Last Updated : 14 Aug, 2023 02:19 PM

1  

Published : 14 Aug 2023 02:19 PM
Last Updated : 14 Aug 2023 02:19 PM

கோவை மத்திய சிறையில் கல்வியறிவு பெற்ற 13,000 கைதிகள்!

கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள கல்விக்கூடத்தில் பாடங்களை கற்கும் தண்டனைக் கைதிகள்.

கோவை: சிறைச்சாலைகள் என்பது சித்ரவதைக் கூடங்கள் அல்ல. அது கைதிகள் தங்கள் தவறை உணர்ந்து, மனம் வருந்தி, திருந்தி புதிய மனிதராக சிறையில் இருந்து வெளி வருவதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் இடம். அதற்கேற்றார் போல சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு கல்வி கற்பித்தல், வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துதல், வேலை வாய்ப்புக்கு வழிவகுக்கும் வகையில் தொழில்களை கற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் உள்ள பழமையான சிறைகளில் முதன்மையானது கோவை மத்திய சிறை. இங்கு விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள், குண்டர் தடுப்புப் பிரிவு கைதிகள், உயர் பாதுகாப்புப் பிரிவு கைதிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். மத்திய சிறை வளாகத்தின் ஒரு பகுதியில் பெண்கள் சிறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

கையெழுத்து கூட போடத் தெரியாமல், அடிப்படை கல்வியறிவு கூட இல்லாமல் விசாரணைக் கைதியாகவோ, தண்டனைக் கைதியாகவோ உள்ளே வரும் கைதிகளுக்கு கல்வியை போதித்து, அவர்கள் கல்வியறிவு பெற்றவர்களாக வெளியே அனுப்பும் பணியை முன்னெடுத்து வருகின்றனர் கோவை மத்திய சிறைத்துறை நிர்வாகத்தினர்.

இது குறித்து மத்திய சிறை வளாகத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேல் கூறியதாவது: கோவை மத்திய சிறை வளாகத்தில் கல்விக்கூடம் உள்ளது. இங்கு ஒரு தலைமை ஆசிரியர் , 4 ஆசிரியர்கள் பணிபுரிகிறோம். அடிப்படைக் கல்வி, 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு ஆகிய பள்ளிக் கல்வி படிப்புகளையும், எம்.ஏ, எம்.பி.ஏ என்ற உயர் கல்வி படிப்புகளையும், 6 மாத சான்றிதழ் படிப்புகளையும், ஒரு வருட டிப்ளமோ படிப்புகளையும் கைதிகளுக்கு கற்றுத் தருகிறோம்.

பள்ளிப்படிப்புகளுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஒத்துழைப்பு அளிக்கிறது. உயர்கல்வி படிப்புகளுக்கு பாரதியாா் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம், இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் ஆகியவை ஒத்துழைப்பு அளிக்கின்றன. சிறைக்கு வரும் கைதிகளில் கையெழுத்து கூட போடத் தெரியாமல் உள்ள கைதிகள் யார், பள்ளிக்கல்வியை இடை நின்ற கைதிகள் யார், தொடர்ந்து கல்வி கற்க ஆர்வம் உள்ள கைதிகள் யார் என வகைப்படுத்துவோம்.

ஆர்வத்தின் அடிப்படையில் கைதிகள் வருவர். அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியை மேற்கொள்வோம். பள்ளிக்கூடம் பக்கமே சென்றிருக்காத கைதிகளுக்கு அடிப்படைக் கல்வியை கற்பிப்போம். 2 வரி நோட், வரி நோட்டுகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து, நூற்றுக்குநூறு, சிறப்பு எழுத்தறிவுத் திட்டம், வயது வந்தோர் கல்வித் திட்டம், கற்கும் பாரதம் ஆகிய திட்டங்களின் அடிப்படையில் அவர்களுக்கு எழுத்தறிவு பயிற்சி அளித்து அதை எழுதி பார்க்க வைப்போம். இவ்வாறு தொடர்ச்சியாக செய்யும் போது அவர்களுக்கு எழுதி படிக்க தெரிந்து விடுகிறது.

பின்னர், அவர்களுக்கு தொடர் ஆர்வம் இருந்தால், பாடங்களை கற்பித்து 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வைப்போம். அதில் தேர்ச்சி பெற்றால் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத வைப்போம், உயர்கல்விக்கு அழைத்துச் செல்வோம். ஒவ்வோர் ஆண்டும் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் எழுதுகின்றனர்.

சிறையில் உள்ள பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும். சிறை வளாகத்தில் உள்ள கல்விக் கூடத்தில் சராசரியாக 400 பேர் படித்து வருகின்றனர். தினமும் சராசரியாக 70 பேர் வகுப்புகளுக்கு வந்து செல்கின்றனர். தொழிற்கூடங்களில் வேலைக்கு செல்லும் தண்டனைக் கைதிகளில் படிக்க ஆர்வம் உள்ளவர்கள், குறிப்பிட்ட நேரம் பணி செய்த பின்னர், வகுப்புகளுக்கு வருவர்.

ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை கற்றுக் கொள்வர். சிறை அறையில் மின் விளக்கு இருக்கும். இரவு நேரத்தில் கூட சிறை அறையில் அமர்ந்து கைதிகள் படிப்பர். சிறை வளாகத்தில் உள்ள நூலகமும் இதற்கு கைகொடுக்கிறது. கடந்த 2000-வது ஆண்டிலிருந்து தற்போது வரை ஏறத்தாழ 13 ஆயிரம் கைதிகள் கோவை மத்தியசிறையின் கல்விக்கூடத்தினால் கல்வியறிவு பெற்று பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் கூறும் போது,‘‘சிறை வளாகத்தில் கைதிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கைதிகளுக்கு கல்வியறிவு அளிக்கப்படுவது முக்கியமானதாக உள்ளது. கைதிகள் கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் அரசிடம் பெற்று கைதிகளுக்கு அளிக்கப்படுகின்றன. சிறை வளாகத்தில் உள்ள நூலகமும் கைதிகளுக்கு கைகொடுக்கிறது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x