின்மேல் வெள்ளை நிற அலங்காரக்கோடுகள், புள்ளிகளை காணமுடிகிறது. கீழடி அகழாய்வில் கிடைத்த பளிங்குகல்லால் ஆன எடைக்கற்கள் போல் இங்கும் கிடைத்துள்ளன. மேலும், இங்கு மனித எலும்புகள் உடைந்த நிலையிலும், 10 மனிதப் பற்கள் கிடைத்துள்ளன. கிடைத்த தொல்பொருட்கள் மூலம் கி.மு.1000-க்கும் கி.பி.4க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். ஈமத்தாழிகளில் தங்க நகைகள் இருக்கலாம் எனக்கருதும் நபர்கள் குழிகள் தோண்டி முதுமக்கள் தாழிகளை சிதைத்து வருகின்றனர். இதனை பாதுகாப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம்” என்றார்.

இதுகுறித்து எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளியல் ஆசிரியர் போ.முருகேசன் கூறியதாவது: “நான் சிறுவனாக இருக்கும்போது சூலப்புரம் மலையடிவாரப் பகுதியில் நிறைய தொல்லியல் எச்சங்களை பார்த்துள்ளேன். தற்போது கீழடியைப்போல் ஏராளமான தொல்பொருட்களும் இங்கு கிடைத்துள்ளன.

குறியீடுடன் கூடிய பானை ஓடுகள், கருப்பு சிவப்பு நிற மண்பானைகள், இரும்பு பொருட்கள், செம்பு, வெண்கலத்தாலான பொருட்கள் என மேற்பரப்பில் கிடைத்த தொல்பொருட்களை கண்டெடுத்து அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளோம். இங்கு தமிழக அரசின் தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சி செய்தால் கீழடி, கொந்தகையைப்போல் பழந்தமிழர்களின் நகர, நாகரிகத்திற்கான சான்றுகள் கிடைக்கும்” என்றார்.

இங்கு முறையாக அகழாய்வு செய்யாமலேயே நூற்றுக்கணக்கான தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்று அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், தனி நபர்களின் ‘தங்க வேட்டை’ ஆசைக்காக முதுமக்கள் தாழிகள் குழி தோண்டி சிதைக்கப்படுகிறது. பழந்தமிழர்களின் வரலாற்று ஆவணங்களாக திகழும் சூலப்புரம் தொல்லியல் மேட்டை தமிழக அரசும், தொல்லியல்துறையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்துறைக்குட்பட்ட தொல்லியல் மேடுகள் தனி நபர்களால் சிதைக்கப்படுவதற்குமுன் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x