Published : 05 Sep 2023 03:21 PM
Last Updated : 05 Sep 2023 03:21 PM
ஒட்டன்சத்திரம்: ஆங்கிலேயருடனான போரில் வீர மரணத்தை தழுவிய பாளையக்கார மன்னன் விருப்பாட்சி கோபால் நாயக்கர் தூக்கிலிடப்பட்ட 222-ம் ஆண்டு நினைவு இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
1529-ம் ஆண்டு மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர் தன் ஆட்சிப் பகுதியை 72 பாளை யங்களாகப் பிரித்தார். அதில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாட்சி பாளை யமும் ஒன்று. இதன் முதல் பாளை யக்காரராக கோபால் நாயக்கர் பொறுப்பேற்றார். இவருக்கு பாப்பம்மாள் என்ற மனைவியும், முத்துவேல் நாயக்கர், பொன்னப்ப நாயக்கர் என இரு மகன்கள் இருந்தனர்.
தீபகற்ப கூட்டணி: வரி வசூலிக்கும் உரிமைகளை நிஜாம் மன்னரிடம் பெற்றிருந்த ஆற்காடு நவாப்பிடமிருந்து வரி நிர்ணயம், வசூலிக்கும் உரி மையை ஆங்கிலேயரே பெற்றனர். அடாவடியாக அதிகமான வரியை விதித்ததால் தங்கள் மண்ணையும் மக்களையும் காக்க பல பாளையக் காரர்கள் ஆங்கிலேயர் களை எதிர்த்து போராடினர்.
இதில் பூலித்தேவன், தீரன் சின்னமலை, வீரன் அழகுமுத்துக் கோன், கட்டபொம்மன் போன்ற பாளையக்காரர்கள் வரி கொடுக்க மறுத்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்தனர். திண்டுக்கல் பாளையக்காரர்களை ஒருங்கிணைத்த கோபால் நாயக்கர், 1799-ல் ஆங்கிலேயர்களை எதிர்க்க கோவை பகுதி காளிஹான், மலபார் பகுதி கேரள வர்மா, கன்னட, மராட்டிய பகுதி துண்டாஜிவாக் என அமைத்த புரட்சிக் கூட்டணி களத்தில் போர் க்கோலம் பூண்டது.
வீரபாண்டிய கட்ட பொம்மனை தூக்கிலிட்டு கொன்ற பிறகு, பாஞ்சாலங்குறிச்சி சிறைக்குள் இருந்த கட்ட பொம்மனின் தம்பி ஊமைத்து ரையை அதிரடி போர் நடத்தி மீட்டார் கோபால் நாயக்கர். விருப்பாட்சிக்கு வந்த ஊமைத்துரைக்கு விருதும், 6,000 படை வீரர்களையும் தந்து மீண்டும் பாஞ்சாலங்குறிச்சிக்கே மன் னராக்கினார் கோபால் நாயக்கர்.
கோபால் நாயக்கரின் புரட்சிப் படையினர் மறைந்து வாழ்ந்தனர். கும்பினிப் படையினரை எதிர்த்து நடந்த கொரில்லா தாக்குதலுக்கு கோபால் நாயக்கர்தான் காரணம் என்பதை உளவாளிகள் மூலம் அறிந்த அப்போதைய திண்டுக்கல் ஆட்சியர் பி.ஹர்டீஸ் அவர் மீது குற்றம் சுமத்தி சம்மன் அனுப்பினார். ஆனால், கோபால் நாயக்கர் அதனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. 1799 நவம்பரில் 2-வது சம்மன் அனுப்பி அவரை சரணடையுமாறு மிரட்டியது ஆங்கிலேய அரசு.
விருப்பாட்சி முற்றுகை: 1800 அக்.12-ம் தேதி கோபால் நாயக்கரை ஒடுக்க கர்னல் இன்னிஸ் என்பவர் விருப்பாட்சியை முற்றுகையிட்டு கோபால் நாயக்கரின் அரண்மனையை தரைமட்ட மாக் கினார். அப்போது, கோபால் நாயக்கர் தப்பிவிட்டார். அவருடைய மனைவி, மகன்களை கைது செய்து திண்டுக்கல்லில் சிறை வைத்தனர். அதன் பிறகும் கோபால் நாயக்கரை கண்பிடிக்க முடியாததால் அவரது தலைக்கு விலை நிர்ணயித்தனர். பணத்துக்கு ஆசைப்பட்ட ஒருவர் கோபால் நாயக்கரை காட்டிக் கொடுத்தார்.
வீரமரணம்: 1801 மே 4-ம் தேதி அவரை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தனர் வெள்ளையர்கள். அதே ஆண்டு செப்.5-ம் தேதி திண்டுக்கல் கோபால சமுத்திரம் என்று அழைக்கப்படும் குளத்தின் அருகே புளியமரத்தில் கோபால் நாயக்கரை தூக்கிலிட்டனர். அதனால் இந்தக் குளம் கோபால சமுத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
சாகும் போது கூட கொஞ்சமும் கலங்காமல் தன் மரணத்தைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட மாவீரன் கோபால் நாயக்கர் என்று கூறப் படுகிறது. அவருடன் பிடிபட்ட சோமன்துரை, பெரியபட்டி நாகம நாயக்கர், தும்மச்சி நாயக்கர், சோமநாத சேர்வை ஆகியோரும் தூக்கிலிடப் பட்டனர்.
அவரது நினைவாக ரூ.69 லட்சம் செலவில் ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சியில் மணி மண்டபம் கட்ட 2010-ம் ஆண்டு அடிக்கல் நாட்டி 2013 பிப்.20-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள கோபால்நாயக்கரின் முழு உருவச்சிலை, வாழ்க்கை வரலாறு, ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்கள், புகைப்படங்கள், குறிப்புகள் அவரின் தியாகத்தை வெளிப்படுத்துகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT