Last Updated : 06 Sep, 2023 05:06 PM

 

Published : 06 Sep 2023 05:06 PM
Last Updated : 06 Sep 2023 05:06 PM

திருப்பத்தூர் அருகே 17-ம் நூற்றாண்டின் நிலக்கொடை கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கநாதீஸ்வரர் கோயிலுக்கான நிலக்கொடைக் கல்வெட்டு ஒன்று கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேராசிரியர் ஆ.பிரபு, கூறியது: "திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவணப்படுத்தப்படாத எண்ணற்ற புதிய வரலாற்றுத் தடயங்களைத் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறை ஆய்வு குழுவினர் கள ஆய்வுகள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கோயம்புத்தூர் ‘யாக்கை’ அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் ஆய்வு குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர் ராதா கிருஷ்ணன் அளித்த தகவலின் அடிப்படையில் திருப்பத்தூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். திருப்பத்தூர் மாவட்டத்தின் முற்கால வரலாறுகளை ஆராயும் எங்கள் பணியில் தற்போது "யாக்கை" அறக்கட்டளை குழுவினரும் இணைந்துள்ளனர். அவர்களோடு மேற்கொண்ட கள ஆய்வில் இந்தக் தகல்வெட்டு கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக ஆராயந்தபோது, இக்கல்வெட்டானது ஐந்தரை அடி நீளமும் மூனறரை அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் 17 வரிகள் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டுச் செய்திகள் தமிழும், கிரந்தமும் சில இடங்களில் வடமொழியும் கலந்து எழுதப்பட்டுள்ளன. திறந்த வெளியில் பல்லாண்டுகளாக பாதுகாப்பற்ற சூழலில் கிடந்ததால் கல்வெட்டு உராய்ந்து எழுத்துகள் மங்கிய நிலையில் காணப்படுகின்றன. எனவே, கல்வெட்டினை மாவுப் பூச்சு வாயிலாகப் படி எடுக்கப்பட்டு குமரவேல், சுதாகர் உள்ளிட்ட குழுவினரால் படிக்கப்பட்டது.

கல்வெட்டின் பல இடங்களில் எழுத்துகள் படிக்க இயலாத நிலையில், எந்த மன்னனின் ஆட்சிக் காலத்தில் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லை. இருந்தாலும் எழுத்துகளின் அமைப்பைக் கருதி, இந்த கல்வெட்டானது 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை அறியமுடிகிறது.

கல்வெட்டுச் செய்தியானது, எயில்நாட்டில் உள்ள “திருப்பேற்றூர் சீமையில் உள்ள சோமனாபுரம்” என்ற இடத்தில் உள்ள 20 குழி நிலத்தினை மாடப் பள்ளியில் உள்ள அங்கநாதீஸ்வரர் கோயிலுக்குக் கொடையாகக் (தானமாக) கொடுத்த செய்தியினை விவரிக்கின்றது. மேலும், அந்தக் கொடையினைப் பாதுகாத்து வருபவருக்குக் கிடைக்கும் புண்ணியத் தினையும் இக்கல்வெட்டானது எடுத்துக் கூறுகின்றது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பத்தூர் என்ற பெயரானது “திருப்பேற்றூர்” என்று வழங்கப்பட்டு வந்த மிக முக்கியமான வரலாற்றுச் செய்தியை இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது. மேலும் “எயில் நாட்டு திருப்பேற்றூர் சீமை” என்று உள்ளதால் மிக முக்கியமான தலைமைபெற்ற பேரூராக இந்நகரம் விளங்கியதையும் அறிய முடிகின்றது. அக்காலத்தில் திருப்பத்தூர் அருகிலுள்ள சோமலாபுரம் ஒரு காலத்தில் “சோமனாபுரம்” என அழைக்கப்பட்ட செய்தியும் இங்கு பதிவாகியுள்ளது. இத்தகைய வரலாற்று ஆவணம் கேட்பாரற்று பாதுகாப்பற்ற சூழலில் கிடப்பது கவலையளிப்பதாக உள்ளது.

இதுபோன்ற வரலாற்றுத் தடயங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்திட “திருப்பத்தூர் மாவட்டத் தொன்மைப் பாதுகாப்பு மையம்” என்ற பெயரில் வரலாற்று ஆர்வலர்களை ஒன்றிணைத்து அமைப்பு ஒன்றும் தொடங்கி பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறையினர் இக்கல்வெட்டினை மீட்டுப் பாதுகாக்கவும் ஆவணப்படுத்த முன்வர வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x