Last Updated : 18 Aug, 2023 02:53 PM

 

Published : 18 Aug 2023 02:53 PM
Last Updated : 18 Aug 2023 02:53 PM

திருப்பத்தூர் அருகே விஜய நகர காலத்து நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே விஜயநகர காலத்து நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் மோகன் காந்தி தலைமையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பஞ்சனம்பட்டி கிராமம் அருகே நடத்திய கள ஆய்வில் விஜயநகர காலத்து நடுகல் ஒன்று ஆய்வுக்குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து பேராசிரியர் மோகன் காந்தி கூறியது: ''திருப்பத்தூர் - சேலம் பிரதான சாலையில் பஞ்சனம்பட்டி கிராமம் அருகே உள்ள பாப்பாத்தி அம்மன் வட்டத்தில் விஜய நகரக் காலத்து நடுகல் ஒன்றை நாங்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நடுகல்லானது 2.7 அடி உயரமும், 2.7 அடி அகலமும் கொண்ட அழகிய பலகைக் கல்லில் 3 உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.மேலும் நடுவில் வீரனது தோற்றம் காணப்படுகிறது. வீரனின் தோற்றமானது மேல் வாரி முடிக்கப்பட்டக் கொண்டை, காதுகளில் பெரிய காதணிகள், கழுத்தில் 4 அடுக்கு ஆபரணங்கள், தோளில் அம்புக் கூடு, இடையில் குறுவாள், இடது கையில் நீண்ட வாளை அந்த வீரன் தாங்கியுள்ளார்.

மேலும் கையில் வில் ஒன்றைத் தரையில் ஊன்றியபடி அவர் நிற்கிறார். கைகளில் கடகங்கள், கால்களில் வீரக் கழல்கள் என வீரம் செறிந்த தோற்றத்துடன் நடுகல் வீரன் காட்சித் தருகிறார். வீரனின் இருபுறமும் இரண்டு மங்கையர் நிற்கின்றனர்.

வலது பக்கம் நிற்கும் மங்கை தனது வலது கையைத் தொங்க விட்டப்படியும், இடது கையில் கள் குடம் ஒன்றை ஏந்தியப்படியும் இடது பக்கம் வாரி முடிக்கப்பட்ட கொண்டையுடன் அவர் காட்சித் தருகிறார். வீரனின் இடது பக்கம் நிற்கும் பெண் உருவம் வலது கைவிரல்களை நீட்டியபடியும், இடது கையானது இடுப்பின் மேல் வைக்கப்பட்ட கோலத்திலும், இடது பக்கம் வாரி முடிக்கப்பட்டக் கொண்டையோடும் காட்சித் தருகிறார்.

எனவே விஜய நகரக் காலத்தில் திருப்பத்தூர் பகுதியில் நடந்த போரில் வீர மறவன் ஒருவன் வீர மரணம் அடைந்துள்ளார். அவரது இரு மனைவியரும் உயிரிழந்த வீரனோடு தாங்களும் உயிரை விட்டு உடன் கட்டை ஏறியுள்ளதை இந்த நடுகல் வெளிப்படுத்துகிறது. இதை தொல்லியல் துறை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x