Published : 04 Sep 2023 04:03 PM
Last Updated : 04 Sep 2023 04:03 PM
விருதுநகர்: சிறு தானியங்களில் மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரித்து டெல்லி வரை அனுப்பி வருகிறார் விருதுநகரை சேர்ந்த விவசாயி ஒருவர். இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சிறுதானிய உற்பத்தியில் விருதுநகர் மாவட்டம் முதன்மையானதாக விளங்குகிறது. கம்பு, சோளம், தினை, கேழ்வரகு, குதிரை வாலி போன்றவை இங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
விருதுநகர் அருகே உள்ள தாதம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (51) தனது நிலத்தில் இயற்கை விவசாயம் மூலம் சிறுதானியங்களை உற்பத்தி செய்வதோடு, அதில் பல்வேறு விதமான மதிப்புக் கூட்டு பொருட்களை நவீன இயந்திரங்களை பயன்படுத்தி தயாரித்து வருகிறார்.
சிறுதானியங்கள் மூலம் முளைகட்டி தயாரிக்கப்படும் சத்து மாவுடன் பருப்பு வகைகள், மூலிகைகள், ஸ்பைருலினா போன்றவை கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு, மதிப்புக் கூட்டப்பட்ட ரொட்டி வகைகள், தனி அவல், அவல் மிக்சர், சிறுதானிய கூழ், சிறுதானிய லட்டு போன்றவற்றை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறார்.
சாமை சைவ பிரியாணி, வரகு புளியோதரை, பனி வரகு, எலுமிச்சை சாதம், தினை தேங்காய் சாதம், குதிரைவாலி தயிர் சாதம் போன்றவைகள் தயாரித்து தனியார் மற்றும் அரசு விழாக்களில் வழங்கி வருகிறார். இதற்காக டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் தாதம்பட்டி சிவக்குமாருக்கு சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்கும் புத்தாக்க விருதை வழங்கியது.
இதுகுறித்து சிவக்குமார் கூறியதாவது: சிறுதானியங்களை இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில், மதிப்புக் கூட்டப்பட்ட பலவகை குக்கீஸ்கள், நொறுக்கு தீனிகள், வெற்றிலை ஜூஸ் போன்றவற்றை தயாரித்து வழங்குகிறேன். இதற்கு நல்ல வரவேற்பும் உள்ளது.
கம்பு, வரகு, சாமை, தினை, குதிரை வாலி, கேழ்வரகு குக்கீஸ்களும், தோசை, பூரி, சப்பாத்தி சிறுதானிய மாவுகளும், வரகு, சாமை, குதிரைவாலி, தினை வெண் பொங்கல் மிக்ஸ், சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவையும் தயாரித்து வருகிறோம். தொடர்ந்து, பல்வேறு மகளிர் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் அவை மூலம் டெல்லி வரை சிறுதானிய மதிப்புக் கூட்டுப் பொருட்களை அனுப்பி வருவதாகத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT