Published : 14 Aug 2023 04:00 AM
Last Updated : 14 Aug 2023 04:00 AM

கோவை வஉசி மைதானம் சாலையில் உருவாகிறது ‘உணவக வீதி’

கோவை: கோவை வஉசி மைதானம் சாலையில், உணவக வீதி (ஃபுட் ஸ்ட்ரீட்) அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் ஏற்படுத்த உள்ளனர்.

கோவை மாநகரில் உள்ள முக்கிய பொழுது போக்கு மையங்களில், வஉசி பூங்கா பகுதி முக்கியமானதாகும். இப்பகுதியில் வஉசி மைதானம், சிறுவர் பூங்கா, தாவரவியல் பூங்கா, உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு கட்டமைப்புகள் உள்ளன. தினமும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இப்பகுதியில் சாலையோரங்களில் ஏராளமான உணவகங்கள், காளான் விற்பனைக் கடைகள் உள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில், தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான இடத்தை தேர்வு செய்து, கருத்துரு சமர்ப்பிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வஉசி மைதானம் சாலை தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, உணவக வீதி அமைய உள்ள வஉசி மைதானம் சாலையை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘வஉசி மைதானம் சாலையில் ரூ.1 கோடி மதிப்பில் உணவக வீதிக்கான அனைத்து கட்டமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படும். பாதசாரிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ அமைக்கப்பட உள்ளது. இங்கு உணவு விற்பனைக் கடைகள் முறைப்படுத்தப்படும். உணவுக் கழிவுகள், குப்பை கழிவுகள் முறையாக சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு வரும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்,’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x