Published : 03 Sep 2023 09:02 AM
Last Updated : 03 Sep 2023 09:02 AM

செப்.16, 17, 18 தேதிகளில் சென்னையில் உணவுத் திருவிழா

சென்னை: உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சென்னையில் வரும் செப்.16, 17, 18 ஆகிய தேதிகளில் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது.

இதில் தமிழகம், வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டு உணவு வகைகள் மலிவு விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் உணவுத் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக அத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் பெ.சதீஷ் குமார் கூறியது: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து செப்.16, 17, 18 ஆகிய தேதிகளில் சென்னை தீவுத் திடலில் ‘சிங்கார சென்னையில் சிறுதானியம் மற்றும் உணவுத் திருவிழா' நடைபெற உள்ளது.

இதில் 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டு என்பதால், பாரம்பரிய சிறுதானிய உணவுகளுக்காக 30 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மண் மணம் கமழும் சைவ, அசைவ உணவு வகைகள், தென்னிந்திய மற்றும் வட இந்திய உணவுகள், தாய்லாந்து, மலேசிய உணவு வகைகளும் இங்கு கிடைக்கும். இத்திருவிழா ஒவ்வொரு நாளும் காலை 10 முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.

சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், நுழைவுக் கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.10 வசூலிக்கப்படும். கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இங்கு விற்கப்படும் உணவுகளின் விலை, வழக்கமாக அவர்களது நிறுவனங்களில் விற்கும் விலையை விட மலிவாக இருக்க வேண்டும் என அரங்கம் அமைப்போரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

மீன் வளத்துறை சார்பில் மீன் உணவுகளை, ஏழை எளிய மக்களும் வாங்கி உண்ணும் அளவுக்கு மலிவு விலையில் வழங்கமுயற்சி மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x