Published : 02 Sep 2023 05:52 PM
Last Updated : 02 Sep 2023 05:52 PM

மதுரையில் உருவாகி வரும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: ரசிகர்களின் ஏக்கத்தை போக்கிய வேலம்மாள் குழுமம்

வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைய உள்ள கிரிக்கெட் மைதான மாதிரி படம்.

மதுரை: மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச தரத்தில் உயர்தர வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் பணிகள் நிறைவுபெற்று இம் மைதானம் பயன்பாட்டுக்கு வரும்போது, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளை யாட்டரங்குக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானமாகவும், மதுரைக்கு மற்றுமொரு சர்வதேச அடையாளமாகவும் இது அமைய உள்ளது.

நம் நாட்டில் கிரிக்கெட் போட்டி களுக்கான முக்கியத்துவத்தையும், ரசிகர்களின் ஆர்வத்தையும் தனியாக விவரிக்கத் தேவையில்லை. உலகிலேயே அதிக சர்வதேச கிரிக்கெட் மைதானங்களைக் கொண்ட நாடாகவும், உலகின் மிகப்பெரும் கிரிக்கெட் மைதானத்தை (அகமதா பாத்) கொண்ட நாடாகவும் இந்தியா திகழ்கிறது. பல்வேறு சிறிய மாநிலங்கள்கூட ஒன்றுக்கு மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியங்களை கொண்டுள்ளன.

ஆனால் பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானம் மட்டுமே சர்வதேச போட்டிகளுக்கு ஏற்ற வசதிகளுடன் உள்ளது. அதிலும் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களை பார்த்தால் நெல்லையில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன மைதானத்தில் மட்டுமே “டர்ஃப் பிட்ச்” எனப்படும் புல்தரை ஆடுகளம் இருந்தது.

2-வது பெரிய மைதானம்: சமீபகாலத்தில்தான் தேனி, நத்தம், கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் புல்தரை ஆடுகளங்களுடன் கூடிய கிரிக்கெட் மைதானங் கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பல்வேறு வரலாற்று பெருமைகளுக்கு சொந்தக்காரர் களான மதுரைவாசிகளுக்கு மட்டும் கிரிக்கெட் மைதானம் என்பது நீண்டகால கனவாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து மதுரை வேலம்மாள் குழுமம் தங்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. சேப்பாக்கத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் மேற்கூரை வசதியுடன் கூடிய கேலரிகள் கொண்ட பெரிய அரங்கமாக இது அமைக்கப்பட்டு வருவது இதன் சிறப்பம்சமாகும்.

வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் மைதானம்
அமைக்கும் பணி. படங்கள்: நா.தங்கரத் தினம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆடுகள பராமரிப்பாளரான கார்த்திகேயனின் நேரடி மேற்பார்வையில் மைதானம் உருவாகி வருகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது:

மதுரையில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும், மதுரை சுற்றுவட்டாரத்திலிருந்து பல கிரிக்கெட் வீரர்கள் உருவாக வேண்டும் என்ற வேலம்மாள் குழும தலைவர் முத்துராமலிங்கத்தின் விருப்பத் தினாலேயே இப்பணிகள் தொடங்கியுள்ளது. மற்றுமொரு மைதானமாக மட்டுமல்லாமல், அனைத்து உயர்தர வசதிகளுடன் இம் மைதானம் உருவாக்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்: மையத்திலிருந்து 75 மீட்டர் தூர பவுண்டரி எல்லைகளுடனும், மொத்தம் 9 ஆடுகளங்களுடனும் (பிட்ச்) அமைகிறது. மைதானத்தின் வடக்கு பகுதியில் வீரர்களுக்கான பெவிலிய னுடன் சேர்த்து 800 பேர் அமரக்கூடிய குளிர்சாதன வசதியுடனான விவிஐபி கேலரிகள் அமையும். தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் பார்வையாளர்களுக்கான நிழற்கூரையுடன் கூடிய நிரந்தர கேலரிகள் கட்டப்படுகிறது.

முதற்கட்டமாக 7,000 பேர் அமரும் வசதியுடன் மைதானம் அமைக்கப்படுகிறது. அடுத்தடுத்த கட்டங்களில் 20,000 பேர் அமரும் வகையில் மேம்படுத்தப்படும். மழையால் போட்டிகள் தடைபடாமலிருக்கும் வகையில், மழை நின்ற அரை மணி நேரத்தில் மைதானம் தயாராகும் வகையில் வடிகால் வசதிகள் நவீன முறையில் அமைக்கப்படுகிறது. மின்னொளி வசதியுடன் 10 பயிற்சி ஆடுகளங்கள் மற்றும் 60 பேர் வரை தங்கி பயிற்சி பெறுவதற்கான வசதிகளும் இடம்பெறுகின்றன.

வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் உலகத் தரத்தில் அமைவதற்காக டிஎன்சிஏ, எம்டிசிஏ நிர்வாகிகள் சிறந்த ஒத்துழைப்பையும், ஆலோசனை களையும் வழங்கி வருகின்றனர்.

மதுரை விமான நிலையத்திலிருந்து 10 நிமிடங்களில் மைதானத்தை அடைய முடியும் என்பது நாட்டில் எங்கும் இல்லாத தனிச்சிறப்பு. இங்கு போட்டிகள் நடக்கத் தொடங்கும்போது விமான நிலைய வளர்ச்சிக்கும் மதுரையின் பொருளாதார, சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

டிஎன்பிஎல், ரஞ்சி உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளைக் காணவே அண்டை மாவட்டங்களுக்கு படையெடுத்துவரும் மதுரை கிரிக்கெட் ரசிகர்கள், இனி சர்வதேச வீரர் களையும் மதுரையிலேயே காணும் காலம் விரைவில் நனவாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x