Published : 19 Aug 2023 02:04 PM
Last Updated : 19 Aug 2023 02:04 PM
உதகை: சுதந்திர தினத்தில் முக்கியப் பங்கு வகிப்பது தேசியக்கொடி. அப்போது இருந்த தேசியக் கொடி பல்வேறு பரிமாணங்களுக்கு பிறகு, தற்போதைய வடிவமைப்பை அடைந்துள்ளது. இதன் ஒரு பரிமாணம், நூற்றாண்டுக்கு முன்னர் நீலகிரி மாவட்டத்தில் உருவானது.
இது இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அன்னிபெசன்ட் அம்மையார், 1917-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ‘பிர்லா ஹவுஸ்’-ல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். வீட்டு காவலில் இருந்த அன்னிபெசன்ட் அம்மையார், இந்தியாவுக்கான தேசியக்கொடியை வடிவமைத்து, அந்த வீட்டு வளாகத்தில் ஏற்றினார்.
இந்த வரலாற்று நிகழ்வுகள் குறித்து நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் டி.வேணுகோபால் கூறும்போது, "அன்னிபெசன்ட் அம்மையார் இயற்கையிலேயே புரட்சி மனப்பான்மை கொண்டவர். ஆதலால், ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக காமன் வீல் என்ற வாரப் பத்திரிகையை 1913-ம் ஆண்டில் ஆரம்பித்தார். 1914-ம் ஆண்டில் சென்னையில் இருந்து நியூ இந்தியா என்ற பெயரில் நாளிதழை தொடங்கி நடத்தினார். இதன்மூலமாக, அவர் அரசியலில் இழுக்கப்பட்டார்.
1907-ம் ஆண்டில் ஹோம் ரூல் (சுயாட்சி) இயக்கத்தை தொடங்கினார். நாடு முழுவதிலும் அதன் கிளைகள் உருவாகின. தனது தலைமை பதவி காலத்தில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விடுதலை இயக்கத்தை வலுப்பெறச் செய்தார். அன்னிபெசன்டின் சுற்றுப் பயணங்களுக்கும், பொதுக் கூட்டங்களுக்கும் ஆங்கிலேய அரசு தடை விதித்தது. 1917 ஜூன் 15-ம் நாள் காங்கிரஸ் தலைவர்களுடன் அன்னிபெசன்டையும் கைது செய்தது ஆங்கிலேய அரசு.
சென்னையில் கைது செய்யப்பட்ட அவர், உதகையிலுள்ள பிர்லா ஹவுஸில், 1917 ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அப்போது, அன்னிபெசன்ட் அம்மையாருடன் வாடியா என்பவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். அந்த காலக் கட்டத்தில் அவர் இந்தியாவுக்கான தேசியக் கொடியை உருவாக்கி, பிர்லா ஹவுஸ் வளாகத்தில் ஏற்றினார்.
அதை நினைவுகூரும் வகையில், அந்த நிகழ்வை சித்தரித்து கல்வெட்டு வைத்து, பிர்லா ஹவுஸ் உரிமையாளர்கள் பாதுகாத்து வருகின்றனர். இன்றும் இந்த வீட்டுக்கு வரலாற்று ஆய்வாளர்கள் வந்து கல்வெட்டை காணும்போது, வரலாற்றை திரும்பி பார்த்து செல்கின்றனர்’ என்றார். வரலாற்று சிறப்புமிக்க இந்த வீட்டை, அதன் உரிமையாளர்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருவதாக வீட்டின் மேலாளர் பாபுலால் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறும்போது, "உதகையிலுள்ள பிர்லா ஹவுஸ், பிரெட் முரே பார்லேட் என்பவருக்கு சொந்தமானது. ஸ்டாக்பிரிட்ஜ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 1947-ம் ஆண்டு சர் ஹார்ஹோல்டு நஜ்ஜெண்ட் கோலம் தம்பதிக்கு விற்கப்பட்டது. 1962-ம் ஆண்டு கோலமின் மனைவி இங்கிலாந்தில் இறந்துவிட, இந்த வீடு 1964-ம் ஆண்டு ஏலம் விடப்பட்டது.
இதை குவாலியர் குழுமத்தினர் ரூ.40 ஆயிரத்துக்கு வாங்கி, பிர்லா ஹவுஸ் என பெயரிட்டனர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த வீட்டை, பிர்லா குடும்பத்தினர் பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர். ஆண்டுதோறும் இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில், வீட்டு வளாகத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்த வீடு மாற்றிமைக்கப்படாமல் அப்படியே பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வீட்டில் பிர்லா குழுமத்தின் குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் தங்கி செல்கின்றனர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT