Published : 24 Aug 2023 05:08 PM
Last Updated : 24 Aug 2023 05:08 PM

தலைமுறையாக பலன் தரும் நெட்டை தென்னை மரங்கள்: புவிசார் குறியீடு கிடைக்குமா?

அய்யம்பாளையம் பகுதிகளில் 100 அடிக்கு மேல் வளர்ந்து நிற்கும் நெட்டை தென்னை மரங்கள்.

திண்டுக்கல்: அய்யம்பாளையம் பகுதியில் நூற்றாண்டுகள் கடந்தும் நாட்டுரக நெட்டை தென்னை ரகங்கள் தலைமுறை தலைமுறையாக பலன் அளித்து வருகின்றன.

கொடைக்கானல் கீழ் மலையடிவாரப் பகுதியில் அய்யம்பாளையம் உள்ளது. இதன் அருகிலுள்ள கிராமங்களான ஆத்தூர், சித்தையன்கோட்டை, பட்டிவீரன்பட்டி, கோம்பை, கன்னிவாடி, தர்மத்துப்பட்டி மற்றும் கெங்குவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் நாட்டுரக நெட்டை தென்னை மரங்கள் உள்ளன.

இந்த மரங்கள் பல தலைமுறைகள் கடந்து பலன் தருகின்றன. இவை நட்டுவைத்த 5-வது ஆண்டில் பலன் தரத் தொடங்குகிறது. ஆண்டுக்கு ஆண்டு மரத்தின் உயரம் அதிகரித்து 100 அடி முதல் 115 அடி வரை வளர்கிறது. ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 150 காய்கள் வரை காய்க்கின்றன. பாரம்பரிய நாட்டு ரகம் என்பதால் குட்டை தென்னை, ஹைபிரிட் ரக தென்னை மரங்களைப் போல் நோய் தாக்குதலுக்கு ஆளாவதில்லை.

இதுகுறித்து 3 தலைமுறையாக நெட்டை தென்னை மரங்களை பராமரித்து வரும் விவசாயி ரசூல்மொகைதீன் கூறியதாவது: அய்யம்பாளையம் நெட்டை தென்னை மரங்கள் நாட்டுமர வகையைச் சார்ந்தவை. எனது தந்தை சிறுவயதாக இருந்தபோதே பலன்தரத் தொடங்கியது. இந்த மரங்கள் இன்று 3-வது தலைமுறையாக காய்த்து வருகிறது. அய்யம்பாளையம் பகுதிகளில்தான் இவ்வகை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.

தற்போது வெளியூர்களுக்கு இம்மரக்கன்றுகளை வாங்கிச் செல்கின்றனர். ஒருமுறை தென்னையை நடவு செய்தால் போதும். பராமரிப்பு அதிகம் தேவை இல்லை. சமீபத்தில் தென்னை மரங்களில் மாவுப் பூச்சி தாக்குதல் ஏற்பட்டபோதும், நாட்டுரக தென்னை மரத்துக்கு பாதிப்பில்லை.

100 அடிக்கு மேல் வளரும் இந்த வகை மரங்களில் முன்பு ஆட்களே ஏறி காய்களைப் பறித்தனர். தற்போது இயந்திரங்கள் வந்து விட்டதால் பறிப்பது எளிதாக உள்ளது. ஒரு கன்று ரூ.100-க்கு விற்பனை செய்கிறோம்.

எனது தோட்டத்தில் 100 ஆண்டுகள் கடந்து நிற்கும் நெட்டை தென்னை மரங்களை வேளாண் விஞ்ஞானிகள், தென்னை வளர்ச்சி வாரிய வல்லுநர் குழு ஆய்வு செய்து அவற்றின் வயதைக் கண்டறிய வேண்டும். இதன்மூலம் அய்யம்பாளையம் நெட்டை தென்னைக்கு புவிசார் குறியீடு பெற ஏதுவாக இருக்கும்.

இதன்மூலம், பாரம்பரிய நாட்டுரக நெட்டை தென்னை மரங்கள் காப்பாற்றப்படுவதுடன் திண்டுக்கல் மாவட்டத்துக்கும் பெருமை சேரும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x