Published : 31 Aug 2023 04:05 PM
Last Updated : 31 Aug 2023 04:05 PM
ராமேசுவரம்: நாட்டின் நான்கு திசைகளிலும் ஹனுமன் சிலை அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 3-வது சிலை 108 அடி உயரத்தில் அமைக்கும் பணிகள் ராமேசுவரத்தில் நடைபெற்று வருகின்றன.
நாட்டின் நான்கு திசைகளில் 108 அடி உயரத்தில் ஹனுமன் சிலை அமைக்கும் திட்டம் 2008-ம் ஆண்டு ஹெச்சிநந்தா அறக்கட்டளையின் அறங்காவலரும், அனுமன் பக்தருமான நிகில் நந்தா (49) என்பவரால் தொடங்கப்பட்டது. இமாச்சல பிரதேச மாநிலம் ஷிம்லா நகரின் புறநகர் பகுதியான ஜக்குமலையில் தான் முதல் சிலை அமைக்கும் பணி 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2010-ல் திறக்கப்பட்டது.
இரண்டாவது சிலை ரூ 10 கோடி மதிப்பில் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 17.04.2022 ஹனுமன் ஜெயந்தி அன்று குஜராத்தின் மோர்பி என்ற இடத்தில் உள்ள பரம் பூஜ்ய பாபுகேஷ் வானந்த் ஆசிரமத்தில் 108 அடி உயர ஹனுமன் சிலையை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி, ''வலிமை, தைரியம், கட்டுப்பாடு ஆகியவற்றின் உருவகமாக ஹனுமன் திகழ்கிறார். நாட்டின் நான்கு திசைகளிலும், ஹனுமன் சிலை அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டாவது சிலை தற்போது குஜராத்தின் மோர்பியில் அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது சிலை அமைக்கும் பணி ராமேவரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.4-வது சிலை மேற்கு வங்கத்தில் அமைக்கப்படும், என தெரிவித்தார்.
ராமாயணத்தில் முக்கிய இடம் வகிப்பது ராமேசுவரம். இங்கிருந்துதான் அனுமன் இலங்கைக்குச் சென்றார் என்பதால் ராமேசு வரத்தில் அனுமனுக்கு பல கோயில்கள் உள்ளன. இந்தியர்கள் அனைவருக்குமே ராமேசுவரம் மிகவும் புனிதமான இடம் என்பதாலும், அனுமனின் மகிமையை அனைவரும் அறிந்து கொள்ள மேலும் ஒரு சிறப்பம்சமாக பிரம்மாண்ட அனுமன் சிலையை நிறுவ ஹெச்சிநந்தா அறக்கட்டளை ராமேசுவரத்தை தேர்வு செய்தது.
இதற்காக 23.02.2022 அன்று ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரை அருகே 108 அடி உயர சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தற்போது 16 அடி உயரத்தில் அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இலங்கையை ஹனுமான் பார்ப்பது போல இந்த 108 அடி உயர சிலை அமைக்கப்பட உள்ளது.
உப்புக் காற்றால் பாதிக்காத வண்ணம் ரசாயனம் கலந்து இதன் சிலை கட்டும் பணிகள் நடைபெற உள்ளன. ஆறு மாதத்துக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT