Published : 27 Aug 2023 05:44 PM
Last Updated : 27 Aug 2023 05:44 PM
கோவை: நூலகம் ஒரு புதிய உலகுக்கு வாசிப்பாளர்களை அழைத்துச் செல்லும். வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு நூலகத்தின் பங்களிப்பு முக்கியம். ஸ்மார்ட் போன், லேப்டாப், கம்ப்யூட்டர், தொலைக்காட்சி என பல்வேறு பொழுதுபோக்கு சாதனங்களில் நாம் மூழ்கினாலும், நூலகத்தின் பயன்பாடு குறையவில்லை.
அந்த வகையில், சிறைச்சாலைகளில் கைதிகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதிலும் நூலகம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள், குண்டர் தடுப்புப் பிரிவு கைதிகள், உயர் பாதுகாப்புப் பிரிவு கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
காலை 6 மணிக்கு கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை அறையின் கதவு திறக்கப்படும். மாலை 6 மணிக்கு மூடப்படும். இடைப்பட்ட நேரத்தில் தண்டனைக் கைதிகள் தொழிற்கூடங்களில் பணியாற்றுகின்றனர். அது தவிர, சிறை வளாகத்தில் உள்ள நூலகத்தில் தங்களுக்கு பிடித்த நூல்களைத் தேடிப் பிடித்து படித்து வருகின்றனர்.
கைதிகளுக்கு தலா 50 நூல்கள்: கைதிகளுக்கும், நூலகத்துக்கும் இடையேஉள்ள தொடர்பு குறித்து கோவை மத்தியசிறையின் கல்விக்கூட தலைமை ஆசிரியர் சக்திவேல் கூறியதாவது: கோவை மத்திய சிறைச்சாலையில் பிரம்மாண்டமான அறையில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 12 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் 7 ஆயிரம் புத்தகங்கள் கூண்டுக்குள் வானம்திட்டத்தின் மூலம் தானமாக பெறப்பட்டதாகும். ஆன்மிகம், யோகா, மருத்துவம், கவிதை, கட்டுரை, நாவல்கள், வரலாற்று நாவல்கள்,அரசியல் தலைவர்களின் நாவல்கள், முக்கிய அரசுத்துறை அதிகாரிகள் எழுதிய நூல்கள் ஆகியவை இங்கு வைக்கப்பட்டுள்ளன. தவிர, மாவட்ட மைய நூலகத்தில் இருந்தும் மாதந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் சுழற்சி முறையில் இங்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்படுகின்றன.
சிறை நூலகம் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். கைதிகள் பெயர் விவரங்களை பதிவு செய்து, அதிகபட்சம் 2 நூல்களை எடுத்துச்சென்று தங்கள் அறையில் வைத்து படிக்கலாம். ஒரு நாளைக்கு சராசரியாக 70 கைதிகளும், வார இறுதி நாட்களில் 150-க்கும் மேற்பட்ட கைதிகளும் நூலகத்துக்கு வந்து செல்கின்றனர்.
விசாரணைக் கைதிகள், குண்டர் தடுப்புப் பிரிவு, உயர் பாதுகாப்புப் பிரிவு கைதிகள் ஆகியோருக்கும் தினமும் சுழற்சி முறையில் தலா 50புத்தகங்கள் அளிக்கப்படும். மாவட்ட மைய நூலகத்தில் அமர்ந்து வாசிப்பது போல, சிறைச்சாலையில் உள்ள நூலகத்திலும்கைதிகள் அமர்ந்து படிக்கின்றனர். பெண்கள்சிறையிலும் நூலகம் உள்ளது. இங்கு 1,500புத்தகங்கள் உள்ளன.
வாசிப்பில் மூழ்கும் கைதிகள்: திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள மாவட்ட மற்றும் கிளைச்சிறைகளிலும் நூலக வசதிகள் உள்ளன. இங்கும் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. கைதிகளின் முக்கிய பொழுதுபோக்கு நூல்கள் தான். சிறை அறையில் மாலையில் அடைக்கப்பட்ட பின்னர் நூல்களை வாசிப்பதிலேயே கைதிகள் மூழ்கிவிடுகின்றனர்.
கைதிகளை தவறான எண்ணங்களில் இருந்து மீட்டெடுக்கவும், திருந்தி சகஜமான வாழ்க்கைக்கு திரும்பவும் நூல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கைதிகளின் வாசிப்புத் திறனை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
நூல்களை தானமாக வழங்கலாம்: சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் கூறும்போது, ‘‘தமிழக சிறைத்துறை டிஜிபியின் உத்தரவின் பேரில், ‘கூண்டுக்குள் வானம்’ என்ற புத்தக தானம் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புத்தகக்கண்காட்சிகள் நடைபெறும் இடங்களில் சிறைத்துறை நிர்வாகத்தின் சார்பில் அரங்கு அமைத்து ஒரு பெட்டி வைக்கப்படும்.
சிறைக்கைதிகள் படிக்க புத்தகம் தானமாக அளிக்க விரும்பும் பொதுமக்கள் இந்த பெட்டியில் புத்தகத்தை போடலாம். அதன்படி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடந்த புத்தகக் கண்காட்சி களின்போது, அரங்கு அமைத்து சிறைத்துறை நிர்வாகத்தின் சார்பில் புத்தகம் பெறப்பட்டது.
சமீபத்தில் கோவையில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் தானமாக பெறப்பட்டுள்ளன. தவிர, சிறை பஜாரிலும் புத்தக தானம் பெறும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தினமும் ஏராளமான எண்ணிக்கையில் புத்தகங்கள் வருகின்றன’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT